zondag 4 augustus 2013

தெஹிவளை அத்திட்டிய பள்ளிவாசலை மூடிவிடுமாறு பௌத்த பிக்கு மிரட்டல்

பெண்களை ஏமாற்றி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் கைது - சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பி வைக்கும் முகவர் கைது - கஞ்சாவுடன் 50 வயதான பெண் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 07:23.36 AM GMT ]
நாட்டின் பல பகுதிகளில் பெண்களை திருமணம் செய்வதாக கூறி, அவர்களிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த நபரை தாம் கைதுசெய்துள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக குருணாகல், கண்டி, மாவனல்லை, கம்பஹா நீதிமன்றங்கள் பிடிவிராந்து பிறப்பித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கொழும்பு பொரல்லை, வெயாங்கொட, அலுத்கம, எம்பிலிப்பிட்டி, அம்பலாங்கொட, பதுளை உட்பட பல பிரதேசங்களில் பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளார்.
பெலியத்தை பிரதேசத்தை சேர்ந்தவரான சந்தேக நபர், தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெலியத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பி வைக்கும் முகவர் கைது
மட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமாக ஆட்களை படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் முகவர் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரத்தை சேர்ந்த நிரஞ்சன் டட்லி என்பவரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட இந்த நபர் விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரால் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 116 பேர் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.
இறக்காமத்தில் கஞ்சாவுடன் 50 வயதான பெண் கைது
அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருளுடன் 50 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமண பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, இறக்காமம் மூன்றாம் பிரிவில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் கஞ்சாவுடன் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தமண பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

தெஹிவளை அத்திட்டிய பள்ளிவாசலை மூடிவிடுமாறு பௌத்த பிக்கு மிரட்டல்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 07:17.47 AM GMT ]
தெஹிவளை ,அத்திட்டிய பிரதேசத்தில் உள்ள மஸ்ஜிதுல் ஹிபா ஜும்ஆ பள்ளிவாசலை மூடி விடுமாறு அந்த பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றின் விகாராதிபதி அச்சுறுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
பள்ளிவாசலுக்கு நேற்று மாலை சென்ற குறித்த பிக்கு, பள்ளிவாசலை மூடி விடுமாறு அச்சுறுத்தியுள்ளார்.
பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள சுமநாராம விகாரையின் விகாராதிபதியே இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மாகாண சபையின் உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஸ்ஜிதுல் ஹிபா ஜும்ஆ பள்ளி வாசலானது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்றது. அது சட்ட விரோதமானதல்ல. சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட பள்ளிவாசல்.
அண்மைக்காலமாக பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள விகாரையில் பள்ளிவாசலை மூடச் செய்வதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வந்துள்ளதுடன் இந்த நிலையிலேயே நேற்று பிற்பகல் பள்ளிவாசலுக்கு வந்த சுமநாராம விகாரையின் விகாராதிபதி பள்ளிவாசலை மூடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கண்டியில் இப்தாரை ஒழுங்கு செய்து விட்டு பள்ளிவாசல்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை ஜனாதிபதி மறைக்க முயற்சித்து வருகிறார்.
இதனால் முஸ்லிம்களின் மார்க்க அனுஷ்டானங்களையும் கலாசார விழுமியங்களையும் கடும்போக்கு வாதிகள் அழித்து விட முயல்கின்றனர்.
அண்மையில் மஹியங்கனை பள்ளிவாசல், கிராண்ட்பாஸ் பள்ளிவாசல்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இவ்வாறு பள்ளிவாசல்களுக்கு அச்சுறுத்தல் விடுப்போருக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?.
இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்போரை சுதந்திரமாக ன்னடமாத விட்டதன் எதிரொலி தொடர்ச்சியாக பள்ளிவாசல்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றன.
முஸ்லிம்களுக்கு கஞ்சியையும் புரியாணியையும் கொடுக்கும் ஜனாதிபதி ஏன் அவர்கள் எதிர்கொள்ளும் பேரினவாத அச்சுறுத்தல்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க மறுக்கிறார் என ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

Geen opmerkingen:

Een reactie posten