donderdag 15 augustus 2013

பிரித் ஓத வேண்டியவர் பிரித்து ஓதுகிறார்

 [ valampurii.com ]
இலங்கை பல்லின நாடல்ல. இது பெளத்த சிங்கள நாடு என, பொது பல சேனாவின் தலைவர் வணக்கத்துக்குரிய விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெளத்த சிங்கள நாடு எனக் கூறுவதன் மூலம் தனது மதவாத, இனவாத கருத்தை சிங்கள மக்களிடம் விதைக்க அவர் முற்பட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் பெளத்த சிங்கள நாடு எனக் கூறுவதன் ஊடாக இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான வன்முறைகளும் அட்டூழியங்களும் தொடர்வதை பொது பலசேனா ஆதரிப்பது இங்கு உறுதியாகின்றது.
இலங்கையில் இனவாதம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று இந்த நாட்டின் ஆட்சி பீடத்தின் உயர் தரப்பினர் கூறி வருகின்ற போதிலும், பொது பல சேனாவின் தலைவர் விமலஜோதி தேரர் மீண்டும் மீண்டும் இலங்கையை பெளத்த நாடாகப் பிரகடனப்படுத்தி வருவது அதிர்ச்சியளிக்கக் கூடியது.
அதே சமயம் அவருக்கெதிராக எந்த விதமான சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
ஆகவே, இலங்கையின் சிறுபான்மையினர் தங்களின் இனம் பற்றி கதைப்பதை இனவாதமாகக் கருதப்படுகின்றது.
மாறாக பெரும்பான்மையினம் சார்ந்து எதைக் கதைத்தாலும் அது சிங்களத்தையும் பெளத்தத்தையும் காப்பாற்றுவதற்கான வேதமாகக் கருதப்படுகின்றது.
இத்தகைய நிலைமை இந்த நாட்டில், இன வாதம் ஓயப் போவதில்லை என்பதற்கு தக்க சான்றாகும்.
நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஆளும் வர்க்கத்துக்கு அக்கறைப்பாடு இருக்குமாயின் முதலில் பெரும்பான்மை இனம் சார்ந்தவர்கள் இனவாதம் பேசுவதைத் தடுப்பதே முதற்பணியாகும்.
ஆனால் எங்கள் நாட்டின் சிறுபான்மையினர் கதைப்பதை இனவாதமாகக் கருதப்பட்டு அவர்களை கண்காணிப்பது, அவர்கள் வாழும் இடங்களில் படை முகாம்களை அமைப்பது, எக்காலத்திலும் சிறுபான்மையின மக்களை நம்பக் கூடாது என்பது போலக் கருதி அவர்களுக்கு ஒவ்வாத சட்ட திட்டங்களை உருவாக்குவது, அவர்களுக்கு உரிமை தரக் கூடிய சட்டங்களை நீக்குவது என எத்தனையே நிட்டூரங்கள் நடந்த வண்ணமுள்ளன.
இத்தகைய போக்குகள் புத்திசாலித்தனம் என்ற அடிப்படையில் செய்யப்பட்டாலும் எதிர்பாராத ஆபத்துக்களையும் இத்தகைய திட்டங்கள் கொடுத்து விடலாம் என்ற உண்மை இங்கு உணரப்படுவதாக இல்லை.
இத்தகையதொரு குறுகிய சிந்தனையிலேயே பொது பல சேனா போன்ற அமைப்புக்களின் இனவாத, மதவாத கருத்துக்கள் தென்னிலங்கையில் அதிவேகமாக விதைக்கப்படுகின்றன.
இந்த நாட்டில் பெளத்த துறவியாக இருக்கக் கூடிய ஒருவர் இலங்கை பல்லின மக்களின் நாடல்ல. இது சிங்கள பெளத்த நாடு எனக் கூறுவது எதற்கானது?
இத்தகைய கருத்தை இப்போது அவர் முன்வைக்க வேண்டியதற்கான தேவை என்ன? என்பது தீவிரமாக ஆராயப்பட வேண்டியதாகும்.
உலகுக்கு தர்மத்தைப் போதிக்கும் பொருட்டு பிரித் ஓத வேண்டிய பெளத்த துறவியயாருவர் பொது பல சேனாவின் தலைவராக இருந்து கொண்டு இனத்தை, மதத்தை பிரித்து ஓதுகிறார்.
ஒரு பெளத்த துறவி இப்படி நடப்பாராகயிருந்தால் இலங்கையில் சிறுபான்மையினங்களின் உரிமைகளும் பாதுகாப்புக்களும் எத்தன்மையிலுள்ளதென்பதை தெரிந்து கொள்வதில் கடினம் இருக்க முடியாது.

Geen opmerkingen:

Een reactie posten