dinsdag 18 november 2014

திருச்சி சிறப்பு முகாமில் மூன்றாவது நாளாக 26 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்!

சிங்கள மாணவர்களை அதிகம் உள்வாங்கும் யாழ்.பல்கலை: விஜயகலா ஆதங்கம்- அரசியல்மயப்படும் பல்கலைக்கழக கட்டமைப்பு: அகிலவிராஜ்
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 12:00.02 AM GMT ]
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் அதிகளவில் உள்ளீர்க்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கேனும் போதியளவு வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கத் தவறியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கடுமையான அரசியல் மயப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்களை உள்ளீர்க்கும் வீதம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானர் ஆரோக்கியமானதல்ல, போரின் பின்னர் வடக்கு கிழக்கு கல்வி அபிவிருத்திக்கு அரசாங்கம் வழங்கி வரும் பங்களிப்பு திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பு பாரியளவில் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது – அகிலவிராஜ் காரியவசம்
நாட்டின் பலக்லைக்கழக கட்டமைப்பு பாரியளவில் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிறைவிற்கு வாழ்த்து கூறி பாரிய பதாகைகளை காட்சிப்படுத்துகின்றது.
இதற்காக பாரியளவில் பணம் செலவிடப்பட்டுள்ளது.
எனினும், பல்கலைக்கழக மாணவர்கள் சிற்றுண்டிச் சாலையில் உட்கொள்ள உணவு கிடைப்பதில்லை.
இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
பல்கலைக்கழகங்களில் ஆங்கில, கணித பாட கற்கைநெறிகளை ஏற்படுத்தி அதன் மூலம் உருவாகும் பட்டதாரிகளுக்கு ஏன் ஆசிரியர்களாக நியமனம் வழங்கப்பட முடியாது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் என அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறி;த்த நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அகிலவிராஜ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjt1.html
வன்னியில் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படவில்லை!– வினோதரலிங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 12:19.10 AM GMT ]
வன்னி மாவட்டத்தில் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற விவாத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியில் விளையாட்டுத்துறை சார் விடயங்கள் பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது.
போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன.
விளையாட்டுத்துறையை மேம்படுத்தத் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
வடக்கு விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களும் பதக்கங்களை வென்றெடுப்பார்கள்.
வன்னியில் விளையாட்டு பயிற்சி கல்லூரிகள் கிடையாது.
சிறந்த விளையாட்டு வீர வீராங்கணைகளை உருவாக்க பயிற்சி கல்லூரி அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjt2.html

திருச்சி சிறப்பு முகாமில் மூன்றாவது நாளாக 26 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்!
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 12:36.39 AM GMT ]
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்புமுகாமில் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் 26 பேர் மலேசிய நாட்டவர் ஒருவரும் எதுவித நிபந்தனையும் இன்றி தங்களை விடுதலை செய்யக்கோரி 15/11/2014  முதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்து மூன்றாவது நாளாக தொடர்கின்றனர்.
ஈழநேரு, கருனைராஜ், ஞானவரோதயன், சந்திரகுமார், சுரேஸ்குமார், உதயதாஸ், இலங்கைநாதன், சிறீஜெயன், ஆரோக்கியநாதன், த.மகேஸ்வரன், க.மகேஸ்வரன், சிவனேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, தர்மராஜா, சதீஸ்குமார், கிரிதரன், பகீதரன், சசிதரன், யுகப்பிரியன், சுபாகரன், ரமேஸ், முகமதுசாதிக், முகமதுஉவைஸ், ராஜேந்திரன், சிவகுமார், பாலச்சந்திரன் ஆகியோரே உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளவர்களாவர்.
அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு விடுதலை செய்வதில் சட்டச்சிக்கல்கள் இருப்பதாக கருதினால் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரதிநிதிகள் தங்களை நேரில் சந்தித்து விசாரணை செய்து தனிமனித உரிமையை மதித்து விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.
உண்ணாவிரதத்தின் இரண்டாவது நாளான நேற்று, R.D.O கணேசசேகரம், அகதிகளுக்குகான தனித்துணை ஆட்சியர் நடராஜன் (திருச்சி), Q பிரிவு DSP பால்வண்ணன் ஆகியோர் உண்ணாவிரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்களது கோரிக்கையினை மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக மட்டும் கூறிச்சென்றனர்.
இலங்கையில் யுத்தம் நடக்கும் போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்பியதான குற்றச்சாட்டில் கைதானவர்கள், அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முயன்றதான குற்றச்சாட்ட்டில் கைதாகி நீதிமன்ற பிணையில் வெளியே வந்தவர்கள் ஆகியோர் நீதிமன்ற மற்றும் சிறை வளாகத்தில் வைத்து மீண்டும் கைது செய்து நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காமல் சிறப்பு முகாமில் அடைக்கின்றனர்.
அயல்நாட்டவர் சட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு அடைக்கப்படுவதாக காவல்துறையால் காரணம் கூறப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு அடைக்கப்படுபவர்கள் அனைவரும் அகதிகளாக தமிழகம் வந்து அகதி முகாம்களில் முறைப்படி பதிவு செய்து வாழ்ந்து வருபவர்கள் ஆவர்.
அத்துடன் முறைப்படி வீசா அனுமதி பெற்று இந்தியா வரும் ஈழத்தமிழர்கள் வீசா அனுமதி காலம் முடிவதற்கு முன்னரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் பிணை வழங்கிய பின்னர் சிறப்பு முகாமில் அடைக்கப்படுகிறார்கள்.
இவை அனைத்தும் சட்டத்துக்கு புறம்பாக செய்யப்படும் செயல்களாகவே கருதப்படுகிறது.
சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள், அவர்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு வழங்கப்படுகின்ற தண்டனை காலத்திற்கு அதிகமாக (பலமாதங்கள்,பல வருடங்கள்) இங்கு அடைத்து வைக்கப்பட்ட பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
பின்னர் அவ்வழக்கினை அவர்கள் நடத்தி முடிப்பதற்கு பல வருடங்கள் ஆகும் என்ற பயத்தினால் செய்யாத குற்றத்தினை ஏற்றுக்கொள்கின்ற சூழ்நிலைகளும் ஏற்படுகின்றது.
தற்போது இங்குள்ளவர்கள் ஒரு வருடம் தொடக்கம் எட்டு வருடங்கள் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு அடைக்கப்படுபவர்கள் குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி காலவரையறையற்று அடைக்கப்படுவதால் பொருளாதார ரீதியாக நலிவடைந்து பல குடும்பங்கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றன.
அந்த பாதிப்பினால் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்படுபவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் முழுமையாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று அடியாளப்படுத்தப்படுபவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுகின்றனர்.
மிகவும் கொடுமையான விடயம்,
ஈழத்தில் போரினால் காயமடைந்து இடுப்புக்கு கீழ் இயங்காதவர், பிறர் உதவி இன்றி செயற்பட முடியாதவர் அனைவரும் ஈவு இரக்கமின்றி இந்த சிறப்பு முகாமில் அடைத்து கொடுமைபடுத்தப்படுகின்றார்கள்.
மேலும் வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கும், உறவினர்கள் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது.
இது சர்வதேச மனிதவுரிமை மீறலான விடயமாகும்
தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் பலரும் இந்த கொடுமையான சிறப்பு முகாமில் இருந்து ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரி பல கட்ட போராட்டங்களை பல வருடங்களாக நடாத்தியும் அரசு செவி சாய்ப்பதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjt3.html

Geen opmerkingen:

Een reactie posten