dinsdag 6 augustus 2013

ஆடி அமாவாசை தினமான இன்று பிதிர்க்கடனுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்ட கீரிமலை தீர்த்தம்!


ஆடி அமாவாசை தினமான இன்று கீரிமலைத் தீர்த்தக் கேணியில் பிதிர்க்கடன் நிறைவேற்ற பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இப்பகுதியை சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களும் இதனைப் பயன்படுத்தி தமது ஊருக்குச் சென்றதுடன் தீர்த்தக் கேணியிலும் நீராடியுள்ளனர்.
கடந்த இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படாமல் உள்ளது வலிகாமம் வடக்கு. தமது நிலத்தில் மீள்குடியேற்றுமாறு தொடர்ந்து கோரிவரும் இப்பிரதேச மக்கள் பல்வேறு இடங்களில் இன்னமும் அகதிகளாக வாழ்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலை நகுலேஸ்வர் ஆலயத்தின் தீர்த்தக் கேணியில் ஆண்டுதோறும் முன்னோர்களுக்காக தீர்த்தமாடி பிதிர்க்கடன் செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டும் ஆடி அமாவாசை தினமான இன்றைய தினம் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பெருமளவான பக்கத்தர்கள் கலந்து கொண்டு பிதிர்க்கடன் நிறைவேற்றினர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இங்கு வந்த இப்பிரதேச மக்கள் தமது ஊரைப் பார்த்து பெருமூச்செறிந்தனர்.
எப்பொழுது தம்மை தமது சொந்த நிலத்தில் வசிக்க விடுவார்கள் என்றும் நினைத்து தீர்த்தமாடி கீரிமலை ஆலயத்தை வணங்கியதாத் தெரிவிக்கின்றனர்.
தமது முன்னோர்கள் பலர் ஊரைக்குத் திரும்பக் காத்திருந்தனர் என்றும் அவர்கள் இறுதிவரை தமது சொந்த நிலத்தை பார்க்காமலே இறந்து போனதாகவும் இவ்வாறான துயரங்களுக்கு எப்பொழுது முடிவு என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
பிதிர்க்கடனை நிறைவேற்றும் ஒரு இடமாக மாத்திரம் தமது வாழ்விடம் மாறிவிட்டதாகவும், மிகவும் துயரத்துடன் தெரிவிக்கும் மக்கள் தமது ஊரை மீண்டும் பார்க்காமலே இறந்த தமது முன்னோர்களுக்கு கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்துவது மிகவும் வருத்தம் தரும் விடயம் என்று தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தை சேர்ந்த தமக்கு மாத்திரம் பிதிர்க்கடன் செலுத்தும் நாள் ஒன்று மட்டுமே அனுமதிக்கப்படடுவதாகத் தெரிவிக்கும் மக்கள் சுற்றுலாப் பிரயாணிகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சென்று வரமுடியும் எனவும் சுட்டிக்காட்டினர்.

Geen opmerkingen:

Een reactie posten