dinsdag 20 augustus 2013

ஈழத்தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது: முதலமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்

[ செவ்வாய்க்கிழமை, 20 ஓகஸ்ட் 2013, 05:08.02 AM GMT ]
தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் ஈழத்தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பியனுப்பக் கூடாது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடாத்திவரும் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டிற்கு வந்த அகதிகளாக தஞ்சம் அடைந்தோரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இலங்கையில் போர் முடிந்துவிட்டது, அங்கே அமைதி திரும்பிவிட்டது என்கிற காரணங்களைக் கூறி, இங்கு அகதிகள் முகாம்களில் வாழ்ந்துவரும் தமிழர்களை திருப்பு அனுப்பும் முயற்சி கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்தே நடந்த வருகிறது.
இங்குள்ள காவல் துறை அதிகாரிகள், ஐ.நா.வின் அகதிகள் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் அவ்வாறு அனுப்பி வைத்த பல அகதிகள் இன்று வரை அங்கு வாழ இடமின்றியும், வழியின்றியும் பெரும் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஏனெனில் போரினால் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையினர், அவர்கள் வாழ்ந்த இடங்கள் சிங்கள இராணுவத்தால் அபகரிக்கப்பட்டு, இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால், வாழ இடமின்றி காடுகளிலும், அவர்களுக்கு வாழ காணியற்ற மற்ற பல இடங்களிலும் சிங்கள அரசால் குடியமர்த்தப்படுகின்றனர்.
இதுமட்டுமின்றி, தமிழர்கள் பெருமளவில் வாழும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிகளில் மட்டும் சற்றெறக்குறைய 2 இலட்சம் சிங்கள இராணுவப் படைகள் நிறுத்தப்பட்டு, சமூக வாழ்க்கையே இல்லாத ஒரு நிலை அங்கு நிலவுகிறது. இராணுவத்தின் ஒடுக்குமுறைக்குள் சிக்கி, தமிழ் மக்கள் மூச்சுத் திணறி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இங்கு வாழும் அகதிகளை கட்டாயமாக வெளியேற்றுவது மனிதாபிமானமற்ற செயலாகும்.
குறிப்பாக, முன்னாள் போராளிகள் என்ற ஐயத்தின் பேரிலும், இலங்கைக்கு மண்ணெண்ணெய், இரத்தம் கடத்தினார்கள் என்ற குற்றச்சாற்றுகளின் பேரிலும் செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கும் க்யூ பிரிவு காவல் துறை, அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில், அவர்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
இது ஐ.நா.வின் அகதிகள் காப்பு பிரகடனத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். தங்கள் சொந்த நாட்டில் தங்களுடைய உயிருக்கும், உடமைக்கும், சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உள்ளதென்று, மற்றொரு நாட்டில் தஞ்சமடையும் எவரையும், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக அவர்களின் நாட்டிற்கு அனுப்பக் கூடாது என்று ஐ.நா.வின் அகதிகள் காப்பு பிரகடனம் கூறுகிறது.
உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட இந்த பிரகடனத்தை இந்திய அரசு இதுநாள் வரை ஏற்றுக்கொள்ளாதிருக்கும் காரணத்தினால், ஈழத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கை இங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சிறப்பு முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைத்தால் அவர்கள் கொல்லப்படுவது நிச்சயம். இலங்கையில் நடந்த தமிழின அழிப்புப் போரின் முடிவில் சரண்டைந்த பல்லாயிரக்கணக்கான போராளிகளின் நிலை என்ன ஆனது என்று இன்று வரை தெரியாத நிலையில், இங்கு கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்புவது, அவர்களை மீண்டும் கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பானதாகும்.
எனவே இப்பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். அகதிகளாய் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியதோடு மட்டுமின்றி, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும், ராஜபக்சாவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும்,
ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்ய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, சிறப்பான பல தீர்மானங்களை தானே முன்மொழிந்து நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர், இங்குள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்கவும், அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இங்கேயே வாழ உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். சிறப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்படும் எவரையும் இலங்கைக்கு அனுப்பி வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten