தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 10 augustus 2013

யாழில் இலங்கை மற்றும் அமெரிக்க விமானப்படை நடத்தும் மருத்துவ உதவி முகாம்

வடக்கில் கடற்றொழிலை அபிவிருத்தி செய்ய வியட்நாம் அரசாங்கம் உதவி - யாழில் பெய்த திடீர் மழை வெங்காய அறுவடை பாதிப்பு
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 08:06.07 AM GMT ]
வடபகுதிக் கடல் வளத்தைப் பெருக்கி அதன்மூலம் கடற்றொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வியட்நாம் அரசாங்கம் முன்வந்துள்ளது.
கடற்றொழில் தேவைக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன் வந்துள்ளதுடன் இதன் அபிவிருத்தி தொடர்பில் சாதகமான இடமாக வடமாகாணம் திகழ்கின்றது என இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் தொன் சிங் தான்ங் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வியட்னாம் தூதுவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது விடயமாக நான்கு தொழில்நுட்ப அதிகாரிகள் வியட்னாம் சென்று பயிற்சி பெற்றுத் திரும்பியுள்ளனர். அவர்களினால் நாட்டில் உள்ள பல்வேறு பொருத்தமான இடங்கள் இனங்காணப்பட்டன.
இதைப் பரிசீலனை செய்தவதற்கே வியட்நாம் அதிகாரிகள் குழு வடக்கிற்கு வந்து, கடல் வளங்களை ஆராய்ந்து கடல் வள அபிவிருத்திக்கு ஏதுவாக வடமாகாணத்தைத் தெரிவு செய்துள்ளது.
அப்பகுதிகளில் இத் தொழில் நுட்பத்தைக்கொண்டு கடல்சார் தொழிலில் ஈடுபடுவோரின் உழைப்பை இலாபகரமாக மாற்றவுள்ளோம். கடலட்டை இனப்பெருக்கம், சிங்கறால் வளர்ப்பு, கடல்பாசி வளர்ப்பு போன்ற கடல் உயிரினங்கள் வளர்ப்பு சம்பந்தமான புதிய தொழில்நுட்பங்களே வடக்கில் அறிமுகப்படுத்தி அதன்மூலம் அவற்றைப் பெருக்கி கடல்சார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கென யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிறந்த கடல்வாழ் உயிரினங்கள் வளர்ப்புக்கு ஏற்ற இடமாக இனங்காணப்பட்டுள்ளது.
ஏற்கனவே யாழ்.மாவட்டத்தில் வேலணையிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் வேரவில், கிராஞ்சி, போன்ற பகுதிகளிலும் இச் செயற்திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். வடக்கிலுள்ள கடல் தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் இல்லை. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் அருகிப்போகின்றன. தற்போதுள்ள கடற்றொழிலாளர்கள் குறைந்த வருமானம் ஈட்டுகின்றனர்.
இவர்களின் இந்த உழைப்புக்குத் தொழில்நுட்பம் அவசியமாகின்றது. இதற்கு கடற்றொழில் நீரியல்வளங்கல் அமைச்சும், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையும் எமக்கு அனுசரணைகளை வழங்குகின்றன. இதற்கு அமைய இப்பகுதிகளில் வியட்நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இங்குள்ள கடல்வளங்களை உயர்த்துவதன் மூலம் கடற்றொழிலாளர்களின் வருமானங்களை ஈட்டமுடியும். இதற்கு யாருக்கும் கட்டுப்பாடு இல்லை. இத்தொழில் நுட்பத்தைப் பெற்றுக்கொள்ள அனைவருக்கும் இடமுண்டு. இதன்மூலம் அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
யாழில் பெய்த திடீர் மழை வெங்காய அறுவடை பாதிப்பு
கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தில் மழை பெய்யத் தொடங்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இம்முறை சின்னவெங்காயத்திற்கு பெரும் கிராக்கி ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் கூடுதலான விவசாயிகள் அதிகளவிலான முதலீட்டைக் கொண்டு, வெங்காயச் செய்கையை மேற்கெண்டு அறுவடை செய்து தோட்டவெளிகளில் பதப்படுத்தி வந்த நிலையில், இரவுவேளையில் திடீரென மழை பெய்ததால் சிறிய வெங்காயம் நனைந்து விட்டதாகவும், இதனால் அவற்றை மீள்நடுகைக்கு சேமித்து வைக்க முடியாது என்றும் உடனடியாக இவற்றை விற்பனை செய்யா விட்டால் பழுதடைந்துவிடும் என்றும் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அளவெட்டிப் பகுதியிலேயே அதிகளவில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
யாழில் இலங்கை மற்றும் அமெரிக்க விமானப்படை நடத்தும் மருத்துவ உதவி முகாம்
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 08:22.37 AM GMT ]
இலங்கை விமானப்படை மற்றும் அமெரிக்க விமானப்படை நடத்தும் மருத்துவ முகாம் இன்று சனிக்கிழமை அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இலங்கை மற்றும் அமெரிக்க விமானப் படையினரால் மருத்துவ முகாமில் ஆரம்ப சுகாதார செயற்பாடுகள், கட்புல செவிப்புல சிகிச்சைகள், கண் சிகிச்சை, பல் வைத்தியம் உட்பட பல வகையான மருத்துவ செயற்பாடுகளை நடாத்தி வருகின்றனர்.
முதலாவது மருத்து முகாம் கடந்த ஐந்தாம் திகதி திக்கம் கலாச்சார மண்டபத்தில் மூன்று நாட்களாக நடைபெற்றன.
இரண்டாவது மருத்து முகாம் இன்றையதினம் ஆரம்பமாகி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம் மாத்திரமன்றி இலங்கை அமெரிக்க விமானப் படையின் பொறியியற் பகுதியினரால் பாடசாலைகளின் புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புரனரமைப்பு வேலைகள் புன்னாலைகட்டுவன் ஆரம்பப் பாடசாலை, குட்டியப்புலம் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம் போன்றவற்றில் நடைபெறவுள்ளன.
மருத்துவ முகாமிற்கு அனுசரணையாக வடமாகாண சுகாதார அமைச்சு, யாழ் மருத்துவபீடம் மற்றும் சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன உதவிகளை வழங்கி வருகின்றன.
மருத்துவர் குழுவில் பங்காளதேஷ் நாட்டைத் சேர்ந்த இரண்டு வைத்தியர்களும், அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு வைத்தியர்கள், மாலைதீவைச் சேர்ந்த ஒரு வைத்தியருடன், அமெரிக்காவைச் சேர்ந்த 23 தாதியர்களும் வருகை தந்துள்ளனர்.
அத்துடன் இலங்கை விமானப்படையின் மூன்று வைத்தியர்கள், கடற்படையின் மூன்று வைத்தியர்கள், இராணுவத்தைச் சேர்ந்த ஒரு வைத்தியருடன் 34 தாதியர்களும் கலந்து கொண்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten