போரின்போது இடம்பெற்ற பொதுமக்களின் உயிரிழப்புகள், உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்க அரசாங்கம் முதல்முறையாக முன்வந்துள்ளது. அதுமட்டுமன்றி அதற்கு ஆலோசனை வழங்குவதற்கு சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றையும் நியமித்துள்ளது.
வழக்கத்துக்கு மாறாக சர்வதேச நிபுணர்கள் குழுவை அரசாங்கமே அமைத்திருப்பதும், உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கியிருப்பதும் ஆச்சரியமான விடயங்கள்.
2014ம் ஆண்டு ஜூலை 15ம் திகதியிடப்பட்ட 1871/18 இலக்க வர்த்தமானி மூலம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
இரண்டு நாட்கள் கழித்து கடந்த 17ம் திகதி தான் இந்த வர்த்தமானி அறிவித்தல் மற்றும் நிபுணர் குழு அமைப்பு பற்றிய தகவல் வெளியே விடப்பட்டது.
இலங்கையில் போரின் இறுதி ஏழு ஆண்டுகளில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, ஐநா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழு ஒஸ்லோவில் அதிகாரபூர்வ விசாரணைகளை கடந்த 15ம் திகதி ஆரம்பித்துள்ளது.
அன்றைய தினம் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஒரு அமெரிக்கர், இரண்டு பிரித்தானியர்களைக் கொண்டதாக இந்த சரவதேச நிபுணர் குழுவை நியமித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் போரின் போது காணாமற்போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்து வரும் நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கே இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சட்ட நிபுணரும், சியாராலியோனில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த வழக்கில் ஐநாவின் தலைமை சட்ட நிபுணராகப் பணியாற்றியவருமான சேர் டெஸ்மன் டி சில்வா இந்த ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் யூகோஸ்லாவிய அதிபர் ஸ்லோபதான் மிலோசெவிக்குக்கு எதிரான, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த போர்க்குற்ற வழக்கில் வாதாடிய பிரித்தானிய சட்ட நிபுணரும், சட்ட பேராசிரியருமான சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் அமெரிக்காவின் சைராகியூஸ் பல்கலைக்கழக சட்ட பேராசிரியராக பணியாற்றும் பேராசிரியர் டேவிட் கிரேன் ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மூன்று பேருமே போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் வழக்குகளுடன் தொடர்புடைய சட்ட நிபுணர்கள்.
இந்தி நிபுணர் குழுவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்திருப்பது, அரசாங்க மட்டத்திலேயே ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
ஏனென்றால் இதுவரையில் எந்த விவகாரம் குறித்தும் உள்நாட்டுத் தீர்வையே வலியுறுத்தி வந்த, வெளிநாட்டுத் தலையீடுகளை நிராகரித்து வந்த அரசாங்கம், திடீரென தானே சர்வதேச நிபுணர்களை விசாரணைகளுக்காக அழைத்து வந்திருக்கிறது. அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு ஒரே காரணம், சர்வதேச நெருக்கடிகள் தான் என்பதில் சந்தேகமில்லை.
அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த முடிவை எடுப்பதை விட வேறு வழியில்லை என்ற நிலை உருவாகியிருந்தது.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிட்ட தனது பெயரை வெளியிட விரும்பாத அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர், சர்வதேச அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே வெளிநாட்டவர்களை இந்தக் குழுவில் அனுமதித்துள்ளார். அரசாங்கம் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளது. அதனால் தான் இத்தகைய நடவடிக்கைகளை நாட வேண்டியிருந்தது என்று அவர் கூறியிருந்தார்.
அரசாங்கம் இந்த நிபுணர்குழு நியமனத்தையும் உள்ளக விசாரணைப் பொறிமுறை உருவாக்கத்தையும் சில காலங்களுக்கு முன்னரே நியமித்து ஒரு பச்சைக்கொடியைக் காண்பித்திருந்தால் சர்வதேச அளவில் சில சாதகமான விளைவுகளைப் பெற்றிருக்கக் கூடும்.
ஏனென்றால் போர்க்குற்றங்கள் மற்றும் காணாமற்போனோர் பிரச்சினைக்குத் தீர்வு காண பொறுப்புக்கூற நம்பகமான பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு சர்வதேச சமூகம் அரசாங்கத்தை பல ஆண்டுகளாகவே கேட்டு வந்தது.
ஆனால் அரசாங்கம் அதற்கு இசைந்து கொடுக்காத நிலையில் தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவை அமைக்கும் நிலை உருவானது.
இப்போது ஐநா விசாரணைகள் கழுத்தை நெரிக்கத் தொடங்கி விட்ட நிலையில், அரசாங்கமே உள்ளக விசாரணைக்குத் தயாராகியுள்ளதுடன், சர்வதேச நிபுணர்களையும் துணைக்கு அழைத்து வந்திருக்கிறது.
இம்மாத இறுதியுடன் பதவியை விட்டு விலகப் போகும் ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எடுத்த முடிவு தான் அரசாங்கத்தை இந்த நிலைக்கு இழுத்து வந்திருக்கிறது.
அவர் ஐநா விசாரணைக் குழுவை பலப்படுத்துவதற்காக, நோபல் பரிசு பெற்ற, பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்ட்டி அதிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் நீதிபதி சில்வியா கார்ட்ரைட், பாகிஸ்தான் சட்ட நிபுணர் அஸ்மா ஜகாங்கீர் ஆகியோரை விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்களாக நியமித்திருந்தார்.
சர்வதேச அளவில் நம்பகத் தன்மையும் மதிப்பும் வாய்ந்த, இந்த நிபுணர் குழுவை தனிப்பட்ட முறையில் இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிக்க முடியவில்லை.
பொதுவான கொள்கையின் அடிப்படையில் ஐநா விசாரணைக் குழுவை ஏற்பதில்லை என்றே கூறி வருகிறது.
நவநீதம்பிள்ளை அமைத்த நிபுணர் குழுவினால் உருவாக்கப்பட்ட நெருக்கடியைத் தீர்க்கவும், சர்வதேச அளவில் நம்பகத் தன்மையை உருவாக்கவும் வேறு வழியின்றி தாமும் ஒரு சர்வதேச நிபுணர் குழுவை அமைக்க வேண்டிய நிலைக்கு, உள்ளக விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
அதுவும் இப்போது பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்துடன் கடுமையாக மோதி வருகின்ற அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் இருந்தே இந்த நிபுணர்கள தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஆனால் நவநீதம்பிள்ளை அமைத்துள்ள நிபுணர் குழுவுக்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைத்துள்ள நிபுணர் குழுவுக்கும் முக்கியமான ஒரு வேறுபாடு இருக்கிறது.
ஐநா நிபுணர் குழு விசாரணைகளில் பங்கெடுத்து அந்த விசாரணைக்குழுவுக்கு ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கும் வகையில் 10 மாதங்களும் இணைந்து பணியாற்றவுள்ளது.
ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைத்துள்ள நிபுணர் குழு தனியே மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு கேட்டுக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் மட்டும் ஆலோசனைகளை வழங்கவுள்ளது.
ஆக, தேவைப்பட்டால் மட்டும் இந்த நிபுணர்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுவர். தேவையில்லாது போனால் இவர்களின் ஆலோசனை பெறப்படாது. இதிலிருந்தே இந்த நிபுணர் குழு சர்வதேச சமூகத்துக்கு காண்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
அதுமட்டுமன்றி இந்த நிபுணர் குழுவின் ஆலோசனைகளை ஏற்பதா இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும் என்பதை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெளிவாக கூறியிருக்கிறார். ஆலோசனையை கேட்கும் அல்லது நிராகரிக்கும் உரிமை அரசாங்கத்துக்கு உள்ளது என்பதை அவர் இப்போதே உறுதிப்படுத்த முனைந்துள்ளார். இந்த நிபுணர் குழு அரசாங்கத்துக்கு பாதகமான ஆலோசனைகளை முன்வைத்தால் அதை நிராகரிப்பதற்கு இப்போதே வழி தேடப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற மேற்குலகினது கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்து வருகிறது.
அப்படியே அதை நடைமுறைப்படுத்துவதற்கு அது ஒன்றும் பைபிள் அல்ல என்று அமைச்சர் ரம்புக்வெல தான் அடிக்கடி கூறுவார். அதுபோன்று மீண்டும் கூறுவதற்கு வசதியாகவே அரசாங்கம் ஆலோசனைகளை ஏற்கும் நிராகரிக்கும் உரிமை தமக்கு இருப்பதாக அரசாங்கம் இப்போதே கூறிவிட்டது.
அதேவேளை காணாமற்போனோர் குறித்த 19 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகளை விசாரித்து வந்த ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், அரசாங்கம் தமது ஆணைக்குழுவின் தரத்தை உயர்த்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
அதுமட்டுமன்றி, இப்போது இந்த ஆணைக்குழுவின் விசாரணைப் பரப்பும் விரிவாக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை, மனிதாபிமான மற்றும் ஆயுத மோதல்கள் சம்பந்தமான சட்ட மீறல்களில் அரசுப்படைகள் ஈடுபட்டனவா, போர் தவிர்ப்பு வலயத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டனரா என்பது குறித்தும் இந்த ஆணைக்குழு விசாரிக்கும் வகையில் இதன் அதிகாரப் பரப்பு விரிவாக்கப்பட்டுள்ளது.
அதாவது சத்தமில்லாமல் ஒரு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அரசாங்கம் அமைத்திருக்கிறது. தனியாக ஒரு உள்ளக விசாரணைப் பொறிமுறையை உருவாக்கினால் எதிர்ப்புகளைச் சம்பாதிக்க நேரிடும் என்பதால் காணாமற்போனோர் குறித்த ஆணைக்குழுவுக்கான ஆலோசனைக் குழு என்றே நிபுணர்கள் நியமனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் வர்த்தமானி அறிவிப்பில், இந்த ஆணைக்குழுவின் அதிகார எல்லை விரிவாக்கம் குறித்து கூறப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம், காணாமற்போனோர் தொடர்பான விவகாரத்தை மட்மே, கையாண்டு வந்த இந்த ஆணைக்குழு, அதற்கு அப்பால் போரின் போது நடந்த சம்பவங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.
பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச நிபுணர்களின் உதவியுடன் விசாரிக்கும் அளவுக்கு, அரசாங்கம் இறங்கி வந்திருப்பது முக்கியமான திருப்பம் தான். ஏனென்றால் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்களில், சரணடைந்து காணாமற்போனவர்கள் விவகாரத்தில் சர்வதேச நிபுணர்கள் முன்வைக்கப் போகும் ஆலோசனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்றில்லை.
ஆனால் அது ஏற்கப்பட்டாலும் சரி, நிராகரிக்கப்பட்டாலும் சரி அந்த விவகாரம் சர்வதேச மயப்படும். அது அரசாங்கத்துக்கு இன்னும் சிக்கல்களைக் கொடுக்கும். ஏனென்றால் அது ஒன்றிரண்டு பேர் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல, 100ற்கும் அதிகமானோர் சம்பந்தப்பட்ட விவகாரம்.
இந்தக்கட்டத்தில் சர்வதேச நிபுணர் குழு சரணடைந்தவர்கள் காணாமற்போனதை உறுதிப்படுத்தினால், போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்பதும் உறுதியாகிவிடும். இதுவரை அரசாங்கம் கூறிவந்த, போர்க்குற்றங்கள் ஏதும் நடக்கவில்லை என்ற வாதமும் வலுவிழந்து விடும்.
எனவே அரசாங்கம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ புலிவாலைப் பிடித்து விட்டது என்பது மட்டும் நிச்சயம். அதைவிட உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வெளிநாட்டவர்கள் எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என்ற சிங்ளத் தேசியவாதிகளை உசுப்பி விட்ட அரசாங்கமே, இப்போது சர்வதேச நிபுணர்களை அழைத்து வந்திருக்கிறது.
அதுமட்டுமன்றி போரில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் முடிவு செய்துள்ளது. இது குறித்த சிங்களத் தேசியவாதிகளின் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதையும் இனிவரும் நாட்களில் தான் பார்க்க வேண்டும்.
எவ்வாறாயினும் சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்காக வேறு வழியின்றி தமது முன்னைய நிலைப்பாடுகளை அரசாங்கம் மாற்றிக் கொள்ள முனைந்துள்ளது. அரசாங்கத்தின் இந்த திடீர் முடிவு சர்வதேச பொறியில் இருந்து தப்பிக்க வழியைக் கொடுக்குமா அல்லது பொறியில் இருந்து தப்பி குழியில் விழ வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுபத்ரா
http://www.tamilwin.com/show-RUmsyHRULclo0.html
Geen opmerkingen:
Een reactie posten