donderdag 6 juni 2013

வட கிழக்கு தாயக நிலங்களை பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கட்டாய கடமை!- பா.அரியநேத்திரன்

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையே மோதல்!- இருவர் படுகாயம்
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 08:20.44 AM GMT ]
மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனைக் கிராமத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கத்திக்குத்துக்கு இலக்காகி இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை 2ம் குறுக்கு வீதியில் நேற்று இரவு 10.15 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இம்மோதலில் கலந்தர் லெப்பை முகம்மட் அன்வர், அப்துல் ஸலாம் முகம்மட் பௌசர் என்றழைக்கப்படும் இருவருமே கத்திக் குத்துக்கு இலக்காகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து சண்டை நடைபெற்ற இடத்தில் கைக்குண்டுத் தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.
இக்குண்டுத் தாக்குதலால் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை. இக்கைக்குண்டு வெடிக்க வைத்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதுடன், இவர்களை வாழைச்சேனை பொலிஸார் தேடிவருவதுடன், இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வட கிழக்கு தாயக நிலங்களை பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கட்டாய கடமை!- பா.அரியநேத்திரன்
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 06:58.21 AM GMT ]
வட கிழக்கில் உள்ள தமிழர்களின் எல்லைக் கிராமங்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை தமிழ் அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் வேண்டுகேள் விடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களான தாந்தாமலை, நாப்பதுவெட்டை, மக்களடிசுற்று ஆகிய இடங்களை பார்வையிட்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிய போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
வட கிழக்கு தமிழர்களின் எல்லைக் கிராமங்களை அபகரிக்கும் திட்டமிட்ட வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக எல்லைக் கிராமங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதுடன் புத்த விகாரைகளையும் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.ஆனால் தமிழ் எல்லைக் கிராமங்களுக்கான அடிப்படைத் தேவைகளையோ, பாதுகாப்பையோ அரசாங்கம் வழங்குவதற்கு தயக்கம்காட்டி வருகின்றது.
வட கிழக்கு தாயக நிலங்களை பாதுகாக்க வேண்டியது அனைத்து தமிழர்களதும் கட்டாய கடமையாகும். நிலத்தை இழந்துவிட்டு உரிமைகளை கோருவதில் அர்த்தமில்லை முதலில் நிலங்களை பாதுகாக்க வேண்டும் நிலம் இருந்தால்தான் உரிமைகளை கேட்கமுடியும்.
எனவே தமிழர்களின் நிலங்களை பாதுகாப்பதற்கு உலகத்தமிழர்கள் அனைவரும் உதவ வேண்டும். எல்லையில் உள்ள தமிழ் கிராமங்களில் வாழும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுக்கான வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக இங்குள்ள மக்களின் உதவியுடன் எல்லைக் கிராமங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
எனவே புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் எல்லைக் கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகளை செய்வதற்கு முன்வரவேண்டுமென இங்குள்ள மக்களின் சார்பாக நான் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten