dinsdag 20 augustus 2013

மூன்று ஈழத்தமிழ் அகதிகளை நாடு கடத்துமாறு இந்திய அரசு உத்தரவு- நாடுகடத்தக் கூடாது என வைகோ கோரிக்கை

[ செவ்வாய்க்கிழமை, 20 ஓகஸ்ட் 2013, 10:23.44 AM GMT ]
தமிழ்நாட்டில் இருந்து மூன்று தமிழ் அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்ததுமாறு இந்திய மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
இத்தாலி ராஜன் எனப்படும் சுந்தர்ராஜன, ஈழநேரு மற்றும் செந்தூரன் ஆகியோரையே நாடுகடத்துமாறு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
செங்சல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட செந்தூரன் தற்போது தாம்பரத்தில் தங்கியுள்ளார்.
இதேவேளை, அவுஸ்ரேலியாவுக்கு ஆட்களை அனுப்ப முயன்ற வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற இத்தாலி ராஜன், புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஈழநேரு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை மூவரையுமே இந்திய மத்திய அரசு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்த நாடு கடத்தல் உத்தரவைத் தடுத்து நிறுத்த, இந்த மூவரும், சென்னையில் உள்ள சட்டவாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று பேரையும் நாடு கடத்தக் கூடாதென வைகோ கோரிக்கை
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஈழ நேரு, செந்தூரன், இத்தாலியராஜன் எனப்படும் சுந்தரராஜன் ஆகிய மூன்று இலங்கைத் தமிழர்களை திரும்ப அவர்கள் நாட்டிற்கு அனுப்பக்கூடாது என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இவர்களில் சுந்தரராஜன் சில இலங்கைத் தமிழ் அகதிகளை பயண ஆவணங்களின்றி அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பமுயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவ்வழக்குக் தொடர்பாக சுந்தரராஜன் மேல் முறையீடு செய்திருக்கிறார்.
ஈழநேரு தற்போது திருச்சி சிறையில் இருக்கிறார். அவர் ஒருவரை ஒரு இலட்சம் ரூபாய் அளவு ஏமாற்றியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட செந்தூரன் தற்போது தாம்பரத்தில் வசித்து வருகிறார்.
அவர்கள் மூவரும் இலங்கைக்குத் திரும்ப அனுப்பப்படவிருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கைத் தமிழர்களை அவர்களது விருப்பத்துக்கு மாறாக, நாடு கடத்தக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் வைகோ கூறுகிறார்.
கடந்த 20 ஆண்டுகளில் இவ்வாறு இலங்கைத் தமிழ் அகதி எவரும் கட்டாயமாக நாடு கடத்தப்பட்டதில்லை எனவும் சுட்டிக்காட்டும் அவர், அம்மூவரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே ஆகியோருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
தமிழீழ ஏதிலிகள் மூவரை நாடு கடத்தும் இந்திய அரசின் உத்தரவை திரும்பப் பெறுக-  பெ.மணியரசன் அறிக்கை!
தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இந்திய அரசு, அதன் நீட்சியாக தமிழீழத் தமிழர்களின் உயிரையும், உரிமைகளையும் காவு கொள்ளத் துடிப்பதை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரிலிருந்து நாம் உணர்ந்து வருகிறோம்.
இதன் ஒரு பகுதியாகத்தான், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல்லாண்டு காலமாக இருந்து பின்விடுதலையாகி, தற்போது தாம்பரத்தில் வசித்து வரும் திரு. செந்தூரன், தற்போது திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரு. ஈழநேரு, சென்னை புழல் சிறையில் அடைபட்டுள்ள திரு. சவுந்தரராஜன் ஆகிய மூவரையும் இலங்கைக்கு நாடு கடத்துகின்ற நடவடிக்கையை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
சிங்களப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறையிலிருந்து உயிர் பிழைத்து தமிழகத்திற்கு வந்த தமிழீழ ஏதிலிகளை, திரும்பவும் இலங்கை அரசின் இனவாதக் கொடுங்கரங்களிடம் ஒப்படைப்ப தென்பது, ஒரு கசாப்புக்கடையில் ஆடுகளை ஒப்படைப்பது போன்றதுதான் அவர்களது உயிருக்கு தெரிந்தே விளைவிக்கும் தீங்காகும்.
செந்தூரன் உள்ளிட்ட இம்மூவரும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் எதிரான எவ்விதக் குற்றங்களிலும் இங்கு ஈடுபடவில்லை. தம்மை பொய் வழக்குகளில் சிறைவைத்திருப்பதைக் கண்டித்தே தொடர்ந்து, அறவழிப் போராட்டங்களை நடத்தினர்.
மார்வாடி, குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் என வந்தவனெல்லாம் தமிழகத்தில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்க, பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து தப்பித்து தமிழகம் வரும் தமிழீழ ஏதிலிகளுக்கு சிறையும், நாடு கடத்தல் உத்தரவுகளும் வழங்கப்படுகின்றன.
திபெத், பர்மா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகளுக்கு இந்தியாவில் பெரும் சலுகைகள் அளிக்கப்படுவதும், தமிழீழ ஏதிலிகளுக்கு எந்நேரமும் கண்காணிப்பு � கெடுபிடிகளை அதிகப்படுத்தி, அவர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்துத் தர மறுப்பதும், இந்திய அரசின் தமிழினத்திற்கு எதிரான இனப்பாகுபாட்டையே எடுத்துக்காட்டுகிறது.
எனவே, இந்திய அரசு இம்மூவரையும் நாடு கடத்தும் உத்தரவினை திரும்பப் பெற வேண்டும். தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் இக்கோரிக்கையை முன்னேடுத்து போராட வேண்டும். இம்மூவரையும் சூழ்ந்துள்ள ஆபத்திலிருந்து, அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten