maandag 17 november 2014

தமிழர்களின் நலன் காக்கும் வேட்பாளருக்கே ஆதரவு! ஆனந்த சங்கரி (செய்தித் துளிகள்)!

ஆட்டோ மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு! இரண்டு பேர் படுகாயம்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 01:34.29 AM GMT ]
கொழும்பை அண்மித்த ஹோகந்தரை பிரதேசத்தில் ஆட்டோ ஒன்றின் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த ஆட்டோவில் ஹோகந்தரை பிரதேசத்தில் இருந்து கொட்டாவைக்கு சட்டவிரோத பொருட்களை ஏற்றிச் செல்வதாக தகவல் கிடைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இடைவழியில் ஆட்டோவை மறித்து நிறுத்த முயன்றபோதும், கட்டளையை மீறி வேகமாகத் தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஆட்டோ சாரதியும், அதில் பயணித்த மற்றொருவரும் காயமடைந்துள்ளனர். எனினும் சட்டவிரோதமான பொருட்கள் ஏதேனும் ஆட்டோவில் இருந்து கைப்பற்றப்பட்டமை தொடர்பில் பொலிசார் தகவல் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டின் பின்னர் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjo0.html
தமிழர்களின் நலன் காக்கும் வேட்பாளருக்கே ஆதரவு! ஆனந்த சங்கரி (செய்தித் துளிகள்)
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 01:58.05 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் நலன் காக்கும் வேட்பாளருக்கே ஆதரவளிக்கப் போவதாக தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல்களின் போது தமிழ் மக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.
எனவே எதிர்வரும் தேர்தலின்போது தமிழர்களின் நலன் காக்கும் பொருத்தமான நபருக்கே எமது கட்சி ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.
மேலும் இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து எந்தவொரு அரசியல் முடிவையும் எடுப்பதில்லை என்று எமது கட்சி தீர்மானித்துள்ளது. அதற்குப் பதிலாக தனித்து இயங்க நாம் தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வெற்றியே நாட்டின் சுபீட்சம்! பிரதியமைச்சர் ஏக்கநாயக்க
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி நாட்டின் சுபீட்சத்துக்கு வலு சேர்க்கும் என்று பிரதியமைச்சர் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ பிரதியமைச்சர் ஏ.பீ. ஏக்கநாயக்க இன்றைய தினமிண சிங்களப் பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் அனைத்து துறைகளும் முன்னேற்றம் கண்டுள்ளது. அனைத்து பிரதேசங்களும் அபிவிருத்தி அடைந்துள்ளது.
யுத்த வெற்றியை மட்டும் ஜனாதிபதியின் சாதனையாக கருத முடியாது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தியும் அவரது சாதனைகளில் முக்கியமானது.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றி நாட்டை மீண்டும் சுபீட்சப்பாதையில் இட்டுச் செல்வதற்கு வழிவகுக்கும்.
எதிர்க்கட்சிகள் ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறப் போவதில்லை. மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள் என்றும் பிரதியமைச்சர் ஏக்கநாயக்க தனது நேர்காணலில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எயிட்ஸ் நோய்த் தொற்று துரித கதியில் அதிகரிப்பு
இலங்கையில் எயிட்ஸ் நோய்த் தொற்று துரித கதியில் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று மாதங்களுக்குள் மட்டும் புதிதாக எயிட்ஸ் நோய் தொற்றிய நோயாளிகள் 59 பேர் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்கள் என்றும், வேறு சிலர் வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்கு வந்து செல்பவர்களுடன் நட்பு கொண்டிருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டவில்லை. ஆனால் யுத்த நிறைவின் பின்னர் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு சமாந்தரமாக எயிட்ஸ் நோயின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு கூட்டம் இன்று!
ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழுவின் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இன்று மாலை தொடங்கும் மத்திய குழுக் கூட்டம் நள்ளிரவு வரை நடைபெறும் வாய்ப்பிருப்பதாக அக்கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை ஹெல உறுமயவின் நிபந்தனைகள் தொடர்பில் ஆளுங்கட்சியிலிருந்து அளிக்கப்பட்டுள்ள எழுத்து மூல உத்தரவாதம் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
ஆளுங்கட்சியின் எழுத்து மூல உத்தரவாதத்தை நம்ப முடியாது என்றும், அரசாங்கத்திலிருந்து விலகுவது புத்திசாலித்தனமானது என்றும் ரத்ன தேரர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலர் சனிக்கிழமை பின்னேரம் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தீர்மானித்துள்ளனர்.
எனினும் மேல்மாகாண சபை அமைச்சர் உதய கம்பன்பில, மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, எல்லாவல மேதானந்த தேரர் உள்ளிட்ட சிலர் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதையே விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.
இன்றைய மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவும் ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjo2.html

Geen opmerkingen:

Een reactie posten