தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 augustus 2013

வல்வெட்டித்துறை நகரப் பகுதியில் இருந்து வெளியேற இராணுவம் தீர்மானம்?


வல்வெட்டித்துறை சந்தியில் சுமார் 60 இற்கு மேற்பட்ட வீடுகளில் இருந்து வந்த இராணுவம் இன்னும் ஒருவாரத்தினுள் வெளியேறி ஊரிக்காடு இராணுவமுகாம் பகுதிக்குச் செல்லவுள்ளதாக வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் நடராஜா அனந்தராஜ் தெரிவித்தார்.
ஊரிக்காடு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவர் இதனை உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்பொழுது ஊரிக்காடு இராணுவமுகாம் அமைந்துள்ள பகுதியில் மேலதிக கட்டடங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் வல்வெட்டித்துறைச் சந்தியில் உள்ள இராணுவ முகாமில் இருந்து இராணுவத்தினரின் பாவனைப் பொருட்கள் மற்றும் தளபாடங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருவதுடன் முகாமைச் சுற்றியுள்ள முட்கம்பி வேலிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
வல்வெட்டித்துறை மத்திய சந்தையைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என்று கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இதனை வலியுறுத்தி ஜனாதிபதி, இராணுவத் தளபதி மற்றும் அரச அதிபர் ஆகியோருக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஜனாதிபதியை நேரிலும் சந்தித்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறை நகர மத்தியில் இராணுவ முகாம், மற்றும் பொலிஸ் நிலையம் என்பன பல வருடங்களாக இயங்குவதால் நகர அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாதுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையையும பாதிக்கப்பட்டுள்ளதாக அப்போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆயினும் வல்வெட்டித்துறை சந்தியைச் சுற்றவர இருக்கும் இராணுவ முகாமை அகற்றுவதில் கடந்த ஒரு வருடமாக, இழுபறிகள் காணப்பட்டன. இந்நிலையில்லேயே தற்போது வல்வெட்டித்துறை நகரப் பகுதியில் இருந்து வெளியேறி இராணுவத்தினர் வேறு இடத்துக்குச் செல்லவுள்ளனர்.
இதேவேளை, வல்வெட்டித்துறை இராணுவமுகாம் அமைந்துள்ள பகுதியில் வசித்த குடியிருப்பாளர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டு கடந்த மாதம் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களினூடாகவும் வெளியிடப்பட்டன. அவை இராணுவ முகாம் பொறுப்பதிகாரியிடமும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இராணுவத்தினர் அந்த இடங்களை விட்டு வெளியேறும் பொழுது அவற்றை உரியவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளினூடாகப் பொறுப்பேற்குமாறு நகர சபைத் தலைவர் அனந்தராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten