donderdag 18 december 2014

காலியில் யுத்த வெற்றி காணொலிகளுக்கு தற்காலிகத் தடை! (படம் இணைப்பு)

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு தலையிடாது: ஆனந்தசங்கரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் தலையிடாது ஒதுங்கி இருந்து கொண்டு தமிழ் மக்களை அவர்களின் இஷ்டப்படி செயற்பட்டு யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க அவர்களை விட்டுவிடவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்திக் கேட்டுள்ளது தமிழர் விடுதலைக் கூட்டணி. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழுவிவரம் வருமாறு:- நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கை சரித்திரத்தில் நடைபெறும் மிக இக்கட்டான தேர்தலாகையால் தமிழ் மக்கள் தமது தெரிவில் மிகக் கவனத்துடன் செயற்படவேண்டும். கடந்த தேர்தல்களில் குறிப்பாக இரண்டு ஜனாதிபதித் தேர்தலில் நடந்தவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் தலையிடாது ஒதுங்கி இருந்து கொண்டு தமிழ் மக்களை அவர்களின் இஷ்டப்படி செயற்பட்டு யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க அவர்களை விட்டுவிடவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகிறது.

கடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களில் நடந்த தவறுகளின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் தகுதியை கூடக் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இழந்துவிட்டனர். இதன் காரணமாகவோ என்னவோ அவர்கள் இப்போது மாகாணசபை, பிரதேச சபை உறுப்பினர்களுடன் பேசுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இரண்டொரு நபரே இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் ஏனையவர்கள் வெறும் ஆமாம் போடுபவர்களே என்பதையும் அனைவரும் அறிவர். தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சுயநலமும் பதவிஆசையும் பெருமளவு ஆட்கொண்டுள்ளமையால் மக்களை வழிநடத்தும் தகுதியையும் அவர்கள் இழந்துவிட்டனர். அத்தலைவர்களில் அநேகர் தமது நிகழ்ச்சி நிரலின்படியே செயற்படுவதோடு தமது எதிர்காலம் பற்றிய கனவுடனும் தமது கட்சிகளின் எதிர்காலம் பற்றிய நினைவுகளுடனும் இருக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் புத்தி ஜீவிகளுக்கும், அனுபவசாலிகளுக்கும் பஞ்சமில்லை.

மக்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கவும் திறமையான தலைமையை தகுதியுள்ள பலர் ஏற்கத் தயாராக உள்ளனர். தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பில் இரண்டு மூன்று நபர்களைத் தவிர ஏனையோர் வெறும் ஆமாம் போடுபவர்களாகவே உள்ளனர். முக்கிய முடிவுகளை அந்த இரண்டு மூன்று பேர் மாத்திரமே எடுக்கின்றனர். உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இவர்களுடைய முடிவுகளை ஒழுங்காக பத்திரிகைகளில் எழுதுவதோடு அம்முடிவுகளை திரும்பதிரும்ப மிகைப்படுத்தி வருகின்றனர்.

இலகுவாக வேலை செய்யமுடியும் என்பதால் ஆமாம் போடுகின்றவர்களை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தகுதியானவர்களிடம் ஆலோசனை பெற்று காலம் கடத்தாது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயலவேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் தலையிடாது தமிழ் மக்களை தாமாகத் தாம் விரும்புவருக்கு வாக்களிக்கக் கூடிய வகையில் அவர்களை செயற்படவிட்டு ஒதுங்கியிருக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை கேட்பதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு போதிய நியாயமான காரணங்கள் உண்டு.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசுகட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியை நீக்கிவிட்டு அந்த அணியில் தம்மை இணைத்துக்கொண்டது. இதை தமது சொந்த இலாபத்துக்காகவும் ஓர் அரசியல் கட்சியாக தம்மை தக்கவைத்து கொள்வதற்குமாகவே அப்படிசெய்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக புலிகள் சார்ந்த புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவைபெறவே அவ்வாறு செய்தனர். இதன் உள்நோக்கம் பற்றி அனைவரும் அறிந்ததே. சாதாரண பொதுமக்களுக்கு இச்செயல் தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற தவறான கருத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் அநேக பிரச்சனைகளை எதிர்நோக்கியவர்கள் என்றும் பலதுன்பங்களோடு வடக்கு, கிழக்கு புலிகளின் ஆதிக்கத்தில் உட்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.

இன, மதபேதமின்றி அனைத்து மக்களும் பட்ட துன்பங்கள் சொல்லில் அடங்காது. அத்துடன் அவர்கள் இழந்த உயிரிழப்புக்கள், உடைமைகளின் பெறுமதிகளும் கணிக்கப்படமுடியாதவை. அப்படியிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களை தவறாக வழிநடாத்தி சகல தேர்தல்களிலும் தம் இஷ்டப்படி வாக்களிக்க வைத்துள்ளனர். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இந்தத் துயரமான நிலை நீண்டகாலமாக நிலைத்து நிற்கிறது. மிகதுன்பகரமான விடயம் என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் புலிகளுக்கு சார்பானவர்கள் என்ற முத்திரையை குத்திவைத்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருப்பின் தாம் மௌனமாக இருந்துகொண்டு தமிழ் மக்களை தம் இஷ்டப்படி இத் தேர்தலில் செயற்பட்டு விடுதலைப் புலிகள் என்று குத்தப்பட்ட முத்திரையை அகற்ற உதவுமாறு த.தே.கூட்டமைப்பை த.வி.கூ கேட்டுக்கொள்கிறது. காலத்துக்குக் காலம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மிகச்சாதுரியமாக தமிழ் மக்களை விடுதலைப் புலிகளின் சார்பானவர்கள் என்பதை உண்மைக்கு மாறாக சாதித்தே வந்துள்ளனர்.

நாம் எதிர்நோக்கும் சகல பிரச்சனைகளையும் ஒவ்வொரு தமிழ் மகனும் மிககவனமாக பரிசீலித்து வேட்பாளர்கள்; தத்தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன் வைத்துள்ள விடயங்களை நன்கு ஆராய்ந்து யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற நல்ல முடிவினை எடுக்கவேண்டும். கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களில் விட்ட தவறை மீண்டும் விடாமல் பகிஷ்கரிக்கும் எண்ணத்தை கைவிட்டு தமிழர்கள்தான் ஜனாதிபதியைத் தெரிவுசெய்வார்கள் என்ற இறுமாப்பு எண்ணத்தையும் கைவிடுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகிறது. - என்றுள்ளது.
18 Dec 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1418895806&archive=&start_from=&ucat=1&
மன்னார் முசலியில் ஹுனைஸ் எம்.பியின் ஆதரவாளர்கள் தடுக்கப்பட்டமைக்குக் கண்டனம் (படங்கள் இணைப்பு)
மன்னார் மாவட்டத்தின், முசலிப் பிரதேச சமூகம் ஒன்னிணைந்து சிறுபான்மை சமூகத்தினர் ஒன்றிணைந்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாரூக் அவர்களை வரவேற்கும் மாபெரும் வரவேற்பு விழா நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை சிலாவத்துறையில் இடம்பெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் முசலி பிரதேசத்தில் தனக்கு இடம்பெற்ற மகத்தான வரவேற்பு நிகழ்வுக்கு மன்னார் எருக்கலம்பிட்டி, புதுக்குடியிறுப்பு போன்ற கிராமங்களில் இருந்து கலந்துகொள்ள வருகை தந்த மக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அச்சுறுத்தி இடைமறித்த கோழைத்தனமான செயலை தான் வன்மையாகக் கண்டிக்கிறார் என ஹீனைஸ் பாரூக் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டால் இனி வரும் காலங்களில் உங்கள் கிராமத்திற்கு எவ்வித அபிவிருத்தி பணிகளையும் தான் செய்யமாட்டேன் எனவும் மீறிச் சென்றால் வாகனங்களை சேதப்படுத்தப்படும் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.

எனவே அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. யாரும் எந்தக் கலந்துரையாடலிலும் கலந்து கொள்ள முடியும். எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கின்றார் என ஹுனைஸ் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அ.இ.ம.க.வின் முசலிப் பிரதேச சபை வேட்பாளர் அந்தக் கட்சியிலிருந்து விலகி ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திபாலவை ஆதரிப்பதற்காக ஹுனைஸ் எம்.பியுடன் இணைந்து கொண்டார். ஹுனைஸ் பாருக் எம்.பி அண்மையிலேயே அரசிலிருந்து விலகி ஐ.தே.கவில் இணைந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

18 Dec 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1418896115&archive=&start_from=&ucat=1&
சம்பந்தன் போன்று பேசுகிறார் சம்பிக்க!
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசிலிருந்து வெளியேறிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைப் போன்றே கருத்து வெளியிட்டு வருகிறார் எனத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தினார்.

அத்துடன் நாட்டு மக்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நம்பி விடக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு

"அரசு, அதிக வட்டிக்கு வெளிநாடுகளிலிருந்து கடன்களைப் பெற்று நாட்டு பிரஜைகளை கடனாளியாக்குகிறது எனப் பொது எதிரணியினர் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றனர். நூற்றுக்கு ஏழு வீத வட்டிக்கு கடன் பெறுவதானது மிகவும் ஆபத்தானது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், இந்த அரசோ 2005 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 7 வீதத்திற்கும் குறைவான வட்டி வீதத்திலேயே கடன்பெறுகிறது. ஆனால், இதற்கு முன்னர் இலங்கையை ஆட்சி செய்த அரசுகள் இதிலும் பார்க்க அதிகளவிலான வட்டி வீதத்திலேயே கடன் பெற்றன.

அப்படியென்றால் இது குற்றமில்லையா? அத்தோடு, தற்போது அரசிலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சரான சம்பிக்க ரணவக்க, வடக்கில் இராணுவ ஆட்சி இருப்பதாகவும், நாடு இராணுவ மாயமாக்கலை நோக்கிப் பயணிக்கிறது என்றும் தமிழ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இத்தனை காலமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இவ்வாறான கருத்தை வெளியிட்டு வந்தது.

தற்போது ஐக்கியத் தேசியக் கட்சியினர் கூட தெரிவிக்காத, இந்த இராணுவ கதையை சம்பிக்க ரணவக்க திடீரென கூறி வருகிறார். இத்தனை காலமும் இது குறித்து பேசாத சம்பிக்க ரணவக்க தற்போது வடக்கு - கிழக்கில் இராணுவ முறைமை காணப்படுவதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைப் போல் பேசுவதன் நோக்கம் தான் என்ன? இதன்மூலம் இங்கு ஏதோ ஓர் அரசியல் சதி நடந்துள்ளதென்றே எமக்கு எண்ணத் தோன்றுகிறது.- என்றார்.
18 Dec 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1418896517&archive=&start_from=&ucat=1&
காலியில் யுத்த வெற்றி காணொலிகளுக்கு தற்காலிகத் தடை! (படம் இணைப்பு)
காலி மாவட்டத்தில் நடத்தப்படும் பல பிரத்தியேக வகுப்புகளில் (ரியூசன் கிளாஸ்) காட்டப்பட்டு வந்த உள்நாட்டு யுத்த வெற்றி சம்பந்தமான வீடியோக்களை தற்காலிகமாக இடைநிறுத்த காலி பிராந்திய தேர்தல்கள் பிரதி ஆணையாளர் நடவடிக்கை எடுத்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பல ரிடியூசன் வகுப்புகளில் யுத்த வெற்றி சம்பந்தமான ஒளிநாடாக்கள் (விடியோ) காண்பிக்கப்பட்டு வந்தன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கான ஆதரவை இந்த ஒளிபரப்புகள் மறைமுகமாகத் திரட்டுவதாகத் தேர்தல்கள் செயலகத்துக்குக் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து அந்த ஒளிபரப்புகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காலி மாவட்டப் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இளைஞர்களையும், யுவதிகளையும் இராணுவத்துடன் இணைத்துக்கொள்ளும் நோக்கிலேயே யுத்த வெற்றி சம்பந்தமான இந்த ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாக இராணுவத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தல் முடியும்வரை அந்த ஒளிபரப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் விளக்கமளித்தார்.
18 Dec 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1418896853&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten