தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 augustus 2013

மலேசியாவில் நிர்க்கதியாகியுள்ள தமது உறவுகளை நாட்டிற்கு அழைத்து வர உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை

உடரட்ட மெனிகே ரயில் மோதி இளைஞர் பலி- வாகன விபத்தில் 5 பேர் காயம்- விபத்தில் அங்கவீனமான இராணுவ வீரர் பலி
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 05:56.50 AM GMT ]
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற உடரட்ட மெனிகே ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெமோதர பிங்கேய என்ற பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் 17 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து எல்லே பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மட்டக்களப்பு இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயம்
மட்டக்களப்பு, நாவலடி பிரதேசத்தில் வானொன்று மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த வான் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் விபத்திற்குள்ளானது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணையை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரங்குளி வாகன விபத்தில் அங்கவீனமான இராணுவ வீரர் பலி
புத்தளம் - சிலாபம் வீதியில் மதுரங்குளி பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்த வாகன விபத்தில் அங்கவீனமான இராணுவ வீரர் உயிரிழந்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கி சென்ற கார் ஒன்று மோதிச் சென்றதில் இந்த இராணுவ வீரர் உயரிழந்தாக பொலிஸார் கூறினர்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில், சிலாபம் 61 ஆம் மைல் கல் பகுதிக்கு அருகில், முந்தல் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேக நபரான கார் சாரதி புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் நிர்க்கதியாகியுள்ள தமது உறவுகளை நாட்டிற்கு அழைத்து வர உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 05:49.18 AM GMT ]
மலேசியாவில் தொழில் வாய்ப்பு என நம்பி உள்நாட்டு முகவரொருவரால் அழைத்து செல்லப்பட்டு நிர்க்கதியாகியுள்ள தமது உறவுகளை நாட்டிற்கு அழைத்து வர உதவுமாறு குறித்த நபர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவடட்டம் வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள சுரவனையூற்று கிராமத்தை சேர்ந்த துரைராஜா நீர்முகராசா (வயது 33), யோகராசா சசிக்குமாரன் (வயது 30), சிவராசா தர்மராசா (வயது 33), குகாலிங்கம் சந்திரசேகரம் (வயது 23), கங்காதரன் திருக்குமார் (வயது 37), சந்திரசேகரம் திருக்கணேஸ் (வயது 30) ஆகியோர் தொடர்பாகவே உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அவர்கள் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,
ஒரிரு மாதங்களுக்கு முன்னர் குருநாகலையை சேர்ந்த முகவரொருவரால் தொழில் வாய்ப்புக்காக மலேசியாவிற்கு அழைத்து செல்லப்பட்ட தமது கணவன் மற்றும் பிள்ளைகள் மலேசியாவிலுள்ள கும்பலொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள் என அவர்களுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட போது எம்மால் அறியமுடிந்தது.
அவர்களால் தாங்கள் துன்புறுத்தப்படுவதாவும், குற்றச்செயல்கள் போன்ற வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முற்படுவதாகவும் கூறி தங்களை நாடு திரும்ப ஒழுங்கு செய்யுமாறு கோரியுள்ளனர்.
அது மட்டுமல்ல உணவு மற்றும் ஏனைய தேவைகளுக்கு கூட பணத்தை நாம் இங்கிருந்து அனுப்பி வருகின்றோம். அதுவும் இங்குள்ள முகவரின் வங்கி கணக்குதான் பணம் வைப்பு செய்யப்படுகின்றது. அந் நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார்.
ஏற்கனவே கூட உள்நாட்டு முகவரிடம் மலேசியாவில் தொழில் வாயப்புக்காக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வரை செலுத்தியுள்ளோம் என்றும் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் இது தொடர்பாக தெரிவித்து நாட்டிற்கு அழைத்து வர உதவுமாறு கேட்டுள்ளனர். 
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் செய்துள்ள முறைப்பாட்டு பிரதியையும் அவரிடம் கையளித்துள்ளனர். 
பாராளுமன்ற உறுப்பினரின் அறிவுறுத்தலின் பேரில் களுவாஞ்சிக்குடி பொலிஸிலும் முறைப்பாடுகளையும் செய்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக அடுத்த வாரம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இது பற்றி தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten