woensdag 14 augustus 2013

எதிர்க்கட்சிகளின் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் நிபந்தனை உத்தரவு- அரசுக்கு எதிராக கொழும்பு கோட்டையில் பெரும் ஆர்ப்பாட்டம் !

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இன்று மாலை கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டை பொலிஸாரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் நிபந்தனை உத்தரவொன்று பெறப்பட்டுள்ளது.
இதன்படி, பேரணி செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், விக்ரமபாகு கருணாரத்ன, சரத் மனமேந்திர, அசாத் சாலி மற்றும் சிறிதுங்க ஜயசூரிய ஆகியோருக்கு தடை விதித்தே இந்த நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக ஐனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்வையிட அதிக மக்கள் வந்த வண்ணமுள்ளதால் பேரணி அவர்களுக்கு இடையூறாக அமையும் என பொலிஸார் நீதிமன்றில் கூறியுள்ளனர்.
எனினும் திட்டமிட்டபடி இன்று மாலை 2 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடக்கும் என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
சுத்தமான குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த வெலிவேரிய மக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே எதிர்க்கட்சிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
அரசுக்கு எதிராக கொழும்பு கோட்டையில் பெரும் ஆர்ப்பாட்டம்
வெலிவேரிய ரத்துபஸ்வல கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசுக்கு எதிராக இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.
ஐக்கிய தேசியக்கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, புதிய சமசமாஜ கட்சி, நவ சிஹல உறுமய கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் இணைந்து ஸ்தாபித்துள்ள ஐக்கிய சக்தி என்ற அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய, சரத் மனமேந்திர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாச, ருவான் விஜேவர்தன உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கோட்டை பொலிஸ் நீதிமன்றத்தில் தடையுத்தரவொன்றை கோரியிருந்தனர். எனினும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டத்தை நடத்த நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியிருந்தது.

Geen opmerkingen:

Een reactie posten