தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 augustus 2013

யாழில் கைவினைப் பொருட்கள் உற்பத்தி தரமான நிலையில் உள்ளன: ஜி.எ.சந்திரசிறி - பிள்ளைகள் கல்வியை எதிர்காலத்தில் சிறந்த முறையில் அடைய வேண்டும்: எஸ்.சத்தியசீலன்

யாழில் தரமற்ற சிற்றூர்திகளால் பயணிகள் பாதிப்பு - யாழில் மழை பொய்த்ததால் விவசாயிகள் பாதிப்பு - மாணவர்களுக்கு சிறந்த பயன் தரும் திறந்த பாடசாலைக் கல்வித் திட்டம்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 02:32.33 PM GMT ]
பருத்தித்துறைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுகின்ற சிற்றூர்திகள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் தாம் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் தற்பொழுதும் உயரம் குறைந்த மிகவும் பழுதடைந்த சிற்றூர்திகள் ஈடுபட்டு வருவதால் பயணிகள் மிகவும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மிகவும் பழுதடைந்த நிலையிலுள்ள சில சிற்றூர்திகளுக்குள் சாரதியின் ஆசனம் உள்ளிட்ட சகல ஆசனங்களும் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. சில சிற்றூர்திகளுக்குள் பயணிகளுக்கு காயங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் கம்பிகளும் தகரங்களும் காணப்படுவதாக பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை சிற்றூர்த்தியின் மேற்புறம் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் பயணிகளுக்குத் தலையில் காயங்களும் ஏற்படுகின்றன. இதேவேளை சேவையில் கடமையில் ஈடுபடுகின்ற சில நடத்துனர்கள் பயணிகளுடன் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் அளவுக்கு அதிகமான பயணிகளைச் சிற்றூர்திகளுக்குள் ஏற்றுவதால் தாம் மிகவும் பாதிப்படைவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை சிற்றூர்திகளில் சாரதிகளுக்கான இருக்கைகள் சீரின்மையால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே இத்தகைய பழுதடைந்த சிற்றூர்திகளைச் சேவையில் ஈடுபடுத்துவதற்குரிய அனுமதிகளை வழங்க வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிகாரிகளிடம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழில் மழை பொய்த்ததால் விவசாயிகள் பாதிப்பு
யாழ். மாவட்டத்தில் காலபோக நெற்செய்கைக்கான முன்னாயத்த வேலைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
நெற் செய்கைகளை மேற்கொள்வதற்காக வயல் நிலங்களைப் பண்படுத்துவதற்கு உரிய காலத்தில் மழை கிடைக்காமையினால் இந்த வருடம் நெற்பயிர்ச் செய்கை பாதிப்படையும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
யாழ். மாவட்டத்தில் பெரும்போகத்தில் மட்டுமே நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. அப் பயிர்ச்செய்கை மழையை நம்பியே மேற்கொள்ளப்படுகின்றது. காலபோக நெற்பயிர்ச் செய்கைக்கு பொருத்தமான முறையில் ஜூன், ஜூலை மாதங்களில் வயல் நிலங்களை உழுது பண்படுத்தி வரம்புகள் சீர்செய்யப்பட வேண்டும்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக குடாநாட்டில் மழை பெய்யாமையினால் நெல்வயல்களை உழுது பண்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
கடந்த வருடம் 11ஆயிரத்து 096 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வருடம் 12 ஆயிரம் ஹெக்ரேயர் பரப்பளவில் மேற்கொள்வதற்கு மாவட்ட விவசாயத் திணைக்களம் உத்திதேசித்திருந்தது.
இதற்காக விவசாயிகளுக்குத் தேவையான விதை நெல்லினங்ளை வழங்குவதற்கும் விவசாயத் திணைக்களம் தயார் நிலையில் உள்ளது.
விதைப்பு மழை உரிய வேளையில் பெய்திருந்தால் வயல் நிலங்கள் பண்படுத்தப்பட்டு தாழ்நில வயல்களில் 6 மாத கால விளைச்சலைக் கொண்ட மொட்டைக்கறுப்பன், பச்சைப் பெருமாள் போன்ற மரபுவழி நெல்லினங்களை பயிரமுடியும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
யாழ். மாவட்டத்தில் இடையிடையே வானம் மப்பும் மந்தாரமாகக் காணப்படுகின்ற போதிலும் மழை பெய்யவில்லையே என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
யாழில் மாணவர்களுக்கு சிறந்த பயன் தரும் திறந்த பாடசாலைக் கல்வித் திட்டம்
யாழ். மாவட்டத்தில் தீவகம், யாழ்ப்பாணம், வடமராட்சி, வலிகாமம் ஆகிய கல்வி வலயங்களில் 6 பயிற்சி நிலையங்களில் 6 மாத பயிற்சியாக திறந்த பாடசாலைக் கல்வித் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாக வடமாகாணக் கல்வித் திணைக்கள முறைசாராக் கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ச.கைலாசநாதன் தெரிவித்தார்.
தீவக கல்வி வலயத்தில் நயினாதீவு ஸ்ரீ கணேஷ கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் ஆங்கிலம், சிங்களம், தொழில் பயிற்சிக் கல்வி தொடர்பாக 60 பேருக்கு இக் கல்வி வழங்கப்படுகின்றது.
வலிகாமம் கல்வி வலயத்தில் மருதனார்மடம் இறையியற் கல்லூரி, தெல்லிப்பழை மாவை கலட்டி, கொல்லங்கலட்டி கணேச முன்பள்ளி நிலையம் ஆகிய இரண்டு நிலையங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் இத் திட்டம் அமுல்படுத்தப்படுவதுடன் தலா இரண்டிலும் 60 பேர் வரை பங்கு கொண்டிருக்கிறார்கள்.
யாழ். கல்வி வலயத்தின் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயம், நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி ஆகிய இரண்டு நிலையங்களில் 60 இற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றுகின்றார்கள்.
வடமராட்சி கல்வி வலயத்தில் வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் கணிதம், அறநெறிக் கல்வி ஆகியவற்றில் 60 இற்கு மேற்பட்டவர்கள் பங்கு பற்றுகிறார்கள்.
பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகிய பலரும் இதில் கலந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழில் கைவினைப் பொருட்கள் உற்பத்தி தரமான நிலையில் உள்ளன: ஜி.எ.சந்திரசிறி - பிள்ளைகள் கல்வியை எதிர்காலத்தில் சிறந்த முறையில் அடைய வேண்டும்: எஸ்.சத்தியசீலன்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 02:52.20 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் கைவினைப் பொருட்கள் உற்பத்தில் தரமான நிலையில் வளர்ச்சியடைந்துள்ளதென வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி தெரிவித்தார்.
இன்றையதினம் கைதடி நவீல்ட் பாடசாலையில் மாகாண கிராமியக் கண்காட்சியை பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக உள்ளுராட்சி அமைப்புக்கள், கைப்பணிப்பொருட்கள், கிராம அபிவிருத்தி மன்றங்கள், உள்ளுர் தொழிற்சாலைகள் போன்றவற்றை அபிவிருத்தி செயவதற்கு அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் குடிசைக் கைத்தொழில் முயற்சிகளை முன்னேற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றோம்.
இவற்றின் சிறப்பான பயன்களையும் வெற்றுக்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி பனங்கட்டி, பால் உற்பத்திப் பொருட்கள், கைப்பணிப்பொருட்கள், மனைப்பொருட்கள், போன்றன மிகச் சிறந்த வளர்ச்சி கண்டுள்ளதென்றும் குறிப்பிட்டார்.
இப்பொருட்களை ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பின் மூலம் சந்தைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மூலம் மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும் வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் கைத்தொழிற் பயிற்சிகளை வழங்குவதற்கான திறமான பயிற்சி நிலையங்களை அமைத்து அதன் மூலம் பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏனைய மாகாணங்களை விட விவசாயப் பொருட்களின் தரமும், உற்பத்தியும் வடமாகாணத்தில் அதிகரித்திருப்பதாக மேலும் தெரிவித்தார்.
வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மாகாண கிராமியக் கண்காட்சியில் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், மற்றும் திணைக்களத் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிள்ளைகள் கல்வியை எதிர்காலத்தில் சிறந்த முறையில் அடைய வேண்டும்: எஸ்.சத்தியசீலன்
அறிவாற்றல் மிக்க ஒரு சமூதாயத்தை உருவாக்க வேண்டும், பிள்ளைகள் கல்வியை எதிர்காலத்தில் சிறந்த முறையில் அடைய வேண்டும் என்ற மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கு அமைவாக வடமாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசியின் தலைமையின் கீழ் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு பொருளாதார ரீதியாக நெருக்கடியை எதிர்நோக்கக் கூடிய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு புலமைப்பரிசில் வழங்கும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
தீவகப் பிரதேசம் பெருமைப்படக் கூடிய விதத்தில் மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள், அதற்கான ஆற்றலும், ஆளுமையும், சக்தியும் இருகின்றதென அவர் குறிப்பிட்டார்.
பிள்ளைகளை சரியான முறையில் வழிநடாத்தி இப்பிரதேசத்தை முன்னேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் ஆங்கிலம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், கணிதம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தீவக கல்வி வலயம் கல்வியில் பன்னிரெண்டு வீதமான அதிகரிப்பை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் பெற்றிருப்பது பாராட்டத்தக்க விடயம் எனவும் தெரிவித்த அமைச்சின் செயலாளர், வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயங்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பத்து வீதத்திற்கு மேலான வளர்ச்சியைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மேலும் குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten