தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 augustus 2013

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவானமை அரசுக்கு எதிர்பாராத தோல்வி: மு.இராஜேஸ்வரன்

த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அடுத்தவாரம் ஆரம்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 11:15.40 AM GMT ]
வடக்கு மாகாணசபை தேர்தலுக்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அடுத்த வாரத்தின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் 5 மாவட்டங்களிலும் பாரியளவு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உத்திகள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு செய்யப்பட்டு தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்து ஏனைய பெரிய கட்சிகள் தமது பிரசார நடவடிக்கைகளை அரம்பித்திருப்பதுடன், விளம்பரங்கள், சுவரொட்டிகள் போன்றவற்றையும் பிரசுரித்து வருகின்றன.
எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்காத நிலையில் அடுத்த வாரத்தின் பிற்பகுதியில் பிரசார நடவடிக்கைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், வடக்கின் 5 மாவட்டங்களிலும் சுமார் 15ற்கும் மேற்பட்ட பாரிய பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும், இந்தக் கூட்டங்கள் அனைத்திலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வடக்கு தேர்தலுக்கான கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாத பிற்பகுதியில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் எழுத்து மூலமாகவும், வாய்மொழி ஊடாகவும் பல விடயங்கள் கூட்டமைப்பு தலைமையின் கவனத்திற்குக் கொண்டுவரபபட்டுள்ள நிலையில், அவற்றில் மாகாணசபைக்குச் பொருத்தமானவற்றை விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவானமை அரசுக்கு எதிர்பாராத தோல்வி: மு.இராஜேஸ்வரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 12:04.00 PM GMT ]
வட மாகாணசபைத் தேர்தலைப் பொறுத்தமட்டில் அரசாங்கம் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகின்றது.
எமக்கு வட மாகாணசபையை ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை விடவும் எமது மக்கள் எமது தேசிய உரிமைப் போராட்டத்தில் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை நிருபிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு. எனவே தமிழினம் ஒன்றுபட்டு வாக்களித்து எமது ஒற்றுமையை உலகுக்கு எடுத்துக்காட்டுவோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தல் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 60 வருடகால அகிம்சை ஆயுதப் போராட்டத்தின் தீர்வு வடமாகாண சபையை ஆட்சி செய்வதால் மட்டும் கிடைத்து விடப்போவதில்லை. ஆனால் இதிலிருந்து எமக்கான உரிமைகளை வென்றெடுக்க இந்த வட மாகாணசபை ஆட்சி ஒரு படியாக இருக்கும் என்பது மட்டும் உண்மை. இது அரசுக்கும் புரிந்த விடயம் என்பதாலேயே அவர்கள் ஆரம்பத்தில் வட மாகாணசபைத் தேர்தலை நடாத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
ஆனால் உலக நாடுகளின் உயர் அழுத்தத்தினால் நடாத்தியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்தனர். இதனூடாக முதலாவது தோல்வியை சந்தித்த அரசு 13வது திருத்தத்தில் கைவைக்க நினைத்தது.
அதனூடாகவும் அழுத்தங்களை சந்தித்து அதிலும் 2வது தோல்வியை எட்டிய அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவினூடாக கூட்டமைப்பிற்குள் விரிசலை ஏற்படுத்தலாம். இதை வைத்து தாம் ஏனைய கட்சிகளுக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்ததை போன்று கூட்டமைப்பின் ஒற்றுமையையும் சிதைத்து விடலாம் என நினைத்த அரசுக்கு, வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரன் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டது அரசுக்கு எதிர்பாராத அடுத்த தோல்வியாகி விட்டது.
இப்படி தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் அரசும் அதன் அமைச்சர்களும் தற்போது எமது முதலமைச்சர் வேட்பாளரையும் கட்சியையும் பற்றி விமர்சிப்பது கேளிக்கையாகவே இருக்கின்றது.
வடமாகாண சபையை எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றுவது உறுதியான விடயம். வட மாகாணத்தில் உள்ள மக்கள் ஏற்கனவே இழந்த, இழந்து கொண்டிருக்கின்ற சொத்துக்கள், சுகங்கள், சோதனைககள் எல்லாவற்றிற்கும் ஒரு இடைக்கால தீர்வாக எமது ஆட்சி அமையும் அதனூடாக எமது உண்மையான உறுதியான தீர்வு கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.
இந்த நாட்டில் உள்ள அனைத்து மாகாண சபைகளுமே அரசுக்கு சார்பாக ஆட்சி செய்து வருகின்றது. அரசு நினைப்பதையே மாகாண சபை ஆட்சியாளர்கள் நிறைவேற்றி வருகின்றனர். இதனால் இவ்வளவு காலமும் 13ஐப் பற்றி பெரிதாக யாரும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் அறிய விரும்பியதுமில்லை அலட்டிக்கொள்ளவும் இல்லை.
ஆனால் வட மாகாணசபையோ முற்றிலும் வேறுபாடானது. அங்கே ஆட்சி அமைக்கப் போபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது உறுதியான விடயம் இது ஏற்கனவே அரசாங்கத்திற்கும் தெரிந்ததால் தான் 13ஐப் பற்றியும் காணி பொலிஸ் அதிகாரம் பற்றியும் கவலைப்படுகின்றனர்.
ஏனெனில் வட மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியதும் சட்டப்படி சகல நடவடிக்கைகளையும் எடுப்பர். இதனால் தாங்கள் நினைத்தது எதையும் சாதிக்க முடியாது. ஏனைய மாகாண சபை ஆட்சியாளர்களை போல் அரசின் கைப்பொம்மைகளாக தமிழ்த் தேசியக் கூட்மைப்பு ஆட்சியாளர்கள் இருக்க மாட்டார்கள் என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும்.
இதனாலேயே தற்போது அரசு குழம்பிக் கொண்டு இருக்கின்றது. எப்படி வட மாகாணசபை தேர்தலில் மோசடிகளை ஏற்படுத்தி குழப்பி விடலாம் என கனவு கண்டு கொண்டிருக்கின்றது.
எது எப்படியோ நடைபெறப்போகும் வட மாகாண சபை தேர்தலில் மக்கள் மிகவும் விழிப்பாகவே இருக்கின்றார்கள். கடந்த கால கறை படிந்த வரலாறு மக்கள் மனதில் இருந்து நீங்க வேண்டுமானால் அரசாங்கம் உண்மையான நீதியான தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகளில் செயற்பட வேண்டும்.
இதை விட்டு தொடந்தும் தமிழ் மக்களை அச்சுறுத்தி ஏமாற்றி சுதந்திரமாக வாக்களிப்பதை தடுத்து விடலாம் என அரசு முயற்சிக்குமே ஆனால் அவர்களுக்கு இருக்கின்ற  ஒரு சிறிய ஆதரவையும் இழந்து விடுவார்கள் என்பது மட்டும் தெளிவான விடயம்.

Geen opmerkingen:

Een reactie posten