woensdag 7 augustus 2013

லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய நபர் இந்தியாவில் கைது- இலங்கையின் தேவைகளை இந்தியா பூர்த்தி செய்கிறது

பிரான்ஸ் பிரஜைகளிடம் பலவந்தமாக பணத்தை பெற்ற இலங்கையருக்கு ஆறுமாத சிறை
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 06:56.12 AM GMT ]
இலங்கை சென்றிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகளிடம் பலவந்தமாக மூவாயிரம் ரூபா பணத்தை பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை விதித்துள்ளது.
கொழும்பு நீதவான் திலின கமகே முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன் போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த துவான் சலிம் என்ற இந்த நபருக்கு மேற்படி சிறை தண்டனையை விதித்த நீதவான், ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதித்தார்.
இவ்வாறான நபர்களின் செயல்கள் காரணமாக இலங்கை தொடர்பாக வெளிநாட்டவர்களுக்கு தவறான அப்பிராயம் ஏற்படும் என நீதவான் தெரிவித்தார்.
தான் மற்றும் தனது நண்பி ஆகியோருக்கு, இந்திய விசாவை பெறும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தருவதாக கூறி, குற்றவாளி பலவந்தமாக மூவாயிரம் ரூபா பணத்தை பெற்று கொண்டதாக ஹெடலின் பினோ என்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண், சுற்றுலாப் பொலிஸாரிடம் செய்திருந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய நபர் இந்தியாவில் கைது- இலங்கையின் தேவைகளை இந்தியா பூர்த்தி செய்கிறது
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 06:06.00 AM GMT ]
முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பின் அடிப்படையில் இந்திய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட அவர், இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் சர்வதேச பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்தும், சர்வதேச பொலிஸார் அவரை கைது செய்யவதற்கான சிகப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
குறித்த சந்தேக நபரை கைது செய்த இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அது குறித்து இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து அங்கு சென்ற இலங்கை அதிகாரிகள் சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பு வட்டார தகவல்கள் தெரிவித்தன.
இலங்கை கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர், தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசேட பொலிஸ் குழு அவரிடம் விசாரணைகளை நடத்தி வருகிறது.
இந்தியா இலங்கையின் தேவைகளை பூர்த்தி செய்கிறது- இந்திய உயர்ஸ்தானிகர்
இந்தியா இலங்கைக்கு உரிய நேரத்தில் உரிய தேவைகளை வழங்கிவருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹா தெரிவித்துள்ளார்
இந்த உதவிகளின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படு;த்த முடிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
2008 ஆம் ஆண்டு போர் இடம்பெற்ற வேளையில் இந்தியா உலர் நிவாரணங்களை வழங்கியது.
போரினால் காயப்பட்டவர்களுக்கு புல்மோட்டையில் வைத்தியசாலை ஒன்றை அமைத்து அங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் மூவாயிரம் பேருக்கு சத்திரசிகிச்சைகளும் அளிக்கப்பட்டன என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், தற்போது வடக்குகிழக்கில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வீடமைப்பு திட்டங்களை இந்திய அரசாங்கம் துரிதகதியில் மேற்கொண்டு வருகிறது என்றும் சின்ஹா குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten