maandag 12 augustus 2013

யாழில் ஒலிபெருக்கி பாவணையால் மாணவர் கல்வியில் பாதிப்பு - யாழ் மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு கூட்டம்

கொழும்பில் காப்பகங்களில் இருந்த சிறுமியும் முதியவர் ஒருவரும் காணாமல் போயுள்ளனர்
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 06:57.03 AM GMT ]
கொழும்பில் சிறுவர் காப்பகம் ஒன்றில் இருந்த சிறுமியும், முதியோர் காப்பகத்தில் இருந்த முதியவர் ஒருவரும் காணாமல் போயியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 10 சிறிதம்ம மாவத்தை லோரிஸ் சிறுவர் காப்பகத்தில் இருந்த 14 வயதான சிறுமி நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளார்.
இந்த சிறுமி காப்பகத்தில் இருந்த மேலும் சிலருடன் கொழும்பு துறைமுகத்தின் புதிய தெற்கு முனையத்தை பார்வையிடுவதற்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கொழும்பு பம்பலப்பிட்டி ரென்கட் பிளேஸில் உள்ள முதியோர் காப்பகத்தில் தங்கியிருந்த 68 வயதான முதியவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுளளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் ஒலிபெருக்கி பாவணையால் மாணவர் கல்வியில் பாதிப்பு - யாழ் மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு கூட்டம்
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 07:06.35 AM GMT ]
யாழ்ப்பாணம் அராலி தெற்கு, அராலி கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவிக்கப்படுவதால் அப்பகுதியிலுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் கல்வி கற்க வேண்டியுள்ளதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 
திருவிழாக்கள் ஆரம்பித்துள்ளமையால் ஒலிபெருக்கிகள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் மாணவர்களின் சிந்தனை கல்வி கற்றலிலிருந்து அகன்று செல்வதாகவும் இதனால் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெறமுடியாமல் பேய்விடக்கூடும் எனப் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ் ஒலிபெருக்கி பாவனையினை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களை பெற்றோர் கேட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு கூட்டம்
யாழ். செயலகத்தில் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச நிர்வாக பிரதேச செயலர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வு இன்று திங்கள் முதல் நடைபெற்று வருகின்றது.
யாழ். செயலகத்தில் இடம்பெற்ற ஆராய்வுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயங்கள் எனச் சொல்லப்பட்ட இடங்களில் இதுவரை விடுவிக்கப்பட்ட பிரதேசங்களும், பாதுகாப்பு படைத்தரப்பினரின் பயன்பாட்டில் தற்சமயம் இருக்கும் தனியார் வீடுகள் மற்றும் காணிகள் குறித்தும் பிரதேச செயலாளர்களின் தகவல் அறிக்கைகளின் பிரகாரம் கண்டறியப்பட்டன.
யாழ். மாவட்டத்தில் இதுவரை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட இடங்களில் வடமராட்சி கிழக்கில் நாகர் கோவில் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மட்டுமே கண்ணிவெடி அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் ஏனைய சகல பிரதேசங்களிலும் கண்ணிவெடி அகற்றப்பட்டு விட்டதாக தங்களுக்கு அத்தாட்சிப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்தினர்.
அதேவேளை தற்போது உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படும் பலாலியையும் அதனை அண்டிய பகுதிகளிலும் கண்ணி வெடி அகற்றும் பணிகள் முடிவுறவில்லை எனவும் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்தகால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்கின்றவர்கள், காணியற்றவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு விரைவில் அம்மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, அதுவரை தற்போது தங்கியிருக்கும் இடங்களில் அம்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கண்டறிந்து துரிதமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும், காணியற்றவர்களுக்கு அரச காணிகள் அடையாளம் காணுவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் யாழ் மாவட்டத்தின் ஏனைய அடிப்படைத் தேவைகளான மின்சாரம், குடிநீர் விநியோகம் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் அறிக்கைகள் விளக்கங்களுடன் விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக அமைச்சரின் தூரநோக்கு சிந்தனையில் அராலி வரையிலான 21 கிலோமீற்றர் தூரத்திற்கு ஆரம்பிக்கப்படவுள்ள நிலாவரை குடிநீர்த்திட்டத்தினை ஊரி மற்றும் தம்பாட்டி வரை யிலான பகுதிகளுக்கும் விஸ்தரிப்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
மேலும் தற்சமயம் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள மின்சார விநியோக தடங்கல்களை நிரந்தரமாக நீக்குவதற்குரிய தேவையும் அதற்குரிய வழி வகைகளும் விரிவாக கலந்துரையாடப்பட்டன. மற்றொருபுறம் வேலணை பிரதேச செயலாளரினால் தற்சமயம் குடாநாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் காரணமாக குடிநீர் மற்றும் விவசாய செய்கை பாதிப்பும் கால்நடைகளின் மரணங்களும் தெரியப்படுத்தப்பட்டன.
உடனடியாகவே அனர்த்த முகாமைத்துவ அமைச்சருடன் தொடர்பினை ஏற்படுத்திய அரசாங்க அதிபர், வரட்சி நிலைமையினை எடுத்துக் கூறியதன் பிரகாரம் உரிய நிவாரணங்களை வழங்குவதாக அங்கு உறுதியளிக்கப்பட்டமை முக்கிய விடயமாகும் .

Geen opmerkingen:

Een reactie posten