zaterdag 10 augustus 2013

பாசிக்குடா கடலில் தத்தளித்த சிறுமி மீட்பு - மின்னல் தாக்கியத்தில் பெண்ணொருவர் பலி - ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற படகு திரும்பவில்லை

போதைப் பொருள் கடத்திய பாகிஸ்தானியருக்கு ஆயுள் தண்டனை - கைது செய்யப்பட்ட தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் விடுதலை
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 04:59.36 AM GMT ]
போதைப் பொருள் கடத்திய பாகிஸ்தானியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தின் நீர்கொழும்பு நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.
22 வயதான அர்சலாம் இப்ராஹிம் என்ற பாகிஸ்தானியர் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானிலிருந்து விமானம் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளார்.
அவர், போதைப் பொருள் அடங்கிய பொதிகளை விழுங்கி அவற்றை கொண்டு நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப் பொருள் தடுப்புப் பொலிஸ் விசாரணைப் பிரிவினர் குறித்த நபரை சோதனையிட்ட போது, போதைப் பொருள் கடத்தியமை அம்பலமாகியுள்ளது.
சந்தேக நபரை வைத்தியசாலையில் அனுமதித்து அவரிடமிருந்து 109 கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
போதைப் பொருட்களை வைத்திருத்தல், கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக கடூழிய சிறைத்தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் விடுதலை
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குழுவினமடு பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய நால்வர் விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகளின் மட்டு -அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த கௌசல்யனின் முகாம் அமைந்திருந்த பகுதியில், புதையல் தோண்டிய சந்தேகத்தில் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டவர்களில், தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஸ்ட தொல்பொருளாளரான சுனேத்திர நலிந்த சில்வா, தொழில்நுட்ப உத்தியோகத்தர் எரந்த மாரம்ப சில்வா, பெண் உதவியாளர் லசித்தா மாலி ரத்நாயக்க, வாகன ஓட்டுனர் அருணா சாந்த ஆகியோரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த வீரசேகர, குலோத்துங்க பண்டார, மடுல் சீமையைச் சேர்ந்த சுப்பிரமணியம் புவனேசன் மற்றும் காணிச் சொந்தக்காரர் என்று தெரிவிக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த சிவகுரு சற்குணம் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானைச் சேர்ந்த சிவருகு சற்குணம் எனும் ஆசிரியருக்குச் சொந்தமான காணி ஒன்று குழுவினமடு பிரதேசத்தில் இருப்பதாகவும், அந்தப் பத்து ஏக்கர் காணியில் தங்களது நகைகள் உள்ளிட்ட பொருள்கள் யுத்தத்திற்கு முன்னர் வீட்டுடன் இருந்ததாகவும், தற்போது அப் பொருள்கள் எங்கிருக்கின்றன என்பதைக் கண்டறிந்து தரும்படி தொல்பொருள் திணைக்களத்திடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு சற்குணம் ஆசிரியரின் நண்பரான ஆட்பதிவுத்திணைக்களத்தில் தொழில் புரியும் வீரசேகர ஊடாக செய்யப்பட்டுள்ளது. அவரது உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியில், அவரது நண்பர்கள் இருவரும் இணைந்து தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், சிரேஸ்ட தொல்பொருளாளருடன் இப் பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் வேறு பிரதேசத்தவர்கள் நடமாட்டத்தினை அவதானித்த பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், குறிப்பிட்ட தொல்லியலாளர் உட்பட அவரது உதவியாளர்களும் எந்தவித அறிவித்தலும் இன்றியே இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இருப்பினும், சுயாதீனமாக இவ்வாறான கண்டுபிடிப்பு வேலைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொல்பொருள் திணைக்களத்தினைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், புதையல் தோண்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஏனையவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னர் இப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் ஈடுபட்டதனை பொது மக்கள் அவதானித்ததாகவும் தெரிய வருகிறது.
விடுதலைப்புலிகளின் முகாம்கள் அமைந்திருந்த இடங்கள் பலவற்றில் பெருந்தொகைப் பணங்கள் புதைந்திருப்பதாக தகவல்கள் இருக்கின்றன. இந்த அடிப்படையில் இவர்கள் இந்த இடத்தில் பணம், நகைகளை எடுத்துக் கொள்வதற்காக இந்த முயற்சியில் இறங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாசிக்குடா கடலில் தத்தளித்த சிறுமி மீட்பு - மின்னல் தாக்கியத்தில் பெண்ணொருவர் பலி - ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற படகு திரும்பவில்லை
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 05:34.05 AM GMT ]
மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவரை, கல்குடா பொலிஸ் கடல் வலய பாதுகாப்புப் பிரிவினர் காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செபமாலை மாதா கோயில் வீதி பெரிய கல்லாற்றைச் சேர்ந்த தேவதாசன் தமிழினி வயது (11) என்ற சிறுமியே இவ்வாறு உயிர் காப்பாற்றப்பட்டார்.
மேற்படி பிரதேசத்தின் பங்கு குருவானவரின் உதவியுடன் 20 பேர் கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும், சில பெற்றோர்களும் பாசிக்குடா கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதன்போது குறித்த சிறுமியின் பெற்றோர்கள் சமூகமளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி குளித்துக் கொண்டிருக்கும்போது கடலின் ஆழமான பகுதியில் கால் எட்டாமல் போனதால் சிறுமி அபயக் குரல் எழுப்பியுள்ளார்.
உடனடியாக இதற்கென ஏறகெனவே இப்பகுதியில் இவ்வாறான விபத்துக்களை தடுக்க நியமிக்கப்படடடிருந்த விசேட பொலிசாரினால் காப்பாற்றப்பட்டுளார்.
சிறுமிக்கு முதலுதவி வழங்கப்பட்டு தேக ஆரோக்கியம் வழமையான நிலைக்கு திரும்பியவுடன் குறித்த குருவானவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிஸ் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
மின்னல் தாக்கியத்தில் பெண்ணொருவர் பலி
தம்புத்தேகம சமன்-எலிய பிரதேசத்தில் மின்னல் தாக்கியத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 06 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மதியம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 05 பெண்கள், ஒரு சிறுவன், ஒரு ஆண் ஆகியோர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகினர்.
இவர்களில் ஆபத்தான நிலையில் இருக்கும் மூன்று பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற படகு திரும்பவில்லை
வாழைச்சேனையில் இருந்து ஆழ்கடலுக்கு தொழிலுக்காகச் சென்ற படகு ஒன்று கடந்த ஏழு நாட்களாகியும் கரைக்கு திரும்பவில்லை என்று படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் கடந்த வியாழக் கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாழைச்சேனை ஹைறாத் பள்ளி வாயல் துறையடியில் இருந்து கடந்த சனிக்கிழமை (03.08.2013) ஆழ் கடலுக்கு தொழிலுக்காக சென்ற படகு இரண்டு தினங்களில் திரும்ப வேண்டியது இன்னும் திரும்பவில்லை.
அவர்களுடனான கையடக்கத் தொலைபேசி தொடர்பு கடலுக்குச் சென்ற தினத்தில் இருந்து கிடைக்கவில்லை என்றும் படகு உரிமையாளரான வாழைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.முபாறக் தெரிவித்தார்.
கடலுக்குச் சென்றவர்களில் அபூபக்கர் முஹம்மது நஷீர், அறபாத் அன்றழைக்கப்படும் எச்.எம்.எம்.ஹபீழ், அஸீஸ் அன்றழைக்கப்படும் முஸ்தபா லெப்பை முஸ்தபா ஆகிய மூவருமே கடலுக்குச் சென்றவர்களாவர் என படகு உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten