maandag 17 november 2014

நாடு முழுவதும் 21,000 குற்றவாளிகள் கைது - நிட்டம்புவ நகரில் கூட்டுப் பாலியல் வல்லுறவு! மூவர் கைது!

கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக்குமாறு பிக்குகள் முன்னணி ரணிலுக்கு கடிதம்!
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 12:04.01 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கரு ஜயசூரிய முன்னிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் இந்த பிக்கு முன்னணியின் தலைவர் கிரம்பே ஆனந்த தேரர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும் கரு ஜயசூரிய எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்படாத பட்சத்தில் தாம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி ஆகியவற்றை விட்டும் விலகப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இது தொடர்பில் கிராம்பே ஆனந்த தேரர் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாகவும் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தலை அறிவியுங்கள், வேட்பாளரை அறிவிக்கின்றோம்! ரணில் சவால்
அரசாங்கம் முதலில் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கட்டும், அதன் பின்னர் நாங்கள் வேட்பாளரை அறிவிப்போம் என்று ரணில் விக்கிரமசிங்க சவால் விட்டுள்ளார்.
களுத்துறையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம் இதுவரை தேர்தலை அறிவிக்கவில்லை. ஆனால் எங்களிடம் வேட்பாளர் குறித்து கேள்வியெழுப்புகின்றது.
நாங்கள் எந்த ஒரு விடயத்தையும் உரிய நேரத்தில் சிறப்பாக செய்து பழக்கப்பட்டவர்கள். எனவே முதலில் தேர்தலை அறிவிக்குமாறு நான் அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றேன்.
அதன் பின் நாங்கள் எங்கள் வேட்பாளரை அறிவிப்போம் என்றும் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இந்த வைபவத்தில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வது உள்ளிட்ட முக்கிய மூன்று விடயங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பொது இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த இணக்கப்பாடு எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்துக்கு பாரிய சவாலாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYkw7.html
மைத்திரிபாலவை சமாதானப்படுத்த சகோதரருக்கு அள்ளிக் கொடுக்கப்படும் வரப்பிரசாதங்கள்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 12:09.47 AM GMT ]
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை சமாதானப்படுத்துவதற்காக அரசாங்கம் அவரது சகோதரருக்கு வரப்பிரசாதங்களை அள்ளிக் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் செயல்பாடுகளில் கடும் அதிருப்தி கொண்டுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் மிகச் சிறந்த நல்லுறவுகளையும் பேணி வருகின்றார்.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது அமைச்சர் மைத்திரிபால, ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி. யின் சார்பில் பொது வேட்பாளராக களமிறங்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
எனினும் சந்திரிக்காவின் தலையீட்டின் பேரில் எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணியுடன் இணைந்து கொள்ள அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உளவுப்பிரிவின் தகவல்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
இதனையடுத்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கட்சி தாவும் முடிவிலிருந்து தடுத்து நிறுத்துமாறு அவரது சகோதரர் டட்லி சிறிசேனவிடம் அரசாங்கம் மண்டியிட்டுள்ளது.
அதற்குப் பதிலாக எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது டட்லியை அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து, அவருக்கு முக்கிய அமைச்சுப் பதவி வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் பசில் ராஜபக்ச நேரடியாகச் சென்று டட்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் அமைச்சரின் தொலைபேசி ஊடாக ஜனாதிபதியும் டட்லியுடன் உரையாடியுள்ளார்.
ஜனாதிபதி தரப்பின் வேண்டுகோளுக்கு டட்லி சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு வெளிநாட்டுக்கான உல்லாச சுற்றுலா ஒன்றும் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப டட்லியும் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் சிங்கள இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYkxy.html
மஹிந்த, புதிய தொழில்துறைகளை ஆரம்பிக்கவில்லை! - இனவாதம், மதவாதம் என்பனவே அரசாங்கத்தின் ஆயுதம்! - நத்தார் காலத்தில் தேர்தல், கிறிஸ்தவர்களை அவமதிக்கும் செயல்!- ரணில்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 12:23.17 AM GMT ]
கடந்த 10 வருடங்களில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்காத சாதனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாகவே இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்கின்றனர்.
இவ்வாறான நிலைமை முன்னெப்போதும் இடம்பெறவில்லை என்று ரணில் குறிப்பிட்டார்.
களுத்துறையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவியில் இருந்து காலத்தில் புதிய தொழில்வாய்ப்புக்கள் எதுவுமே தொடங்கப்படவில்லை.
புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படவில்லை. புதிய வர்த்தக வலயங்கள் திறக்கப்படவில்லை என்றும் ரணில் சுட்டிக்காட்டினார்.
இனவாதம், மதவாதம் என்பனவே அரசாங்கத்தின் ஆயுதம்! ரணில் விக்கிரமசிங்க
அரசாங்கம் தனது தோல்வியை தவிர்த்துக் கொள்ள இனவாதம் மற்றும் மதவாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் ஒன்று கூடல் வைபவமொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத்தேர்தல் மூலம் அரசாங்கத்தின் தோல்வி ஆரம்பமாகி விட்டது.
எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி மூலம் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை தடுக்கவும், அரசாங்கத்தின் தோல்வியைத் தடுத்துக் கொள்ளவும் இனவாதம், மதவாதம் என்பவற்றை அரசாங்கம் கையில் எடுத்துக் கொண்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியை விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்தியாக சித்தரிக்க முயன்று வருகின்றது. எனினும் இது போன்ற பிரச்சாரங்களால் எமது கட்சியின் வெற்றியை அரசாங்கத்தினால் இனி தடுத்து நிறுத்த முடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நத்தார் காலத்தில் தேர்தல், கிறிஸ்தவர்களை அவமதிக்கும் செயல்! ரணில் விக்கிரமசிங்க
எதிர்வரும் நத்தார் காலத்தின் போது ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின் முடிவு கிறிஸ்தவர்களை அவமதிக்கும் செயல் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதக் கடைசியில் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான நத்தார் கொண்டாடப்படவுள்ளது. எனினும் டிசம்பர் மாதம் முழுவதும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரச்சாரப் பணிகள் நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக கிறிஸ்தவர்களின் நத்தார் கொண்டாட்டங்களை அரசாங்கம் அவமதித்துள்ளது . கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி எந்தவொரு சிறுபான்மை இனத்துக்கும் இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு, மரியாதை எதுவுமே கிடையாது என்றும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYkxz.html
பொதுவேட்பாளர் நிலைப்பாடு! ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவரும்!- அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 12:30.10 AM GMT ]
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் நிலைப்பாடானது,  அங்கு ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வரும் செயற்பாடு என்று சிறப்பு அதிகாரங்களுக்கான அவுஸ்திரேலிய ஆலோசனை அமைப்பு தெரிவித்துள்ளது. 
இதன் மூலம் இலங்கையில் புதிய சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்றும் அந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
விமல் வீரக்கொடி,  சியாமொன் ஜெயசிங்க உட்பட்ட பல இலங்கையர்கள் இந்த அமைப்பில் அங்கத்தவர்களாக உள்ளனர்.
அவர்கள் விடுத்துள்ள குறிப்பு ஒன்றில், நாடு இன்று இராணுவமயப்பட்டு சிவில் நிர்வாகம் அற்ற நிலையில் உள்ளது அரச நிர்வாகம் முழுமையாக சீர்குலைந்து போயுள்ளது.
இதற்கு இலங்கையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே காரணமாக இருந்திருக்கிறது என்றும் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYkx0.html
ஆயுதங்களைக் காட்டி அதிவேகப் பாதையில் கொள்ளை!
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 12:40.55 AM GMT ]
நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதையில் ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளைச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாண அதிவேகப் பாதை நிர்மாணப் பணிகளுக்கென எடுத்து வரப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட இரும்புக் கம்பிகளின் பெறுமதி ஒரு லட்சத்தி முப்பத்தி ஐயாயிரம் ரூபா என்று தெரிய வருகின்றது.
கொள்ளையைத் தடுக்க முயன்ற பாதுகாவலர்களை ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி இரும்புக் கம்பிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
கடவத்தை சந்திக்கு அருகில் உள்ள மங்கட எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தக் கொள்ளையில் தொடர்புடைய இரண்டு பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய கொள்ளையர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYkx2.html

எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணி, பிரிவினைவாதிகளின் கூடாரம்!- சிங்கள பத்திரிகை
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 12:47.13 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கெதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணி பிரிவினைவாதிகளின் கூடாரம் என்று  சிங்கள பத்திரிகையொன்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினமின பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் நிலவிய மூன்று தசாப்த கால யுத்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வெற்றிகரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இது புலிகளின் ஆதரவாளர்களுக்கு மட்டுமன்றி மேற்கத்தேய நாடுகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. அதன் காரணமாக ஜனாதிபதி மஹிந்தவை பதவியில் இருந்து அகற்ற அவர்கள் முனைப்புடன் செயற்படுகின்றனர்.
கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் சரத் பொன்சேகா சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டார்.
அப்போது அவரது அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட புத்தம் புதிய டொலர் நோட்டுக் கத்தைகள் தொடர்பில் இன்று வரை நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் மூலம் அவர் வெளிநாடுகளின் தேவைக்கேற்பவே தேர்தலில் போட்டியிட்டார் என்பது தெளிவாகின்றது.
அதே போன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்ற பெயரில் ஒருவரை முன்னிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றின் பின்னணியில் பிரிவினைவாதிகளும், அவர்களுக்கு ஆதரவான சக்திகளுமே உள்ளனர். இவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYkx3.html
ஜனாதிபதி மஹிந்த 57 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வார்!– சுசில் பிரேமஜயந்த
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 12:57.25 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 57 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வார் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இரண்டாம் சுற்று வாக்கு எண்ணுவதற்கான தேவை இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் விருப்பு வாக்கு அடிப்படையில் ஜனாதிபதி யார் என்பதனை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு சக்திகளுக்கு தேவையானவாறு ஜனாதிபதி செயற்பட்டிருந்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது.
ஜனாதிபதியை தோற்கடிக்கும் எண்ணத்தைத் தவிர வேறும் எந்தவொரு திட்டங்களும் எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது.
பாணந்துறை நகரசபைத் தலைவர் நந்தன குணதிலக்க கட்சியை வட்டு விலகியமை அரசாங்கத்திற்கு மட்டுமன்றி பாணந்துறைப் பகுதியில் கூட பிரச்சினையை ஏற்படுத்தாது.
ஆளும் கட்சியில் போட்டியிட்ட காரணத்தினால் நந்தன குணதிலக்க வெற்றியீட்டியதாகவும் சுயாதீனமாக போட்டியிட்டிருந்தால் வெற்றியீட்டியிருக்க முடியாது எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று பங்கேற்ற போது அவர் இனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYkx4.html
நாடு முழுவதும் 21,000 குற்றவாளிகள் கைது - நிட்டம்புவ நகரில் கூட்டுப் பாலியல் வல்லுறவு! மூவர் கைது
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 01:22.45 AM GMT ]
நாடு முழுவதும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 21 ஆயிரம் குற்றவாளிகள் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் சகல பொலிஸ் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் கைரேகைகளை கணனி மயப்படுத்தியதன் காரணமாக இவ்வாறு பெருந்தொகையான குற்றவாளிகளை கைது செய்ய முடிந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண, நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் கொலை, கொள்ளை, கப்பம் பெறல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டோரும் உள்ளடங்கி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவையில் கூட்டுப் பாலியல் வல்லுறவு! மூவர் கைது
மருத்துவ சிகிச்சைக்காக நிட்டம்புவை நகருக்கு வருகை தந்திருந்த யுவதியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் நேற்று அத்தனகல்லை நீதிவான் முன்பாக ஆஜர் செய்யப்பட்ட போது இரண்டு வாரங்களுக்கு அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் யுவதியை கடத்திச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டியையும் பறிமுதல் செய்யுமாறும் நீதிபதி பொலிசாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த இளைஞர்கள் மூவரும் ஆளுங்கட்சி பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் என்று மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் ஒருவர் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர் என்றும் தெரிய வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjoy.html

Geen opmerkingen:

Een reactie posten