vrijdag 19 december 2014

சண்மாஸ்டரின் மனைவி, பிள்ளைகள் கட்டுநாயக்கவில் கைது

பொது வேட்பாளரை ஆதரித்த இருவரின் கடைகள் உடைப்பு
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 09:32.31 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படும் இரண்டு குடும்பங்களுக்கு சொந்தமான இரண்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
உடுகம பார் சந்திக்கு அருகில் இருக்கும் இரண்டு கடைகளை கனரக வாகனம் ஒன்றினால் மோதி இடித்துள்ளதாக பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைகளை உடைத்த பின்னர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட குழுவினர் தம்மை அச்சுறுத்தியதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தன்னை மீறி இந்த பிரதேசத்தில் எவரும் எதனையும் செய்ய முடியாது என அந்த அரசியல்வாதி கூறியதாக அயல் வாசிகள் கூறியுள்ளனர்.
குறித்த அரசியல்வாதியின் சகாவான தென் மாகாண அமைச்சர் உடைத்த கடைகளை நிர்மாணித்து கொடுக்க உள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCSdKako3.html
சாந்தினி சந்திரசேகரன் பதவி விலக மறுப்பு!– மலையக மக்கள் முன்னணி கட்சிக்குள் பிளவு!
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 10:00.06 AM GMT ]
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் காலம் சென்ற பின் சந்திரசேகரின் மனைவிக்கு இக்கட்சியின் பொறுப்பு வழங்கப்பட்டது.
எனினும் அது சில தடுமாற்றங்களில் இருந்த கால கட்டத்தில் நுவரெலியா பா.உ. வே.ராதாகிருஷ்ணன் இக்கட்சியின் அரசியல் தலைவராக பொறுபேற்று மீண்டும் கட்சியின் வளர்ச்சி பாதையை நோக்கி நகரத் தொடங்கிய நிலையில் அரசுடன் இவர்கள் இணைந்தும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இதன் காரணமாக சாந்தினி சந்திரசேகரன் ஜனாதிபதியின் கீழ் ஒருங்கிணைப்பாளராகி சகல வசதியையும் அரசு அவருக்கு வழங்கியிருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் முதலில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்த போதும் பின் ஆதரவை விலக்கிக் கொண்டது.
அதன் காரணமாக பிரதி அமைச்சர் பதவியை விட்டு ராதாகிருஷ்ணன் விலகினார், அதை தொடர்ந்து ஊவா மாகாணத்தில் போட்டியிட்டு தோல்வி கண்ட அரவிந்த குமாருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இயக்குனர் பதவியையும் அவர் இராஜினாமா செய்தார்.
ஆனால் சாந்தினி சந்திரசேகரன் பதவி விலகவில்லை. இவருக்கு ஆதரவாக நுவரெலியா பிரதேச தலைவர் சதாசிவமும் அரசுடன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று உறுதியுடன் இருப்பதால் இப்பொழுது மலையக மக்கள் முன்னணிக்குள் கடும் பிளவு ஏற்பட்டுள்ளது.
இன்றும் இப்பொழுதும் இந்த இருவரையும் சமாதானப்படுத்தும் வகையில் உயர்மட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றது முடிவு என்ன? என்பதை மாலைக்குள் தெரியவரலாம்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKako4.html
அரச தனியார் அலுவலகங்களில் தேர்தல் பிரசாரத்திற்கு தடை: தேர்தல்கள் செயலகம்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 10:38.07 AM GMT ]
அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க தேர்தல்கள் செயலகம் தடை விதித்துள்ளது.
எந்தவொரு அரசாங்க அல்லது மாகாண சபை அலுவலகங்களிலோ, பாடசாலைகளிலோ உள்ளூர் அதிகார சபைகளினுள்ளோ, வேறு எந்த நிறுவனங்களிலோ ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பிரசாரங்கள் மேற்கொள்ளவும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்வதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டுமென அனைத்து அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள், மற்றும் தொழிற்சங்க செயலாளர்களுக்கு தெரிவித்துக் கொள்வதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது குறித்து நிறுவனங்களின் தலைவர்களும் கவனத்திற் கொள்வது முக்கியமானதொன்றாகும்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKako6.html
ஜனாதிபதியை சந்திக்க வேண்டும்! மட்டக்களப்பு எல்லைப்புற மக்கள் ஆர்ப்பாட்டம்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 10:47.18 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு விஜயத்தை முன்னிட்டு அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மையின மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு வரும் ஜனாதிபதியை சந்திக்காமல் செல்ல மாட்டோம் என மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் வாழ்கின்ற சில பெரும்பான்மையின மக்கள், மட்டக்களப்பு நகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட புளுக்குனாவை பகுதி மக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தல் பிரசாரத்திற்காக மட்டக்களப்புக்கு இன்று வருகைத்தரவிருக்கும் நிலையில் தேர்தல் பிரசாரகூட்டம் நடைபெறவிருக்கும் பகுதிக்கு அருகிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் குறித்த பகுதியில் தாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும் தமக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும் வாக்குரிமை வழங்கப்படவில்லையென்றும் பிரதேச செயலகம் மாவட்ட செயலகம் என்பவற்றில் தமது பதிவுகள் எதனையும் பெற முடியாதுள்ளதாகவும் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாகவே தாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கைக் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியை சந்திக்கும் வரை தாம் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பிரதான பொலிஸ் நிலையத்திற்கு முன்பான வீதியிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
http://www.tamilwin.com/show-RUmszCSdKako7.html
அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் உக்கிரம்: வெளிநாடு பறந்த பசில்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 11:27.40 AM GMT ]
அரசாங்கத்திற்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருத்து முரண்பாட்டு மோதல்கள் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வார காலமே எஞ்சியிருக்கும் நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இப்படியான சூழலில் ஏனைய அமைச்சர்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பிரசாரங்களில் கலந்து கொள்ளாதிருப்பதால், அவரது தேர்தல் பிரசாரம் ஸ்தம்பித்துள்ளது.
அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சுகாதார அமைச்சை வழங்க வேண்டாம் என ஜனாதிபதிக்கு பசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியிருந்தார்.
அதனை மீறி, ஜனாதிபதி, திஸ்ஸ அத்தநாயக்கவை சுகாதார அமைச்சராக நியமித்த பின்னர், பசில் ராஜபக்ஷ முழுமையான அமைதியாகியுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்கினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரிய அதிருப்தி ஏற்படக் கூடும் என பசில் ராஜபக்ஷ எச்சரித்திருந்ததாக கூறப்படுகிறது.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாடுகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இருந்தே ஈடுபட்டு வந்ததுடன் தேர்தல் பிரசார அலுவலகங்களை திறந்ததுடன் நடவடிக்கை காரியாலங்களையும் திறந்து நேரடியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakpz.html
ஆளுங்கட்சி உறுப்பினர் இருவர் எதிரணியில் இணைவு - எகலியகொட பிரதேச சபைத் தலைவர் மைத்திரிக்கு ஆதரவு
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 11:37.07 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கோட்டை நகரசபை உறுப்பினர்கள் இருவர் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தலைமையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தனுக விஷ்வஜித் மற்றும் ரஞ்ஜன் பொன்னம்பெரும ஆகியோரே இவ்வாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து எதிரணியில் இணைந்த எகலியகொட பிரதேச சபைத் தலைவர்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிகாரத்தில் இருக்கும் எகலியகொட பிரதேச சபையின் தலைவர் சரத் சந்தநாயக்க, இரண்டு உறுப்பினர்களுடன் பொது எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டார்.
கொழும்பு திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் உள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரதான அலுவலகத்தில் அவர் இரண்டு உறுப்பினர்களுடன் இணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்.
பிரதேச சபை உறுப்பினர்களான சோதிராஜாகே கருணாதாச, ஈ.பி.சுனில் கருணாரத்ன ஆகியோரை இவ்வாறு அவருடன் எதிரணியில் இணைந்தனர்.
இதனால், எகலியகொட பிரதேச சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆகவும் எதிர்க்கட்சியின் எண்ணிக்கை 8 ஆகவும் சமானாகியுள்ளது.
பிரதேச சபையில் ஆளும் கட்சி 11 உறுப்பினர்களையும் எதிர்க்கட்சி 5 உறுப்பினர்களையும் கொண்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakp0.html
சண்மாஸ்டரின் மனைவி, பிள்ளைகள் கட்டுநாயக்கவில் கைது
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 11:48.24 AM GMT ]
இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட மூவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.நா.விசாரணைகளுக்கு ஆவணங்களை சேர்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்ட ஆழ்வாப்பிள்ளை விஜேந்திரகுமாரின் (சண்மாஸ்டர்) மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று விமான நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்மாஸ்டரின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தனது கணவர் இந்தியாவில் உள்ளார் என்றும் அவரிடமே தாம் செல்லவிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakp1.html

Geen opmerkingen:

Een reactie posten