zondag 23 november 2014

புலிகளின் ஐந்தாம் கட்டப் போர் ஆரம்பம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கித் தீர்ப்பளித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011ம் ஆண்டு லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்;தது.
இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கு கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த விசாரணையின் போது 2009ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை என்றும் தங்களது மக்களுக்காக வன்முறையற்ற வழிகளில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராட விரும்புகின்றனர் என்றும் வாதிட்டார்.
மேலும் விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இலங்கையில் இனப்படுகொலை என்று கூறுமளவிற்கான ஒரு ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகத்தான் நியாயமான போராட்டத்தை விடுதலைப் புலிகள் நடத்தினர் என்றும் புலிகளின் வழக்கறிஞர் கோப் வாதிட்டார்.
இதன் விளைவாக கடந்த மாதம், டச்சு நாட்டு நீதிமன்றம், தமிழீழ விடுதலைப் புலிகள் 'பயங்கரவாத அமைப்பு" அல்ல எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் 2011ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழங்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடை சட்டவிரோதம் எனத் தீர்ப்பளித்தது.
இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்ட ரீதியாக அங்கீகாரமாகக் கருதப்படுகின்றது. விசேடமாக இது ஒரு சர்வதேச அங்கீகாரமாகவே பார்க்கப்படுகின்றது.
இந்தியாவும் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே போல இந்தியாவும் புலிகள் மிதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று இந்தியாவில் வலுப்பெற்று வருகின்றது.
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என, லச்கம்பார்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிகக்த் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2001ம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயோர்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில், பல அமைப்புக்கள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்டது.
இதனை தமக்கு சாதகமாகக் கொண்ட, இலங்கை - இந்தியா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள், தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளையும் 'பயங்கரவாத அமைப்பு" என முத்திரை குத்தப்பட்டது.
அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட எந்த அயல் நாடுகளிலும், புலிகள் ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்ற போதிலும், இலங்கை மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் அழுத்தங்களுக்கு ஏற்ப, அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு, இத்தடை மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் உச்சமாக, 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்ற இனப்படுப்கொலையை, 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று சொல்லப்படுகின்றது. அதற்கு இந்தத் தடை உதவியாக இருந்தது.
இந்நிலையில்தான் போர் முடிந்ததாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் முழுவதுமாக அழித்தொழிக்கப்பட்டு விட்டதாகவும் இலங்கை அரசே அறிவித்த பிறகும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வெண்டுமென உலக நாடுகளில் பரவி வாழும் தமிழீழத் தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் பயனாக டச்சு நாட்டு நீதிமன்றம், தமிழீழ விடுதலைப் புலிகள் 'பயங்கரவாத அமைப்பு" அல்ல எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் 2011ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடை சட்டவிரோதம் எனத் தீர்ப்பளித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கூறும் காரணங்கள் இந்தியாவிற்கும் பொருந்தும். தமிழ் நாட்டையும் சேர்த்து விடுதலைப் போராட்டம் நடாத்துவதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் எப்பொழுதும் சொன்னது கிடையாது.
தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் தமிழக அமைப்புக்களும், அவ்வாறு சொன்னது கிடையாது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்ப்பைப் பின்பற்றி, இந்தியாவும் விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டுமென்று ம.திமு.க. பொதுச் செயலாளர். வழக்கறிஞர் வை.கோ தீப்பாயத்தில் வாதாடியுள்ளார்.
மற்றும் சிறந்த வாதங்களையும் முன்வைத்து தீப்பாயத்தில் தகுந்த ஆதாரங்களையும் ஆவணங்களாகவும் சமர்ப்பித்துள்ளார்.வழக்கின் தீர்ப்பு தற்போது பின்போடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தடை நீக்கம்
ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை இரத்து செய்து லக்ஸம்பேர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லக்ஸம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நீதிமன்றத்தால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில் சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இத்தீர்ப்பு தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை கொடுத்த மாவீரர்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்டுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாகத் திறமையாக வழக்காடிய மூன்று வழக்கறிஞர்கள் வக்டோர் கோப், தாமர வர்மா மற்றும் ஏ. மாரிக் வன் இக் ஆகியோர்களுக்கு எதிராக இயக்கப்படும் குறிப்பிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பொருத்தமற்றவை எனவும் அவற்றைத ரத்துச் செய்யவும் ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படுவதில் கையாளப்பட்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்தள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011ல் லக்சம்பார்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
இலங்கை அச்சம்
விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் 2006ம் ஆண்டுத் தடை நீக்கமானது சிங்கள இனவாதிகள் மத்தியில் பெரும்தாக்கத்தையும் அரசாங்கத்திற்கு அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பினர் நாடுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் பயணம் செய்வது பற்றிய அறிவிப்பு ஒன்றை 'Until further Notice"  என்ற சொற்பதத்துடன் 2004ம் ஆண்டு வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆதன் பின்பு 2006ம் ஆண்டு புலிகளை முற்றாக தடை செய்திருந்தது. அந்த அறிவிப்புப் பற்றி பலவிதமான கருத்துக்கள் கூறப்பட்டன. இலங்கை அரசின் முயற்சிகளுக்கு கிடைத்துள்ள வெற்றி என்ற ரீதியில் அது பார்க்கப்பட்டது.
ஆனாலும் முன்னாள் வெளிநாட்டமைச்சர் காலம் சென்ற கதிர்காமரின் அயராத முயற்சியின் பயனகாகக் கிடைத்த வெற்றி என்பதுதான் பொருத்தமானது.
ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று பிரகடனம் செய்ய வேண்டும் என்பதை கதிர்காமர் கனடா அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளில் மன்றாடி வந்தார்.
இலங்கையில் தமிழர் பிரச்சினை என்பது நந்திக்கடலுடன் நான்காவது கட்டத்தில் வந்து நிற்கின்றது என்று சொல்லலாம்.இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் புலிகள் மீதான தடை நீக்கம் என்பது துப்பாக்கிகள் ஒலிக்காத, பீரங்கிகள் முழுங்காத யுத்தமின்றி சத்தமின்றி இராஜதந்திர யுக்தியுடன் ஐந்தாம் கட்ட ஈழப் போராக வந்து நிற்கின்றது.
புலிகளின் யுத்தம் என்பது
ஆரம்ப காலங்களில் தமிழர் பிரச்சினை இலங்கைக்கு உள்ளே அரசியல் ரீதியாக அணுகப்பட்டது அது முதலாவது கட்டம். இரண்டாவது கட்டம் ஆயுதப் போராட்டம் மற்றும் மரபுவழி யுத்தம். மூன்றாவது கட்டம் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடையே நடைபெற்ற உளவு யுத்தம்.  நான்காவது கட்டம்தான் எட்டப்பர்கள் மூலமாக இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பில் உருவான நந்திக் கடல் வரையும் சீனா, பாகிஸ்தான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா. உட்பட சில வல்லரசு நாடுகளின் இசை மற்றும் நடிப்பில் செய்யப்பட்ட தமிழர் கொலைக்களமாகும்.
இப்போது இதோ வந்துவிட்டது. ஐந்தாம் கட்ட ஈழப் போர் சர்வதேச இராஜதந்திரம்.
முதல் நான்கு கட்டங்களின் ஆடுகளங்கள் இலங்கைக்கு உள்ளேயே இருந்தன. இப்போது ஐந்தாம் கட்டம் சர்வதேச அளவில் இலங்கைக்கு வெளியே தொடங்கியிருக்கின்றது.
புலிகளின் ஐரோப்பியத் தடை நீக்கத்துடன். அதன் முதலாவது சிக்னல்தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கத்துடன் ஆடுகளம் ஆரம்பமாகி விட்டது.
ஐந்தாவது கட்டமாக நாங்கள் கூறும் இந்த சர்வதேச இராஜதந்திரம் இருக்கிறதே இது ஒரு அலாதியான விஷயம். இதன் செயற்பாடுகள் வித்தியாசமானவை. 
ஆட்ட விதிகள் வித்தியாசமானவை. வெளிப் பார்வைக்குத் தெரிவதைவிட, திரைமறைவில் நடப்பவைகள் மிகமிக அதிகமானவை.
இலங்கை அரசைப் பொறுத்தவரை சமீப காலங்களில் தமிழர் பிரச்சினையில் அதீத கவனம் செலுத்துவது சர்வதேச இராஜதந்திரத்தில் தான். இதில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று குண்டாஞ் சட்டிக்குள் கூத்தடித்த அரசு ஜெனீவாவில் தமிழர் கொலை அரங்கேறிய போதுதான் அரசு விழித்துக் கொண்டது.
ஜெனீவா சூடு பிடித்த பின்புதான் அரசு சர்வதேசத்தின் மீது தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டார்கள்.ஜெனீவாவின் தாக்கத்தை ஆரம்ப நாட்களில் இலங்கை அரசு இதைப் பெரிதாகக் கணக்கில் எடுக்கவில்லை.சம்பவங்களின் முக்கியத்துவமும் அவர்களால் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.
ஆனால், திடீரென்று தூக்கத்தால் விழித்து எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச அளவில் பலமான அஸ்திவாரம் ஒன்றைப் போடத் தொடங்கியிருப்பது புரிந்தது.
ஆனால், சர்வதேச அளவில் விடுதலைப் புலிகள் சில அரசியல் அஸ்திவாரங்களை போடத் தொடங்கியபோது, விஷயம் புரியாமல் இருந்த இலங்கை அரசுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் தூதரக ரிப்போட்கள் தலையைச் சுற்ற வைத்தன.
விடுதலைப் புலிகளின் சர்வதேச நடவடிக்கைகள் அவர்களுக்கு எவற்றையெல்லாம் பெற்றுத் தரலாம் என்பதை இலங்கை அரசு எப்படித் தெரிந்து கொண்டது என்பதற்கும் ஒரு சுவாரசியமான கதையுள்ளது.
புலிகளின் வெளிநாட்டு நடவடிக்கைகள் கண்காணிப்பு
ஐரோப்பாவில் தலைமையகம், வட அமெரிக்காவில் கிளை அலுவலகங்களும் உடைய தனியார் நிறுவனம் ஒன்றை இலங்கை வெளிவிவகார அமைச்சு (முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் இருந்த காலத்தில்) அணுகியதாம். மேற்படி நிறுவனம் சர்வதேசச் சட்டங்களில் நிபுணத்துவம் பண்ணப்பட்ட ஒரு பன்னாட்டு நிறுவனத்தை அணுகியது.ஒரேயொரு பிரச்சினை.அவர்களது கட்டணம் மிகமிக அதிகம்.
இருப்பினும் அவர்களை ஏற்பாடு செய்வதற்கு 'சுனாமி" நிதி உதவியது என்று வெளிவிவகார வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் நியமிக்கப்பட்டதும் அவர்கள் மூன்று நிபுணர்களை இலங்கை விவகாரத்துக்காக ஒதுக்கி, அந்த மூன்று பேரின் கைகளில் ஒரு பட்டியலைக் கொடுத்தார்களாம். அந்த மூன்று பேரால் தயாரித்துக் கொடுக்கப்பட்ட அறிக்கைதான்,
விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு நகர்வுகள், அவர்களை எந்தத் திக்கில் கொண்டு செல்லக்கூடியவை. அந்த நகர்வுகளால் அவர்கள் அடையக்கூடிய நன்மைகள் எவையெவை என்று பட்டியல் போட்டுக் கொடுத்ததாம்.
இந்த அறிக்கையின் ஹைலைட்கள் சில, இலங்கை அரசின் உயர் மட்டக் கூட்டம் ஒன்றில் ஆராயப்பட்டனவாம். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் அலுவலகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள்.அந்த அறிக்கையைப் பார்த்தவர்கள் ஆடிப் போய்விட்டார்களாம்.அவைகள் அப்போதைய காலங்களில் நடைபெற்றவைகள்.
ஆனால் இப்போது நிலமை மாறியுள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கம் என்பது புலம் பெயர் ஈழ ஆதரவாளர்களுக்கு கிடைத்துள்ள பெரும் பலமாகவே பார்க்கப்படுகின்றது.
மற்றும் சட்டத்தரணி ருத்திரகுமார் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசுக்குக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகின்றது. இந்தத் தடை நீக்கமானது எதிர்வரும் காலங்களில இலங்கை அரசுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.
ஆம் யுத்தமின்றி சத்தமின்றி ஈழத்தின் ஐந்தாம் கட்டப் போர் சர்வதேசத்தின் உதவியுடன் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பமாகவுள்ளது. சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நோக்கி நாடு கடந்த தமிழீழ அரசும் ஏனைய தமிழர் அமைப்புக்களும் வெளிநாடுகளில் காய் நகர்த்தி வருகின்றது.
கடந்த வாரம் மலேஷியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இலங்கையின் வடகிழக்கில் சர்வதேச வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாடு கடந்த தமிழீழ அரசு முன்வைத்துள்ளது.இந்தக் கோரிக்கை வலுப் பெற்று வருகின்றது. காலம் பதில் சொல்லும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
எம்.எம்.நிலாம்டீன்.
 mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmszBRXKYfoy.html

Geen opmerkingen:

Een reactie posten