இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு இலங்கை விமானப்படையின் விமானங்கள் மீது நம்பிக்கை இல்லையாம். இனி நாம் என்ன செய்வது? அப்படியானால் ஐ.நா. விமானத்திலேயே வரலாம் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஐ.நா. விமானத்திலேயே வந்து வடக்கு உட்பட தேவையான அனைத்து இடங்களுக்கும் சென்று எதிர்பார்க்கும் உண்மைகளை கண்டறிய நவநீதம்பிள்ளைக்கு அரசாங்கம் இடமளிக்கும்.
உலகத்தில் வேறு எந்தவொரு நாட்டிலும் மோதல் சம்பவங்கள் இடம்பெறுவதில்லையா? வெலிவேரியவில் ஒரு சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. இதனை மீண்டும் தூண்டி அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முற்படுவது நியாயமில்லை.
பொதுநலவாய மாநாட்டை பாதிக்கும் அல்லது ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக மேலும் நெருக்கடிகள் வலுவடையும் என்பதெல்லாம் உள்நோக்கங்களைக் கொண்ட பிரசாரங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தொடர்ந்தும் கூறுகையில், அண்மையில் வெலிவேரியவில் இடம்பெற்ற சம்பவம் ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றல்ல என்றாலும் அது குறித்து அரசாங்கம் கூடிய அவதானத்தைச் செலுத்தி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடுகள் வழங்கவும் முன்வந்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் மாத்திரமல்ல, ஏனைய உலக நாடுகளிலும் இடம்பெறலாம். பொது நல அமைப்பின் உறுப்பு நாடுகளிலும்கூட இடம்பெறலாம் அல்லது இடம்பெற்றிருக்கலாம்.
இதனை அரசியலாக்க முற்படக்கூடாது. குறிப்பாக, இலங்கையின் எதிர்க்கட்சிகள் வெலிவேரிய சம்பவத்தை காரணம் காட்டி பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாட்டை சீர்குலைக்கவும் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு தவறான கருத்தைக் கூறவும் முற்படுகின்றன.
ஆரம்ப காலம் தொட்டே எதிர்க்கட்சியினர் உள்நாட்டில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு பதிலாக சர்வதேசத்திலேயே முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். இது அவர்களின் வாழ்நாள் பழக்கம்.
எவ்வாறாயினும் வெலிவேரிய சம்பவத்தால் பொதுநலவாய மாநாட்டிற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.
எவ்வாறாயினும் வெலிவேரிய சம்பவத்தால் பொதுநலவாய மாநாட்டிற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.
அதே போன்று ஐ.நா.விலும் பிரச்சினை இல்லை.மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருவதற்கு தீர்மானித்துள்ளார். அரசாங்கம் அவரை வரவேற்கின்றது. நவநீதம்பிள்ளை இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்த அச்சம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
பரவாயில்லை. அப்படியாயின் அவரது சொந்த விமானத்திலேயோ அல்லது ஐ.நா.வின் விமானத்திலேயோ இலங்கை வந்து தனது தேடல்களை மேற்கொள்ளலாம். அரசாங்கம் அதற்கு தடை விதிக்காது.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் என்பவை உண்மைகளின் பிரதிபலிப்பாகவே காணப்படுகின்றன. ஜனநாயக ஆட்சியில் அனைத்து மக்களும் சமாதானமாக வாழும் சூழலே இன்று இலங்கையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten