13வது திருத்தச் சட்டம் என்ற விஷ பாம்பை கொலை செய்ய வேண்டும் என்று கூறியவர்கள், அந்த பாம்புக்கு தெரியாமல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை பெற்று கொண்டனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
13வது திருத்தச் சட்டம் என்ற விஷப் பாம்பை கொலை செய்ய வேண்டும் என்று கூறி பொல்லுகளை எடுத்தவர்கள் தமது தாக்குதலில் இருந்து பாம்பு தப்பியது போல் நடந்து கொள்கின்றனர்.
இது போன்ற அரசாங்கத்தின் பொய்களுக்கு ஏமாறாது, வடமேல் மாகாண மக்கள் தமது அரசியல் புத்திசாலித்தனத்தை முழு நாட்டு மக்களுக்கு காண்பிப்பாளர்கள் என ஏனைய மாகாண மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
நாட்டு மக்களின் அரசியல் சிந்தனையை மாற்றுவதற்கும், அரசாங்கத்திற்கு எதிர்ப்புகள் வலுக்கும் போதும் அதனை அடக்குவதற்கு அரசாங்கம் பல நாடகங்களை கடந்தகாலங்களில் அரங்கேற்றியது.
விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் அரங்கேற்றி நகைச்சுவை நாடகங்களை மக்கள் மறந்து விடவில்லை.
13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக நகைச்சுவை நாடகங்களில் நடித்த நடிகர்களின் வசனங்களை தற்பொழுது கேட்க முடிவதில்லை. அந்த நாடகங்களின் இயக்குனர்களையும் காணமுடியவில்லை.
நாடக பிரதிகளை காணவில்லை. அத்துடன் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடகம் போட்டவர்கள் சிலர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை பெற்று கொண்டு விட்டனர்.
13வது திருத்தச் சட்டத்தின் விஷ பற்களை பிடிங்க போவதாக கூறியவர்களின் பற்கள் பேச முடியாது கட்டி போயுள்ளது என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten