dinsdag 18 november 2014

அரச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமையினால் நோயாளிகள் சிரமம்!



மலையக பகுதிகளில் பல இடங்களில் அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்ற போதிலும் அதன் சேவைகள் சரியாக இடம்பெறுகின்றது என கூறமுடியாத நிலையில் மக்கள் வைத்தியசாலைகள் தொடர்பாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
சில வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாமலும் அடிப்படை வசதியற்ற நிலையிலும் வைத்தியர்கள், ஊழியர்கள் காணப்படுவது மலையக சமூகத்திற்கு கிடைத்த அவலமாகும்.
அரச வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்களிடம் மருந்து இல்லையென்றும் தனியார் மருந்தகங்களில் மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் வைத்தியர்கள் கூறுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அரசாங்கத்தில் பல அதிகாரிகள் நியமித்திருக்கின்ற போதிலும் எந்த அதிகாரிகள் இவ்வாறான குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்திருக்கின்றார்கள்?
அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை முதல் வைத்தியர்கள் இல்லாமல் சிகிச்சைகாக சென்ற பொதுமக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக இவ்வைத்தியசாலையில் 3 வைத்தியர்கள் கடமையாற்றி வந்த போதிலும் ஒரு வைத்தியர் பிரசவ விடுமுறைக்காகவும், மற்றுமொரு வைத்தியர் சுகயீன காரணமாகவும் விடுமுறை எடுத்துள்ளதாக வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு வைத்திய அதிகாரி மூன்று நாட்களாக தனியாக வைத்தியசாலையை நிர்வாகித்ததோடு வெளிநோயாளர்களுக்கும் சிகிச்சை அளித்துள்ளார்.
அத்துடன் அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வைத்தியசாலையில் இருந்து வீடு செல்லும் போது தவறி விழுந்ததில் கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்த நிலையில் அக்கரப்பத்தனை வைத்திசாலையில் மாற்று வைத்தியர்கள் நியமிப்பதற்கு எந்த அதிகாரிகளும் முன்வரவில்லை.
இதன் காரணமாக மூன்று நாட்களாக நோயாளர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் வைத்தியசாலைக்கு சிகிச்சைகாக வரும் போது திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
சில நோயாளர்கள் கடும் வழியை பொறுத்து கொள்ள முடியாமல் செய்வது அறியாமல் அழுது புலம்புகின்றார்கள், அதுமட்டுமின்றி சில பணியாளர்கள் நோயாளர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சினை தொடர்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களில் தொலைபேசி இலக்கங்கள் இயங்காமல் அவர்களின் பிரத்தியேக செயளாலர்களின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடிந்தது. அவர்களின் பதிலும் திருப்திகரமாக அமையவில்லை.
இதே வேளை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான கௌரவ இராதகிருஸ்ணன் அவரின் தொலைபேசிக்கு மாத்திரமே தொடர்புகொள்ள முடிந்தது.
வைத்தியசாலை தொடர்பாக இவர் தெரிவிக்கையில் சுகாதார உயர் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவிப்பதாக தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjuy.html

Geen opmerkingen:

Een reactie posten