தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 augustus 2013

ராஜபக்ச அரசின் ஆட்சியில் மக்களின் மத சுதந்திரம் பறிக்கப்படுகிறது: முஜிபூர் ரஹ்மான்

மட்டுவில் இரு ஆலயங்களில் கொள்ளைச் சம்பவம்: சூத்திரதாரிகள் கைது செய்யப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 07:06.01 AM GMT ]
மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டங்களில் இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஒரே நாளில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டன.
இருந்த போதிலும் இதுவரையில் அதன் சூத்திரதாரிகள் எவரும் கைது செய்யப்படாததை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் இன்று நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்காடு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியூடாக கவன ஈர்ப்பு பேரணி சென்றது.
குருக்கள்மடம், செல்லக்கதிர்காமம் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர், பேரணியானது குருக்கள்மடம் ஐயனார் ஆலயம் வரை சென்றதுடன் அங்கு கவன ஈர்ப்பு உரைகளும் இடம்பெற்றன.
தமிழர்களுக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் பாதுகாப்பு கேட்கும் சமாதான காலம் என்ற வாசகத்துடன் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், கி.துரைராஜசிங்கம், பிரசன்னா இந்திரகுமார், அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கலையரசன், இராஜேஸ்வரன், தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சேயோன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், இந்து ஆலயங்களை பாதுகாப்போம், இந்து ஆலயங்களின் சொத்துகளை பாதுகாப்போம், ஆலயங்கள் சூரையாடப்பட்டதற்கு இதுவரை தீர்வுதான் என்ன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தாங்கியிருந்தனர்.
இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவான பொலிஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கில் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது- பா. அரியநேந்திரன்
வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரிநேந்திரன் தெரிவித்தார்.
மடக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் இன்று கூட்டமைப்பு நடத்திய கவன ஈர்ப்பு பேரணியில் இறுதியில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதிக்கு பின்னர், நாட்டில் சமாதானம் நிலவுவதாகவும் சிவில் நிர்வாகம் நடைபெறுவதாகவும் அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் ஜனநாயக கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரணி ஒன்றைக் கூட நடத்த முடியாதுள்ளது.
பேரணியை நடத்த பொலிஸாரிடம் அனுமதி பெற்றிருந்தோம். ஆனால் இராணுவம் பேரணியை தடுக்கின்றது.
பொலிஸ் அனுமதி தரும் அதே பேரணியை இராணுவம் தடுக்கின்றது. இங்கு இரண்டு நிர்வாகங்கள் நடக்கின்றதா என நான் கேட்கிறேன்.
வடக்கு, கிழக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இவ்வாறான சம்பவங்கள் சிறந்த உதாரணங்களாகும்.
குருக்கள் மடம் மற்றும் மாங்காடு பிரதேசங்களில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோயில்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. இரண்டு மாதங்கள் கடந்தும் அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்படவில்லை.
இதன் காரணமாக சம்பவத்தின் பின்னணியில் அரசாங்கம் இருக்கின்றதோ என்று மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியாகவும் அமைதியான போராட்டங்களை வடக்கு, கிழக்கில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை வடக்கு மாகாண சபை தேர்தலை குழப்ப முயற்சிக்கின்றனர். அங்கு இராணுவம் நேரடியாக தேர்தர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இது தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயல்.
அரசு எவ்விதமான குழப்பதை்தை ஏற்படுத்தினாலும் வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் வெற்றி பெறும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் உள்ளனர் என்றார்.

ராஜபக்ச அரசின் ஆட்சியில் மக்களின் மத சுதந்திரம் பறிக்கப்படுகிறது: முஜிபூர் ரஹ்மான்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 06:06.18 AM GMT ]
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அடிப்படைவாத செயல்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இனங்களுக்கிடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டு வருகிறதென ஐக்கிய தேசியக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். 
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், நாட்டின் சட்டத்திட்டங்கள் சீர்குலைத்து நாடு அராஜக நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் நடைபெறும் இப்படியான செயற்பாடுகள் காரணமாக நாட்டு மக்களின் வழிப்பாட்டு சுதந்திரமும் இல்லாமல் போயுள்ளது.
இலங்கையில் போர்த்துகேயரின் ஆட்சியின் போதே நாட்டு மக்களின் மத சுதந்திரம் பறிக்கப்பட்டு மக்கள் இன்னல்களை அனுபவித்தனர்.
அதன் பின்னர் இந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சியின் கீழேயே அதிகளவில் மத சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten