zondag 23 november 2014

மைத்திரியின் தேரோட்டும் அந்த பார்த்த சாரதி யார்?- சந்திரிக்காவே பொருத்தமானவர்!

வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட மாட்டாது: ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 08:50.32 AM GMT ]
நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பை தோற்கடிப்பதில்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க கூடிய நிலைமை உருவாகி இருந்தாலும் அதனை வெற்றிபெற செய்து திட்டத்தில வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவெற்றுமாறு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தி ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பல நிவாரணங்களை வழங்குவதாக கூறப்பட்டாலும் அவற்றை வழங்க கூடிய நிலைமையில் அரசாங்கம் இ்லை. இதனால் அரசாங்கம் பெரும் நெருக்கடியை சந்திக்கும்.
நிவாரணங்களை வழங்க முடியாத நிலைமையில் அரசாங்கம் இருப்பதை வெளிப்படுத்தி விட்டு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனி அணியாக அரசாங்கத்தில் இருந்து விலகுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டிய நிலைமையை ஏற்படுத்தும்.
அப்படியான நிலைமை ஏற்பட்டால் எதிர்க்கட்சிகளின் பொது வேலைத்திட்டத்தை செயற்படுத்த சாதகமற்ற நிலைமை ஏற்படும்.
இதனடிப்படையில், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் செவ்வாய் கிழமை அரசாங்கத்தில் இருந்து வெளியேறவுள்ளது.
ஏற்கனவே நான்கு அமைச்சரவை அந்தஸ்துளள அமைச்சர் ஒரு பிரதியமைச்சர், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஒன்பது பேர் அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனிடையே எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.
இதனபடி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடன் கூடிய புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவார் எனவும் அதில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என வழங்கப்பட்ட வாக்குறுதியை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்ற முடியும் எனவும் மன்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgw5.html
மைத்திரியின் தேரோட்டும் அந்த பார்த்த சாரதி யார்?- சந்திரிக்காவே பொருத்தமானவர்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 09:40.56 AM GMT ] [ வலம்புரி ]
2015ம் ஆண்டின் ஜனனம் மிகப் பெரிய தேர்தல் போராட்டத்தின் உச்சக் கட்டத்தில் நடக்கப் போகிறது.
புதுவருடம் பிறந்து 8வது நாள் ஜனாதிபதித் தேர்தல். தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்பது குறித்து கருத்துக் கூறுவது நமக்கு அபத்தம் என்பதால் அதனை அப்படியே விட்டுவிடலாம்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதென்ற முடிவு ஏகமனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னோடு போட்டியிடும் அந்த வீரன் யார் அதை அறிய ஆவலாக உள்ளேன் என்று கர்ச்சித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­விற்கு தன்னோடு போட்டியிடுபவர் மைத்திரிபால சிறிசேன என்று அறிந்த போது அதிர்ச்சி பலமாக இருந்திருக்கும்.
நம் நாட்டில் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தல் குருசேத்திர போருக்கு ஈடானது.
மகிந்த ராஜபக்ச­ அமைத்துள்ள பலமான சக்கர வியூகத்தை மைத்திரிபால சிறிசேன உடைத்தெறிவது மிகவும் அவசியமானதாக இருக்கும்.
மகிந்தவின் சக்கர வியூகத்தை உடைப்பதற்கு மைத்திரிபால சிறிசேன தவறினால் பிச்சாடன வடிவம் தாங்கி சிறையில் தட்டேந்தும் பரிதாப நிலை மைத்திரிக்கு ஏற்படும் என்பதை நம்மால் எழுதிக் கொடுக்க முடியும்.
அதேநேரம் ஜனாதிபதி மகிந்தவின் வியூகத்தை உடைப்பதென்பது சாதாரண விடயம் என்று எதிர்க்கட்சியினர் யாரேனும் கருதினால் குருசேத்திரத்தில் அபிமன்யுவுக்கு நடந்ததே மைத்திரிபால சிறிசேனவுக்கும் நடக்கும்.
எனவே மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவின் வியூகத்தை உடைப்பதாயின் அருச்சுனனுக்கு வாய்த்த பார்த்தசாரதி போல மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொருத்தமான, பலமான சூழ்ச்சி தெரிந்த தேர்ச்சாரதி தேவை.
அப்படியான ஒரு சாரதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவாகவே இருக்க முடியும்.
இரண்டு பிரதமர்களின் மகள். இரண்டு தடவை ஜனாதிபதியாக இருந்தவர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவின் ஆட்சியில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தவர்.
காலச் சூழல் சாதகமாக வரும் வரை காத்திருந்த அவர் மைத்திரிபாலவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் கொண்டு வந்ததிலிருந்து அவரின் இராஜதந்திரம் வெற்றியளித்துள்ளதெனலாம்.
எனவே மைத்திரி என்ற அருச்சுனன் தேரிலிருக்க, பார்த்தசாரதியின் இடத்தில் சந்திரிகா அம்மையார் வீற்றிருந்து தேரோடப் போகின்றார்.
தேர்தல் களத்தில் கடுமையான போர் நடக்கும் என்பதோடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ தன்னிடமிருக்கக் கூடிய பிரம்மாஸ்திரத்தை ஏவவும் தயங்கமாட்டார்.
இச் சந்தர்ப்பத்தில் தேரை அமிழ்த்தி பிரம்மாஸ்திரத்தில் இருந்து மைத்திரிபாலவைக் காப்பாற்றும் தந்திரத்தை சந்திரிகா செய்தாக வேண்டும். இல்லையேல் பிரம்மாஸ்திரம் தேர்ச் சாரதியையும் பதம் பார்த்து விடும்.
இது தவிர ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, சரத் என் சில்வா, கரு ஜெயசூரிய, சஜித் பிரேமதாஸ, சிராணி பண்டாரநாயக்க என்ற கஜரததுரக படைகளுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் இருக்கக் கூடிய குறுநில மன்னர்களின் படைபல உதவிகளையும் பெற்றுக் கொள்வது சத்திரிகாவின் கடமையாக இருக்கும்.
சில வேளைகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவின் பக்கத்தில் கர்ணன் இருப்பானாயின் அவனிடம் சென்று வரம் கேட்கின்ற கிருஷ்ண புத்தியை நிச்சயம் சந்திரிகா செய்தாக வேண்டும்.
தேரிலிருக்கும் மைத்திரிபாலவை விட,  தேரோட்டும் சந்திரிகாவே கடுமையான தேர்தல் வியூகங்களை அமைக்க வேண்டியிருக்கும்.
ஏனெனில் தேர்தல் போரில் மைத்திரிபாலவை நிறுத்தியவர் அவர் என்பதால்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgw7.html

Geen opmerkingen:

Een reactie posten