donderdag 6 juni 2013

கிளிநொச்சியில் மக்கள் வாழிடங்களுள் புகுந்த இராணுவச் சிப்பாய்! அசௌகரியங்களை எதிர்கொண்ட மக்கள்!

தமிழ் வர்த்தகரிடம் ஒரு கோடி கொள்ளைச் சம்பவம்! பிரதான சந்தேகநபர் விமானநிலையத்தில் கைது!
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 09:28.33 AM GMT ]
தமிழ் வர்த்தகரிடம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக கூறப்படும் பிரதான சந்தேக நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.
நீதிமன்றத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பிடியாணையின் பிரகாரமே குறித்த சந்தேநபர் நேற்று கைது செய்துசெய்யப்பட்டதாகவும், கொள்ளை இடம்பெற்ற தினமே குறித்த நபர் நாட்டைவிட்டு தப்பியோடி விட்டதாகவும் அந்த பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
மேற்படி வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களில் பொலிஸார் மூவர் உட்பட ஆறுபேர் நீதிமன்றத்தினால் அண்மையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் மேற்படி வழக்கையும் அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தார்.
வெள்ளவத்தையில் வெளிநாட்டு நாணயமாற்று நிலையத்தை நடத்துகின்ற கணபதிப்பிள்ளை தேவனேஸ்வரன் கொழும்பு, கொம்பனி வீதியிலுள்ள சம்பத் வங்கியிலிருந்து கோடி ரூபா வெளிநாட்டு பணத்தை பெப்ரவரி 12 ஆம் திகதி எடுத்துக்கொண்டு சென்றபோதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பத் வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு நவம் மாவத்தையூடாக வானில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து பொலிஸ் சீருடையில் நின்று கொண்டிருந்த ஒருவர் வானத்தை நிறுத்தினார்.
வாகனம் நிறுத்தப்பட்டதும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பென்டர் வாகனத்திலிருந்து நால்வர் இறங்கினர் அவர்கள் நால்வரும் என்னையும் எனது வாகனத்தின் சாரதியையும் டிப்பென்டர் வாகனத்திற்குள் பலவந்தமாக தள்ளி ஏற்றிக்கொண்டுச் சென்றதுடன் பணத்தை அபகரித்துக் கொண்டு கோட்டை பகுதியிலுள்ள பாழடைந்த இடத்தில் தங்களை விட்டுவிட்டுச் சென்று விட்டனர் என்று அவர் நீதிமன்றத்தில் விபரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை கொள்ளையடிக்கப்பட்ட ஒருகோடி ரூபாவிலிருந்து 35 இலட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
கிளிநொச்சியில் மக்கள் வாழிடங்களுள் புகுந்த இராணுவச் சிப்பாய்! அசௌகரியங்களை எதிர்கொண்ட மக்கள்!
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 10:06.57 AM GMT ]
இன்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி கிராஞ்சிப் பகுதியிலுள்ள மொட்டையன் குளம் என்ற இடத்திலுள்ள வாழிடங்களுள் திடீரென உட்புகுந்த ஒரு இராணுவ சிப்பாயினால் பல அசௌகரியங்களை அப்பகுதி மக்கள் எதிர்கொண்டனர்.
பயணப்பை சகிதம் வந்த அந்த இராணுவ சிப்பாய்  உட்புகுந்த வேளையில் ஆண்கள் யாரும் அங்கிருக்கவில்லை. அவ் இராணுவ சிப்பாயின் வேறுபட்ட நடத்தையினை அவதானித்த அப்பகுதிப் பெண்கள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், பாடசாலை அதிபர், மாதர் சங்கத்தினர் ஆகியோருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
மேற்குறித்த கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும், பாடசாலை அதிபரும், மாதர் சங்கத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து குறித்த இராணுவச் சிப்பாயைத் தேடிய பொழுது மேலாடைகள் அற்ற நிலையில் மரத்தின் மேல் ஏறி அமர்ந்திருந்ததைக் கண்டுள்ளனர்.
அவ் இராணுவச் சிப்பாயை  மரத்திலிருந்து இறக்கி ஆடைகளினை அணிவித்து அவரிடம் விபரத்தினைக் கேட்ட பொழுது முதலில், தான் பாலைப்பழம் பிடுங்க வந்ததாகக் கூறியுள்ளார். இப்பொழுது பாலைப்பழக் காலம் ஓய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், தான் இராணுவத்திலிருந்து தப்பியோடி வந்தவரென்றும், இது குறித்து  சக இராணுவத்தினருக்கு அறிவிக்க வேண்டாமென்றும் அவர்களிடம் தான் அகப்பட்டால் தனக்கு அடிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே இவ்விராணுவச் சிப்பாய்  குறித்து அறிந்து கொண்ட சிவில் அலுவலகத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் அவ்விடத்திற்கு வரும் வேளையில் தப்பியோடி வந்ததாகக் கூறிய இராணுவ சிப்பாய்  காட்டிற்குள் புகுந்து ஓடியுள்ளார்.
இது குறித்து யாருக்கும் தெரிவிக்க வேண்டாமென்றும், குறித்த இராணுவ சிப்பாய்  தொடர்பாகத் தாம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் சிவில் அலுவலகத்தில் இருந்து வந்த இராணுவத்தினர் எச்சரித்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten