vrijdag 19 december 2014

மகிந்தவை தொடர்ந்து ஆட்சியில் அமர்த்தி தாலாட்டு பாட, நாங்கள் முட்டாள்கள் அல்ல: மனோ

எதிர்க்கட்சி அவசரப்படுவதற்கு காரணம், இன்னும் சில விக்கட்டுகளை வீழ்த்துவதற்கே!- அமைச்சர் ஹக்கீம்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 12:34.47 AM GMT ]
எங்களை வெளியில் எடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி அவசரப்படுவதன் காரணம், எங்களைப் பயன்படுத்தி இன்னும் சில விக்கட்டுகளை வீழ்த்துவதற்கே ஆகும். அது மிகவும் பிழையானது. அதற்கு நாங்கள் சோரம் போக முடியாது. அது எங்களைப் பற்றி தவறான பார்வையைக் கொடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கண்டியில் நடந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கியதன் பின்னர் ஆற்றிய முடிவுரையில் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து நான் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.
ஏனென்றால் எமது மவுசு கூடிக்கொண்டே போகிறது. இன்னும் கொஞ்சம் நாளைக்கு இவ்வாறு நீடிக்குமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இவ்வாறு வேறு காலம் வாய்க்காது. இரண்டு தரப்பினரும் எங்களது ஆதரவுக்காக ஏங்கி நிற்கிறார்கள். நான் மிகவும் நிதானமாக இருக்கிறேன்.
இந்தக் கட்சியை மிகக் கவனமாக இப்போதுள்ள கட்டத்திலிருந்து தாண்ட வைப்பது முக்கியமாகும். இந்த விடயத்தின் உண்மையான பரிமாணத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டத்தை கூட்டினேன்.
ஏனென்றால், மக்கள் மிகவும் ஆத்திரத்தோடு இருக்கிறார்கள். எமது போராளிகள் மிகவும் ஆவேசத்தோடு இருக்கிறார்கள். இதுவொரு பலமான இயக்கம். வெறும் அரசியல் அதிகாரத்திற்கு பின்னால் அள்ளுண்டு போகும் இயக்கமல்ல.
 பிச்சை வேண்டாம். நாயைப் பிடி என்று போனதால் தான் எங்களுக்குத் தலை குனிவு ஏற்பட்டது.
என்னைப் பொறுத்தவரை எந்த அரசாங்கமாக இருந்தாலும் அமைச்சுப் பதவிகளை எடுக்காமல் ஆதரவு அளிப்பது கட்சிக்கு மிகப் பெரிய கௌரவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அமைச்சுப் பதவிக்காக பல்லிளிப்பது மிகவும் கேவலமானது எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKalv6.html
மைத்திரியின் ஆட்சியில் பெற்றோல் டீசல் வரிகள் நீக்கம்- பசில் கட்சி தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: சம்பிக்க
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 03:40.38 AM GMT ]
மைத்திரிபாலவின் புதிய அரசாங்கத்தின் கீழ், பெற்றோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் நீக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
பெற்றோலுக்கு தற்போது 52 ரூபா வரியும் டீசலுக்கு 17 ரூபா வரியும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மைத்திரிபால ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதும் இந்த வரிகள் நீக்கப்படும் என்றும் ரணவக்க குறிப்பிட்டார்.
இன்று நாடு கசினோ, ஹெரோய்ன், சிகரட் போன்ற ஐந்து தரப்பின் ஆதிக்கத்துக்கு உட்பட்டுள்ளது.
இவற்றை இல்லாதொழிக்க மைத்திரியின் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரணவக்க தெரிவித்தார்.
இலங்கை விவசாய நாடாக இருந்தபோதும் 40வீதமான மரக்கறிகள் இறக்குமதி செய்யப்படுவதை ரணவக்க சுட்டிக்காட்டினார்.
பசில் ராஜபக்ஸ கட்சி தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை- சம்பிக்க ரணவக்க
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ எம்முடன் இணைந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவிசாவலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ஸ முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகித்தவர். அவர் மீளவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள மாட்டார் என்பதில் நிச்சயமில்லை.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவான உடன், 120 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகி, எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார்கள்.
இன்று சிங்கங்களைப் போன்று கர்ச்சிக்கும் பலர் தேர்தலின் பின்னர் மைத்திரியிடம் வருவார்கள். தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கோருவார்கள்.
சில வேளைகளில் நாமல், சமால் மற்றும் பசில் ராஜபக்ச எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ளாமல் இருக்கலாம்.
இதில் பசில் ராஜபக்சவை நம்ப முடியாது ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே அவர் சுதந்திரக் கட்சிக்கு சென்றிருந்தார்.
மைத்திரிபால ஜனாதிபதியான உடன் 170 ஆசனங்களைக் கொண்ட வலுவான ஓர் அரசாங்கம் உருவாக்கப்படும் என சம்பிக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKalw4.html
மகிந்தவை தொடர்ந்து ஆட்சியில் அமர்த்தி தாலாட்டு பாட, நாங்கள் முட்டாள்கள் அல்ல: மனோ
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 04:04.03 AM GMT ]
பொது எதிரணி கூட்டணிக்கு,  தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இரகசிய  ஒப்பந்த கூட்டு இருக்கின்றது என்று அரசாங்கம் சொல்லித்திரிகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்த கூற்றுக்கு துணையாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இதை ஒரு பெரிய விவகாரமாக நேற்றும் பேசியுள்ளார்.
விமல் வீரவன்ச, சுசில் பிரேமஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, உதய கம்மன்பில என்று ஒரு கூட்டமே இதை திரும்ப, திரும்ப பேசி வருகிறது.
இவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். உண்மைதான், எமக்கு ஒப்பந்தம் இருக்கின்றது. அதுவும் இரகசிய ஒப்பந்தம் அல்ல, பகிரங்க ஒப்பந்தமே இருகின்றது. ஆனால், எமது ஒப்பந்தம் கூட்டமைப்புடன் அல்ல.
எமது ஒப்பந்தம், கூட்டமைப்புக்கு வாக்களித்த, வடக்கில், கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடன்தான் இருக்கின்றது என அவிசாவளையில் நேற்று மாலை நடைபெற்ற எதிரணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மனோ மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் வடக்குக்கு வாக்கு தேடி போயுள்ளார்.
மகிந்தவுக்கு யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும், முல்லைத்தீவுக்கும், மன்னாருக்கும், கிழக்கிலே மட்டக்களப்பிற்கும், திருகோணமலைக்கும், அம்பாறைக்கும் சென்று வாக்கு கேட்க முடியும் என்றால், எங்களுக்கு வடக்கிற்கும், கிழக்கிற்கும் சென்று வாக்கு கேட்க முடியாதா?
வடக்கு, கிழக்கு இரண்டுமே இந்த நாட்டின் மாகாணங்கள். அங்கே வாழும், 16 இலட்சம் தமிழர்களில் பத்து இலட்சம் பேர் வாக்காளர்கள். அவர்களின் பெயர்கள் இந்த நாட்டு தேர்தல் ஆணையாளரின் வாக்காளர் இடாப்பில் உண்டு.
ஆகவேதான் அவர்களின் வாக்குகளை நாங்கள் நாடுகின்றோம். ஆகவேதான் அந்த மக்களுடன் நமக்கு பகிரங்கமாக ஒப்பந்தம் இருக்கின்றது என்று இந்த மேடையில் இருந்து பகிரங்கமாக கூறுகிறேன்.
ஒப்பந்தம் ஒன்றை செய்து மகிந்தவை தொடர்ந்து ஆட்சியில் அமர்த்தி தாலாட்டு பாட, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் முட்டாள்கள் அல்ல.
நாங்களும் முட்டாள்கள் அல்ல. இந்த தேர்தல் பாராளுமன்ற தேர்தல் அல்ல. மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தலும் அல்ல. இது ஒரு தேசிய தேர்தல். இன்று, முழு நாடுமே ஒரு தேர்தல் மாவட்டமாக மாறிவிட்டது.
இதில் பல சின்னங்கள் இல்லை. விருப்பு வாக்கு இலக்கங்கள் இல்லை. பத்தொன்பது பேர் போட்டியிட்டாலும், போட்டி இரண்டு பேருக்கு இடையில்தான். அது வெற்றிபெறும் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தோல்வியடையும் மகிந்த ராஜபக்சவுக்கும்தான்.
மைத்திரியின் சின்னம், அன்னம் என்ற எங்கள் சின்னம். மகிந்தவின் சின்னம் வாயில் போட்டு மெல்லும் வெற்றிலை என்ற சின்னம். இது இன்று முழு நாடும் அறிந்த தகவல்.
வடக்கின், கிழக்கின், மலையகத்தின், இங்கே மேலகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்துவிட்ட தகவல். இந்த தகவலை மேலும் விளக்க நாளை முதல் மலையகம், வடக்கு, கிழக்கு மாவட்டங்களுக்கு எதிரணி தலைவர்களுடன் நான் வருவேன்.
இங்கே எனது மாவட்டம் கொழும்பையும், கம்பஹாவையும் எனது உண்மை தம்பிமார்கள் பார்த்துக் கொள்வார்கள். கொழும்பு, கம்பஹா மாவட்ட தமிழ் பேசும் மக்கள் எனது மக்கள். இவர்கள் மீது எந்த ஒரு சாத்தானும் கைவைக்க முடியாது.
இங்கே வாழும் எனது மக்கள் என்னை கைவிடமாட்டார்கள் என்பது தினசரி காலையில் சூரியன் உதிப்பதைபோல், திட்டவட்டமான உண்மை. நாடு முழுக்க ஒலிக்கும் "அன்னம் எங்கள் சின்னம்" என்ற கோஷத்தை இன்னமும் வலுவாக உறுதிப்படுத்திவிட்டுத்தான் வீடு திரும்புவேன் என்றார்.
இக்கூட்டத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKalw7.html

Geen opmerkingen:

Een reactie posten