தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 augustus 2013

அளவெட்டியில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை- நெடுந்தீவுக்கான படகு சேவை புதிய நேர அட்டவணை- ஆயுர்வேதத் துறையை மேம்படுத்த நடவடிக்கை

சென்னை விமான நிலையத்தில் 3 இலங்கையர் உட்பட ஐந்து பேர் கைது- இந்திய மீனவர்கள் 20 பேர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 10:18.36 AM GMT ]
கொழும்புக்கு போலியான கடவுச்சீட்டு மற்றும் விசாவில் செல்ல முயன்ற வங்காளதேசைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இந்திய கடவுச்சீட்டில் இருந்த இரு இளைஞர்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அது போலியானது என கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்த விசாவும் போலியானது என தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் வங்காளதேச நாட்டை சேர்ந்த முகமது குலாம் ரப்பானி (வயது 27), முகமது முரல் ஆப்தீன் (32) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைகளின் போது அவ்விளைஞர்கள் தெரிவித்திருப்பதாவது,
வங்காளதேசத்தில் சரியான வேலை எதுவும் இல்லாததால் கொழும்பு வழியாக வெளிநாடுகளுக்கு சென்றால் வேலை கிடைக்கும் என்ற ஆசையில் அங்கு உள்ள முகவர்களை அணுகினோம். அவர்களிடம் தலா 2 லட்சம் ரூபாய் கொடுத்து இந்தியா கடவுச்சீட்டைப் பெற்றோம்.
பின்னர் வங்காளதேசத்தில் இருந்து மேற்கு வங்காளம் வந்தோம். அங்கிருந்து ரயிலில் கடந்த வாரம் சென்னை வந்தோம். இங்கிருந்து கொழும்பு வழியாக மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தோம் என குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு செல்வதற்காக மற்றொரு விமானத்தில் ஏற வந்த பயணிகளையும் குடியுரிமை அதிகாரிகள் சோதனை போட்டனர். விமானத்தில் ஏற வந்த சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த செந்திவர்ணன் (32), கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமை சேர்ந்த நாகராஜ் (72), திருவான்மியூர் மதிவதனா (52) ஆகியோரின் கடவுச்சீட்டைச் சோதனை செய்தனர்.
அதில், இலங்கையை சேர்ந்த இவர்கள் 3 பேரும், தமிழகத்துக்கு வந்து பல ஆண்டுகளாக தங்கி உள்ளனர். தற்போது இந்திய கடவுச்சீட்டை எடுத்துக்கொண்டு கொழும்புக்கு செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து இலங்கை பெண் உள்பட 3 பேரின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
அதன்பின்னர் 2 வங்காளதேச இளைஞர்கள், இலங்கை பெண் உள்பட 3 பேர் என 5 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய மீனவர்கள் 20 பேர் கைது
இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 20 இந்திய மீனவர்களை இலங்கை கடற்டையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
இவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
5 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்த மீனவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலகுரிய தெரிவித்தார்.
இலங்கையில் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே 70க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அளவெட்டியில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை- நெடுந்தீவுக்கான படகு சேவை புதிய நேர அட்டவணை- ஆயுர்வேதத் துறையை மேம்படுத்த நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 09:54.30 AM GMT ]
அளவெட்டி ஜே.219 கிராம சேவகர் பிரிவில் சட்டவிரோதமான முறையில் தறித்து வீழ்த்தப்பட்ட 27 பனை மரங்களை பனை அபிவிருத்திச் சபையின் வெளிக்கள உத்தியோகத்தரின் அதிரடி நடவடிக்கையாலும் கிராம சேவகரின் ஒத்துழைப்புடனும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மேலும் தறிக்கப்படவிருந்த பனைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
பனைமரங்கள் தறித்தலானது சட்டவிரோதமானது, என்பதுடன், அத்தியாவசிய தேவைகருதி உதாரணமாக வீட்டுத்திட்டங்கள் போன்றவற்றிற்கு பனை அபிவிருத்திச் சபையின் சிபார்சுடன் பிரதேச நோக்காகக் கொண்ட சில கும்பல்கள் சட்டவிரோதமான முறையில் பெருமளவான பனைகளை இவ்வாறு தறித்து வருவதுடன், அவர்கள் இலகுவில் தப்பித்தும் விடுகின்றனர்.

இவ்வாறு அருகில் பெருமளவு பனைகள் தறிக்கப்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் விழிப்புடன் செயற்பட்டு உடனடியாக பனை அபிவிருத்திச் சபைக்கோ அல்லது காவல் துறைக்கோ தகவல் தரும்பட்சத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதை கட்டுப்படுத்துவதுடன், பனை வளத்தை பாதுகாக்கக்கூடியதாகவும் இருக்கும் என்றும் பொது மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நெடுந்தீவுக்கான படகுசேவை புதிய நேர அட்டவணை அறிவிப்பு
நெடுந்தீவு குறிக்கட்டுவான் பகுதிக்கிடையிலான படகுச்சேவை நாளை திங்கட்கிழமை முதல் புதிய நேர அட்டவணைப்படி சேவைகள் இடம்பெறவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் அறிவித்துள்ளார்.
இதன்படி வாரத்தில் வியாழக் கிழமை தவிர சகல நாட்களும் சேவை இடம்பெறவுள்ளது. இதன்படி தினமும் நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவானுக்கு காலை 6.30 மணிக்கு வடதாரகை 7.30 மணிக்கு குமுதினி, பிற்பகல் 2.30 மணிக்கு குமுதினி குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்குத் தினமும் காலை 9 மணிக்கு குமுதினி, பிற்பகல் 12.30 மணிக்கு வடதாரகை பிற்பகல் 4.30 மணிக்கு குமுதினி ஆகிய சேவைகள் இடம் பெறவுள்ளன.
இதேவேளை வியாழக்கிழமைகளில் வடதாரகை 11 குமுதினி நிறுத்தப்பட்டு தனியார் படகுகள் பின்வரும் நேர அட்டவணையில் சேவையில் ஈடுபடும் அதன்படி தனியார் படகுச்சேவை நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் நோக்கியதாக 6.30 மணிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கும் குறி கட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கு காலை 9 மணிக்கும் பிற்பகல் 4.30 மணிக்கும் படகுச்சேவைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் சித்த ஆயுர்வேதத் துறையை நெறிப்படுத்த விசேட நடவடிக்கை
வடபகுதியில் உள்ள ஆயுர்வேத சுதேச மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்து தயாரிப்போர் மீது விசேட கண்காணிப்புப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களம் செய்துள்ளது. ஒழுங்கு விதிகளை மீறுகின்ற நிறுவனங்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆயுர்வேத மற்றும் சுதேச வைத்தியத்துறையின் தனித்துவத்தையும் தரத்தையும் மேம்படுத்துவதோடு பக்கவிளைவுகள் அற்ற தூயமருந்துப் பாவனையை பொதுமக்கள் மத்தியில் மேல் நிலைப்படுத்துவற்கு ஏதுவாக வடக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களமும் சுதேச வைத்தியத்துறை அமைச்சும் இணைந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
விற்பனை செய்யப்படும் மருந்துப் பொருட்களும் மூலப்பொருட்களும் சுத்தமாகவும் சுகாதார முறையிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும். மருந்துகள், மூலப்பொருட்கள் அனைத்தும் அடையாளப்படுத்தும் சுட்டிகள் கொண்டிருப்பதை உறுதி செய்தல்வேண்டும்.
மருந்து விற்பனை நிலையம் உரிய முறையில் பதிவுசெய்திருப்பதை உறுதிப்படுத்தலும் பதிவுச் சான்றிதழை பார்வையில் படும்படி காட்சிப்படுத்தல், மருந்து உற்பத்திகள் நடைபெறுமாயின் அதற்கான அனுமதியை ஆயுர்வேத திணைக்களத்தில் பெற்றிருத்தல், அதனை பார்வையில்படும் படி வைத்தல் என்பன உரியமுறையில் அனுசரிக்க வேண்டும்.
இவைகளை வலியுறுத்தி வடமாகாண சுதேச வைத்தியத் திணைக்கள ஆணையாளர் டாக்டர் திருமதி சியாமளா துரைசிங்கம் விரிவான சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten