maandag 12 augustus 2013

கொக்குத்தொடுவாயில் விவசாயம் செய்ய சென்ற தமிழ் மக்கள், அதிகாரிகளால் விரட்டியடிப்பு !

கொக்குதொடுவாய் பிரதேசத்தில் தமது சொந்த நிலங்களில், 30 வருடங்களின் பின்னர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற மக்கள், மகாவலி திட்ட அதிகாரிகளால் நேற்று விரட்டியடித்துள்ளனர்.
போர் காரணமாக 1984 ஆம் ஆண்டு கொக்குத்தொடுவாய் மத்தியைச் சேர்ந்த மக்கள் அரசினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருந்தனர்.
எனினும் நாட்டில் சுமுகநிலை ஏற்பட்டதனை அடுத்து 2011 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.
இருப்பினும் மீளக் குடியமர்த்தப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் மக்களுக்குரிய விவசாய நிலங்கள் திருப்பி வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக வெலிஓயாப் பகுதி பிரதேச செயலாளருருடன் மக்கள் தொடர்பு கொண்ட போது அந்தப் பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டு்ளளது.
இந்தச் சூழ்நிலையில் மணலாறு சுகந்தாமுறிப்பு, எரிஞ்சகாடு ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு உரிமையுடைய விவசாயிகள் நேற்றையதினம் சென்று உழவு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது சம்பவ இடத்துக்கு வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள், குறித்த இடங்களில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள தமக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழர்களை ஆகையால் அந்தக் காணிகளை விட்டு வெளியேறுமாறு தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் மகாவலித் திட்ட அதிகாரிகளிடமும் பெரும்பான்மையினர் முறையிட்டனர். இதனையடுத்த அவ்விடத்துக்கு விரைந்த மகாவலித்திட்ட அலுவர்கள் குறிப்பிட்ட நிலப்பகுதிகள் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டதால் நீங்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனக்கூறி தமிழ் விவசாயிகளை விரட்டியத்துள்ளனர்.
அத்துடன் கோட்டைக் கேணி என்ற இடத்துக்கு அப்பால் தமிழர்கள் வர அனுமதி இல்லை என்றும், அப்படி வந்தால் பொலிஸாரை வரவழைத்து நடவடிக்கை எடுப்போம் என்றும் மகாவலி திட்ட அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் சொந்த நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாமல் ஏமாற்றத்தோடு தாம் திரும்பியதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten