தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 november 2014

முன்னாள் போராளி சுட்டுக் கொலை! இராணுவமே பொறுப்பு என்கிறது கூட்டமைப்பு!



யாழ். அதிவேகப் பாதைக்கு இன்று அடிக்கல் நாட்டும் விழா!
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 05:03.02 AM GMT ]
இலங்கையின் மிகப் பெரும் அபிவிருத்தி செயற்திட்டமான யாழ். அதிவேகப் பாதைக்கு இன்று அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ரம்புக்கனை மற்றும் கலேவெல பிரதேசங்களில் இன்றும், பொத்துஹரயில் நாளையும் மூன்று தடவைகளில் அடிக்கல் நாட்டி வைத்து, நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதை கம்பஹா , வத்தளை , எண்டேரமுல்லயில் இருந்து ஆரம்பிக்கின்றது. இங்கிருந்து கம்பஹா நகரைத் தாண்டும் வரையிலும் அதிவேகப் பாதை பறக்கும் பாதையாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
பின்னர் முதலாவது கட்டமாக தம்புள்ளை வரை இந்தப் பாதை நிர்மாணிக்கப்படும்.
தற்போதைக்கு நான்கு வழிப் பாதையாக நிர்மாணிக்கப்படும் அதிவேகப் பாதை எதிர்காலத்தில் தேவையேற்படின் ஆறுவழிப்பாதையாக நிர்மாணிக்கப்படுவதற்கான முறையில் இதன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் நுழைவாயில்களாக கம்பஹா, வேயன்கொடை, மீரிகம தெற்கு, மீரிகம வடக்கு, நாகலகமுவ,பொதுஹர உள்வட்டப் பாதை, தம்பொக்க, குருநாகல், ரிதீகம, மெல்சிரிபுர, கலேவெல, நாரங்வெல உள்வட்டப் பாதை, கலகெதர, ரம்புக்கன, அலதெனிய, கன்னொருவை, தம்புள்ள ஆகிய இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
முதலாம் கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவுற்ற பின்னர் யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையும், தம்புள்ளையிலிருந்து திருகோணமலை வரையும், குருநாகலையிலிருந்து கண்டி வரையும் இந்தப் பாதை விஸ்தரிக்கப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlo5.html

முன்னாள் போராளி சுட்டுக் கொலை! இராணுவமே பொறுப்பு என்கிறது கூட்டமைப்பு
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 03:20.46 AM GMT ]
விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் த.தே.கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளருமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னாரில் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டமையை கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், 
மன்னார் - வெள்ளாங்குளம் இராணுவத்தினரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பிரதேசத்தில் எமது கட்சியின் தீவிர ஆதரவாளரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் இனந்தெரியாத நபர்கள் என்று கூறப்படுவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
எனவே, இந்தச் சம்பவத்துக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். குற்றவாளிகளை அரசு உடன் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தவேண்டும். ஆனால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே.
இந்தக் கொடூர சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நகுலேஸ்வரனின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நகுலேஸ்வரனின் படுகொலையால் முன்னாள் போராளிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணை இடம்பெற்று வருகின்ற நிலையில், வடக்கில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
எனவே, இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கூட்டமைப்பின் எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற வீடமைப்பு, பொறியியல் - நிர்மாணத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியுள்ளார்.
அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர் எனவும், நேற்றுமுன்தினம் மன்னாரில் ஒரு முன்னாள் போராளி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்றும் சபையில் ஆளுந்தரப்பினரைப் பார்த்து செல்வம் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlo3.html

Geen opmerkingen:

Een reactie posten