தொழிற்சங்கம் என்றவுடன் எல்லோரும் நினைப்பது உரிமை, வளமான வாழ்வு, பொருளாதார அபிவிருத்தி. இது மலையக தொழிற்சங்கங்களுக்கு அப்பால் பேச வேண்டிய விடயமாகும்.
மலையகத்திலோ, இனம்,சாதி உறவுகளின் அபிவிருத்திக்காக ஆரம்பிக்கப்பட்டதாகும். ஆம் மக்கள் இடதுசாரிக் கட்சிகளை நம்பி சேர்ந்த பொழுது இந்த பெரிய கங்காணிமார்களுக்கு எதிராகவே செயற்பட்டார்கள்.
இவர்கள் தான் இடைத்தரகர்கள், தோட்ட வெள்ளைக்கார துரைமார்கள் தொழிலாளர்களுக்கு ஏதாவது கொடுக்க நினைத்தால் கூட இவர்கள் அதற்கு தடையாகவே செயல்பட்டார்கள்.
அந்த வழியிலேயே இவர்களின் பரம்பரையில் தொழிற் சங்கங்களை ஆரம்பித்தவர்களின் நிலையும் (இன்றும் அதுவே) அப்படியே தொடர்கிறது.
இந்த தொழிற்சங்க தலைமைகள் மலையக மக்களின் தென் இந்தியா உறவையும் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையும் தங்களுக்கு முதலீடாக மாற்றி கொண்டார்கள்.
ஆம் தென் இந்தியா ( தமிழகத்தை சேர்ந்த நாம் என்று கூறி பிரிவினைவாத தொழிற்சங்க நிலையை ஏற்படுத்தினார்கள் தமிழன் – தமிழனோடு இருப்போம் என்று உணர்ச்சி வசப்படுத்தினார்கள். அதை நம்பிய மக்களோ இன்றும் அநாதைகளாக இருக்கின்றார்கள். அவர்கள்தான் இந்த தோட்ட தொழிலாளர்கள்.
தொழிற்சங்கங்களின் அங்கத்துவ பெருக்கத்திற்காக தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளை தொழிற்சங்க காரியாலயத்தில் முழு நேர உத்தியோகஸ்தர்களாக நியமித்தார்கள்.
இவர்கள் இன்றும் குறைந்த வேதனத்தில் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பான வேலைகளை செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
இவர்களின் திறமை, உறவு முறை முதலானவைகளை முதலீடாக வைத்து அங்கத்துவ பெருக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கின்றார்கள். ஆனால் இவர்களின் வருட வேதனம் இந்த தலைவர்களின் ஒருவேளை உணவிற்கான செலவாகும்.
ஆகவே இந்த முழு நேர உத்தியோகஸ்தர்கள் இந்த தொழிலாளிகள் தொழிற்சங்க காரியாலயத்தை தேவைகளுக்காக நாடும் போது மேலும் இந்த தொழிலாளியிடமிருந்து ஒரு தொகையை லஞ்சமாக பெற்றுக் கொள்கின்றர்கள். இதை கண்டும் காணாது இருப்பது இந்த தலைவர்கள்!
தோட்டங்களில் அங்கத்துவத்தை அதிகரிப்பதற்காக இந்த முழு நேர உத்தியோகஸ்தர்கள் படுகின்றபாடு எழுத்தில் கூற முடியாது.
ஆனால் இந்த மக்கள் அன்று வெள்ளையர்களின் அடிமையாக்கிய பரம்பரை இன்று கருப்பு தோட்ட நிர்வாகிகளுக்கு அடிமையாக்கி, அதே இடைத்தரகர்களாக இன்றும் இருக்கின்றனர்.
இதில் முக்கிய பதவிகள் என்று வரும்போது பணம், நிர்வாகம் தீர்மானிப்பது போன்ற பதவிகள், இந்த குடும்ப உறவினர்களுக்கும் இவர்களின் மிக நெருங்கிய விசுவாசிகளுக்குமே, ஏனையவர்கள் வேலை செய்யவே.
இன்றும் உலகில் சகல தொழில் துறைகளிலும் முதலாளி, தொழிலாளி ஒற்றுமை சிறப்பாக இருக்க கூட்டு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படுகின்றது.
இது வெளியுல நடைமுறையாகும். மலைநாட்டிலோ உண்மை எப்படி என்றால் இந்த தொழிற்சங்க தலைமைகள் முதலாளிமார்களுடன் இரகசியமாக பெறும் தொகை பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு ரூபாய், சத கணக்கில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கு கைசாத்திடப்படுகின்றது.
இதில் கையொப்பம் இடும் அத்தனை தொழிற்சங்க தலைமைகளும் உறவினர்கள் அல்ல. அவர்களின் சாதி சங்கத்தின் முக்கியஸ்தர்களே. வெளியில் ஒருவருக்கொருவர் எதிராக அறிக்கைவிட்டாலும், மாலையில் ஒரு இடத்தில் கூடி கலந்து பேசி எரிகின்ற வீட்டில் பிடிங்கியது ஆதாயம் என்ற பாணியிலேயே இவர்களின் செயல்கள் இன்றும் இருக்கின்றது.
தொழிற்சங்கம் அமைத்தது போல் இவர்கள் சாதி சங்கங்களும் அமைத்துள்ளது. சாதி மக்களுக்கு உதவி செய்ய தோட்டத் தொழிலாளிகளை கருவியாக பயன்படுத்துவதே.
இதை இவர்கள் யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. இந்த தொழிற் சங்க அங்கத்துவ பலத்தின் அடிப்படையிலேயே இவர்கள் அரசியலிலும் உள் வாங்கப்பட்டவர்கள். இந்த மக்களின் வாக்குகளை வைத்து பேரம் பேசி தேர்தல் காலங்களில் பணம் சம்பாதிப்பது இந்த தொழிற்சங்க காலத்தில் நடைபெற்ற உண்மை நிகழ்வாகும்.
தொடர்ந்து அரசு பிரஜாவுரிமையை இந்த மக்களுக்கு வழங்கிய போது, இவர்களுக்கும் அரசியலில் மேலும் சம்பாதிக்கும் ஆசை வந்தது. அதன் தொடர்ச்சியே அரசியலில் தொடரும் தொழிற்சங்க பதவிகளுக்கும் அரசியல் அமைப்பாளர்களாகவும் வர்த்தக சமூகத்தை உள்வாங்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டது.
1977 அதற்கு முன்பும் பெருந்தோட்ட பகுதி மக்கள் எந்த விடயங்கள் என்றாலும் தொழிற்சங்க காரியாலயங்களிலேயே தங்களது குறைபாடுகளை முறையிட்டு அந்த காரியாலயத்தில் சேவையாற்றும் பிரதிநிதிகள் (REPRESENTATIVE) எடுக்கம் தீர்மானம் இறுதி தீர்மானமாக இருக்கும்.
ஒரு இளம் குடும்பத்தினரின் குடும்ப பிரச்சினைகளைக்கூட இந்த பிரதிநிதிமார்கள் எடுக்கும் தீர்மானம் இந்த குடும்பம் ஒன்றுபடுமா?அல்லது பிரிந்து விடுமா என்ற முடிவையும் அவர்களே செய்வார்கள்.
அதையே இந்த குடும்பமும் ஏற்று ஒன்று படலாம் அல்லது அவரின் தீர்ப்பு பாதகமானதாக இருந்தால் அந்த குடும்பம் பிரிந்துவிடும்.
அந்த அளவிற்கு தொழிற்சங்கத்தின் மீது இந்த அப்பாவி மக்கள் நம்பிக்கை இருந்தது. அண்ணன், தம்பிகளை பிரிக்கும் சக்தி,கணவன் மனைவியை பிரிக்கும் சக்தி,தோட்ட மக்களை பிரிக்கும் சக்தி அத்தனையும் இந்த தொழிற்சங்க தலைமைகளே என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அம்மக்களின் ஏமாளித்தனத்தை.
1977ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தை மஸ்கெலியா மாவட்டத்தையும் இணைத்து 3 அங்கத்தவர்கள் பிரதேசமாக மாற்றப்பட்டது.
இதில் காலம் சென்றவர்களான அமைச்சர்கள் காமினி திஸா நாயக்க, அனுர பண்டார நாயக்க சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் பாராளுமன்ற பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டார்கள்.
அந்த காலப்பகுதியில் அனேகமான வர்த்தகர்கள் தேர்தலின் போது தொண்டமானுக்கு எதிராக வெளிப்படையாகவும் திரு காமினி திசாநாயக்கவை ஆதரிப்பதுபோல் இரட்டை வேடம் போட்டார்கள். (உண்மையில் தொண்டமானையே ஆதரித்தார்கள். )
எனினும் தொண்டமான் அவர்கள் மூன்றாவது பிரதிநிதியாக்கினார்கள். அவர் பாராளுமன்றம் சென்று அமைச்சராகிய பின் தோட்ட தொளிலாளர்களை பின் தள்ளினார்.
உறவு முறை, ஜாதி முறை என்றெல்லாம் நகர வர்த்தகர்கள் தோட்ட கமிட்டி என்பது போல் அமைச்சர் வரும் நிகழ்ச்சிகளுக்கு உதவியும், போசனமும் வழங்குவதோடு, நகர கமிட்டி என்ற பெயரில் தோட்ட தலைவர்களாக, மாவட்ட தலைவர்களாக இருந்த தொழிலாளிகள் ஓரம்கட்டப்பட்டார்கள்.
அப்பதவிகளை தங்கள் வசப்படுத்தி அவர்கள் தொழிற்சங்க அரசியல் என்பதை சிறிது சிறிதாக மாற்றி அரசியல் – தொழிற்சங்க நிலையை ஏற்படுத்தினார்கள். இந்த சந்தர்ப்ப மாற்றம் தொழிலாளர்களுக்கு ஏமாற்றமாகியது.
நாம் வரலாறு எழுதுவதாக வாசகர்கள் எண்ணலாம். சில வேளைகளில் வாசிப்பவர்களுக்கும் ஏற்படலாம். ஆனால் நாம் இட்ட தலையங்கத்திற்கு நியாயப்படுத்தி சில விடயங்களை குறிப்பிட்டேயாக வேண்டும்.
அப்பொது தான் உண்மை நிலையை உணர்ந்து எதிர்காலம் ஏன் மாற வேண்டும் ஏமாற்றம் இல்லாமல் என்பது தெளிவாகும்.
அடுத்த தொடர்ச்சியில் மலைய தலைவர்கள் அரசியலில் செய்த விபரீதங்கள் ஊழல்களும், தற்போது அவர்களின் செயற்பாடுகளுக்கான விளக்கங்களும்….
மகா
http://www.tamilwin.com/show-RUmszBSXKYms5.html
Geen opmerkingen:
Een reactie posten