vrijdag 9 augustus 2013

வடக்கில் ஒரு லட்சம் இராணுவக் குடியிருப்புக்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை: சிவாஜிலிங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழர் குடிப் பரம்பலை மாற்றவே காணி சுவீகரிப்பு இரகசிய முயற்சி: சம்பந்தன் சபையில் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 02:02.55 AM GMT ]
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லச்மன் கதிர்காமரின் காணியை சுவீகரித்தமையை முன்னிலைப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றத்தில் காணி சுவீகரிப்பு பிரச்சினையை விவாதப்படுத்தியது.
அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வரும் பலாத்கார காணி சுவீகரிப்பு வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் சனத்தொகை பரம்பலை மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் உத்தி என்று இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் குற்றம் சுமத்தினார்.
கணக்கெடுப்பின்படி வடக்கின் வலிகாமம் பகுதியில் 25 ஆயிரம் உரிமையாளர்களின் 6381 ஏக்கர் காணி பலாத்காரமாக சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதில் பலர் தமது காணிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்காக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சம்பந்தன் குறிப்பிட்டார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் லச்மன் கதிர்காமரின் மகனும் இதில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
போர் முடிந்து நான்கு வருடங்களாகியும் அதியுயர் பாதுகாப்பு வலயம் தொடர்கிறது.. பல குடும்பங்கள் இன்னும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறாமல் உள்ளன.
காணி சுவீகரிப்பின் மூலம் வடக்கு கிழக்கின் தமிழ் மக்களின் பரம்பலில் மாற்றம் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களின் கலாசாரத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த இரகசியமாக முயற்சிக்கப்படுகிறது என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
சம்பந்தன் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கு முன்னர் குழப்ப நிலை காரணமாக சபை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காணி சுவீகரிப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளமையால் அது தொடர்பில் சபையில் விவாதிக்க முடியாது என்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் ஏ.எச்.எம் அஸ்வரின் வாதத்தை அடுத்தே சபை ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் வழக்கு தொடர்பில் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்துவதில்லை என்ற உறுதிப்பாட்டின் அடிப்படையில் விவாதத்தை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதன் பின்னர் சம்பந்தன் காணி சுவீகரிப்பு விடயத்தை சபையில் முன்வைத்தார்.
வடக்கில் ஒரு லட்சம் இராணுவக் குடியிருப்புக்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை: சிவாஜிலிங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 02:43.21 AM GMT ]
வடக்கில் ஒரு லட்சம் இராணுவக் குடியிருப்புக்களை அமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும், சீன அரசின் உதவியுடன் பாரிய இராணுவத் தளங்களையும் இராணுவம் அமைத்து வருவதாகவும் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்களின் காணிகளையும் வீடுகளை விட்டு வெளியேறுவது போன்றதொரு நாடகத்தினை இராணுவத்தினர் அரங்கேற்றி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களின் காணிகளையும் வீடுகளையும் விட்டு வெளியேறி வருவதாக இராணுவத்தினர் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் வலி.வடக்கில் 6 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான பொது மக்களின் காணிகளை இராணுவம் சுவீகரித்து வைத்துள்ளது.
பொது மக்களின் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்ற இராணுவம் விடுவிக்கப்பட்ட வீடுகளுக்கு அருகிலும் முன்னாலும் உள்ள ஏனைய காணிகளை சுவீகரித்து அந்தந்தப் பகுதிகளில் சீன அரசின் உதவியுடன் நிரந்தர படை முகாம்களை அமைத்து வருகின்றது.
வல்வெட்டித் துறையில் அண்மையில் சில இடங்களை இராணுவம் விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் வல்வெட்டித்துறையில் தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமான 67 பரப்பு காணியை இராணுவம் சுவீகரித்து அந்த பகுதியில் பாரிய படைமுகாம்களை அமைத்து வருகின்றது.
இதேபோலவே தொண்டமனாறு அக்கரை கிராமத்திலும் தொண்டமனாறு கரையோரங்களிலும் சீன உதவியுடன் நிரந்த படை முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த அக்கரை கிராமத்தில் தான் மயிலிட்டியில் மீள்குடியேற்றம் என்றும் மக்களை ஏமாற்றிய ஈ.பி.டி.பி கடைசியில் சில வெற்றுக் காணிகளை காட்டி விடுவித்ததாக தெரிவித்திருந்தது.
வடக்கில் ஓரு லட்சம் படையினருக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்து அவர்களை நிரந்த குடிகளாக வடக்கில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மிக வேகமாக மேற்கொண்டு வருகின்றது. இதற்காக வெலி ஓயாவையும் முறிகண்டியையும் இணைக்கும் வீதியினையும் புனரமைப்பு செய்து வருகின்றது.
இதில் முதற்கட்டமாக 10 ஆயிரம் இராணுவச் சிங்கள குடியேற்றங்களையும் ஏற்படுத்தும் பணிகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.
வடக்கைப் போலவே கிழக்கில் மட்டகளப்பிற்கு அண்மித்த பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் காணியை கடற்படை சுவீகரித்து அங்கு படையினருக்கான குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறு வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள மக்களை பெரும்பான்மை இனமாக குடியேற்றம் செயற்றிட்டங்களை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது எனவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten