தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 augustus 2013

காணி அபகரிப்புக்கு எதிராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் கதிர்காமரின் மகன் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு!


வலி.வடக்கு – கீரிமலைப் பகுதியில் உள்ள தமது குடும்பச் சொத்தான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இக்காணி 1968 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு லக்ஷ்மன் கதிர்காமருக்கு உடமையாக்கப்பட்டிருந்தது. யாழ்.மாவட்ட நீதிமன்றின் ஊடாக இக்காணி பிரிக்கப்பட்டிருந்தது.
லக்ஷ்மன் கதிர்காமர் இறந்துவிட்ட நிலையில் தேசவழமைச் சட்டத்தின் அடிப்படையில் இக்காணி அவரது மகனான ஸ்ரீராகவனுக்கு உரித்துடையதாகியுள்ளது.
இந்நிலையில் இக்காணி சுவீகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அவரது மகன் கடந்த வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
காணி சுவீகரிப்பு சட்டமூலத்தினூடாக இந்தக் காணியில் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதைத் தடுப்பதற்கான இடைக்கால நிவாரணத்தைப் பெற்றுத்தருமாறும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தனது காணிக்கு இறுதியாக இராணுவ அனுமதியுடன் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் சென்றதாகவும் காணிக்கு அருகில் பெருமெடுப்பில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர் பாதுகாப்பு வலய எல்லையை பின் நகர்த்துவதன் ஊடாக தனது காணியை தான் முழுமையாகப் பயன்படுத்த முடியும் எனவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசவழமைச் சட்டத்தின் பிரகாரம் எனக்கு உரித்துடைய எனது முன்னோர்களின் காணியை எனது அனுமதியின்றி சுவீகரிப்பதானது எதேச்சாதிகாரமானது. அநீதியானது எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி நிலாந்தி டி சில்வா, சட்டத்தரணி கே.சி.வெலியமுன்ன ஆகியோர் ஆஜராகின்றனர்.
தொடர்புடைய செய்தி

Geen opmerkingen:

Een reactie posten