donderdag 15 augustus 2013

தமிழ் மொழி மூல அரச நிர்வாக அதிகாரிகளுக்கு வடக்கு கிழக்கில் நியமனம்! மக்களுக்கு சிறந்த அரச சேவை வழங்க வேண்டும்!- ஜனாதிபதி!

அரசாங்க நிர்வாக சேவை பரீட்சையில் தமிழ்மொழி மூலம் சித்தியடைந்து ஒரு வருட பயிற்சியை முடித்துக் கொண்ட நிர்வாக அதிகாரிகள் 43 பேர் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சேவையில் அமர்த்தப்பட்டனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன அமைச்சின் செயலாளர் பி.பீ.அபேகோன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
வடக்கு கிழக்கு மக்களுக்கு சிறந்த அரச சேவை வழங்கப்பட வேண்டும் - ஜனாதிபதி
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சிறந்த மற்றும் உரிய அரச சேவைகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிர்வாக அதிகாரிகளாக 43 பேருக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
முப்பது வருடங்களாக அநீதியை எதிர்நோக்கிய மக்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
இந்த பிரதிபலன் மக்களை சென்றடைய வேண்டும் என்பதால், இந்த பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு சிறந்த மற்றும் உரிய அரச சேவைகளை வழங்க வேண்டும்.
அரச சேவையில் இன, மத, பிரதேச, அரசியல் வேறுபாடுகளை கவனத்தில் கொள்ளக் கூடாது.
நாட்டு மக்கள் அனைவரும் சேவை செய்ய வேண்டியது அரச ஊழியர்களின் கடமை என்றார். 

Geen opmerkingen:

Een reactie posten