தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 10 augustus 2013

கொழும்பு - யாழ் பேருந்து ஒன்றில் சிங்களப் பாடல்களை ஒலிபரப்பியதால் பயணிகள் குழப்பம்!

வன்னியில் சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டவர்களின் அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 08:39.47 AM GMT ]
வன்னியில் சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்ட 1900 பேரின் அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், முன்பள்ளி ஆசிரியைகள் உள்ளிட்ட 2500ற்கும் அதிகமானோரை, இலங்கை அரசாங்கம் சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துள்ளது.
இராணுவத்தின் கீழ் உள்ள, விசுவமடுவில் உள்ள சிவில் பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் பொறுப்பதிகாரியான லெப்டினன் கேணல் ரத்னப்பிரியவே இவர்களுக்குப் பொறுப்பாக உள்ளார்.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்குமாறும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் இவர்களை லெப்.கேணல் ரத்னப்பிரிய பணித்திருந்தார்.
இதுகுறித்து, தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு முறைப்பாடு செய்திருந்தது.
சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள், அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், அவர்களின் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தது.
இதையடுத்து வன்னியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புப் படையினர் 1900 பேரின் அஞ்சல் வாக்களிப்பு விண்ணப்பங்களையும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நிராகரித்தார்.
கொழும்பு - யாழ் பேருந்து ஒன்றில் சிங்களப் பாடல்களை ஒலிபரப்பியதால் பயணிகள் குழப்பம்!
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 09:15.53 AM GMT ]
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேரூந்து ஒன்றில் சிங்களப் பாடல்களை ஒலிபரப்பியதால் நடத்துனரிடம் நிறுத்துமாறு பயணிகள் கேட்டபோது பாடலை நிறுத்த பேருந்து நடத்துனர் மறுத்ததும் சிறிது நேரம் முறுகல் நிலையும் குழப்பமும் ஏற்பட்டது.
குறித்த பேரூந்தில் சிங்கள இசைக்கச்சேரி வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டன.
சுமார் 11 மணியை தாண்டிய பொழுது அவற்றை நிறுத்தும் அல்லது தமிழ்ப் பாடல்களைப் போடவும் என்று பயணிகள் கேட்டனர்.
தாம் போடும் பாடல்களை மட்டுமே பார்க்க முடியும் என்றும் பேரூந்தில் விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் ஒரு சிலர் இருப்பதாகவும், அவர்களுக்காகவே இந்தப் பாடல்களை ஒளிபரப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பல தடவைகள் பயணிகள் கேட்டபொழுதும் மறுத்த பேரூந்து நடத்துனர் தொடர்ந்து சிங்களப்பாடலை ஒலிபரப்பினார்.
பேரூந்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் தமிழர்கள் என்பதால் தமிழ்ப் பாடலை போடுமாறு கேட்டனர்.
இதனால் முறுகல் நிலையும் சிறிது நேரம் குழப்பமும் ஏற்பட்டது.
தொடர்ந்து பயணிகள் கூச்சலிட்டு எதிர்ப்பைக் காட்டியதைத் தொடர்ந்து சிங்கள இசைக்கச்சேரிப் பாடல்களை பேருந்து நடத்துனர் நிறுத்திக்கொண்டார்.

Geen opmerkingen:

Een reactie posten