zaterdag 3 augustus 2013

யாழில் தேர்தல் வன்முறை: சிறிலங்கா சுதந்திர கட்சியின் சுவரொட்டிகள் மீது கழிவு எண்ணை தாக்குதல்

யாழில் தேர்தல் வன்முறையில் ஈடுபடும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை - வட மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கும் கட்சிகளின் விபரம்
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 08:25.19 AM GMT ]
வடமாகாண சபைக்கான தேர்தல் யாழில் ஆரம்பமாகியுள்ள வேளையில் வன்முறைச் சம்பவங்களும் ஆரம்பமாகியுள்ளதாக யாழ்.தேர்தல் மாவட்ட உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் அச்சுதன் இன்று தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தல் காலங்களில் வன்முறையில் ஈடுபடும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உறுப்புரிமையும் இரத்துச் செய்யமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் மாகாணசபைத் தேர்தலில் எந்த விதமான வன்முறைகளும் இடம் பெறக்கூடாது என்பதே எல்லோரினதும் விருப்பமாகும்.
அதே நேரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போதும் தேர்தல் இடம்பெறும் தினத்திலும் வேட்பாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் வன்முறையில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் அவரது மாகாணசபை உறுப்புரியையும் அவர் இழக்க வேண்டியேற்படும்.
யாழ்ப்பாணத்தில் தேர்தல்கால வன்முறைகள் இதுவரை காலமும் இடம்பெறுவது மிக அரிது. இம்முறையும் அவ்வாறான எல்லோரும் வியக்கத் தக்க விதத்தில் வன்முறைகளற்ற தேர்தல் ஒன்று இடம்பெறும் என நம்புகின்றேன்.
இதனைக் கருத்திற்கொண்டு ஒவ்வொரு வேட்பாளரும் தமது தேர்தல் பிரசாரங்களை மேற் கொள்ளவேண்டும் எனவும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவித்தார்.
வடமாகாணசபைத் தேர்தலில் களமிறங்கிய கட்சிகளின் விபரம்
எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடக்கவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலில் 36 ஆசனங்களுக்காக மொத்தம் 14 அரசியல்கட்சிகளும், 28 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வேட்பாளர் பட்டியல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதை அடுத்து இது தொடர்பான விபரங்களை யாழ்.மாவட்ட தேர்தல் ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.
இக் கட்சிகள் தமது பிரசார நடவடிக் கைகளில் இப்போது தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தத் தேர்தலில் மாவட்ட ரீதியாக போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் விபரம் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம்
1.சிறிலங்கா தொழிலாளர் கட்சி, 2. இலங்கை தமிழரசுக் கட்சி, 3.ஜனசெத பெரமுன, 4.சோசலிச சமத்துவக் கட்சி, 5. ஐக்கிய தேசியக் கட்சி, 6. மக்கள் விடுதலை முன்னணி, 7. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 8. ஜனநாயகக் கட்சி, 9. ஜனநாயக ஐக்கிய முன்னணி, 10. ஐக்கிய சோசலிசக் கட்சி, 11.சிறிலங்கா மக்கள் கட்சி,
வவுனியா மாவட்டம்
1.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 2. ஜனசெத பெரமுன, 3. இலங்கை தொழிலாளர் கட்சி, 4. எக்சத் லங்கா மகா சபா, 5. இலங்கைத் தமிழரசுக் கட்சி, 6. மக்கள் விடுதலை முன்னணி, 7. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 8. ஜனநாயகக் கட்சி, 9. ஐக்கிய தேசியக் கட்சி, 10.ஐக்கிய சோசலிசக் கட்சி, 11. ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பு, 12. ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி.
முல்லைத்தீவு
1. இலங்கைத் தமிழரசுக் கட்சி, 2. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 3. ஐக்கிய தேசியக் கட்சி, 4. ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி, 5. மக்கள் விடுதலை முன்னணி, 6. ஜனசெத பெரமுன, 7. ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பு, 8. இலங்கை தொழிலாளர் கட்சி, 9. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 10. ஐக்கிய சோசலிசக் கட்சி.
மன்னார் மாவட்டம்
1. இலங்கைத் தமிழரசுக் கட்சி, 2. ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி, 3. ஐக்கிய தேசியக் கட்சி, 4. இலங்கை தொழிலாளர் கட்சி, 5.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 6. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 7. முஸ்லிம் விடுதலை முன்னணி, 8. மக்கள் விடுதலை முன்னணி, 9. தேசிய முன்னணி, 10. ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு, 11. ஐக்கிய சோசலிசக் கட்சி, 12. ஜனநாயகக் கட்சி.
கிளிநொச்சி மாவட்டம்
1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 2. ஜனசெத பெரமுன, 3. இலங்கைத் தமிழரசுக் கட்சி, 4. இலங்கைத் தொழிலாளர் கட்சி, 5. மக்கள் விடுதலை முன்னணி, 6. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 7. ஐக்கிய தேசியக் கட்சி, 8. ஐக்கிய சோசலிசக் கட்சி, 9. ஜனநாயக தேசியக் கூட்டணி, 10. ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி, 11. ஈழவர் ஜனநாயக முன்னணி.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் 9 சுயேட்சைக் குழுக்களும், கிளிநொச்சியில் இரண்டு சுயேட்சைக் குழுக்களும், முல்லைத்தீவில் மூன்று சுயேட்சைக் குழுக்களும், மன்னாரில் எட்டு சுயேட்சைக் குழுக்களும், வவுனியாவில் ஆறு சுயேட்சைக் கழுக்களும் தேர்தலில் குதித்துள்ளன.
இது வரை யாழில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 2 வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் தலமையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

யாழில் தேர்தல் வன்முறை: சிறிலங்கா சுதந்திர கட்சியின் சுவரொட்டிகள் மீது கழிவு எண்ணை தாக்குதல்
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 07:19.26 AM GMT ]
வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் முதலாவது வன்முறைச் சம்பவம் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி தெரிவித்தார்.
சிறிலங்கா சுகந்திரக் கட்சியின் தேர்தல் சுவரொட்டிகளை இனம் தெரியாத நபர்கள் கிழித்து எறிந்துள்ளதுடன் கழிவு எண்ணை பூசி அழித்துள்ளதாகவும், தங்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக யாழில் வடகைக்கு எடுக்கப்பட்ட வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  குறிப்பிட்டுள்ளார்
வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்களோ, முரண்பாடுகளோ இதுவரைக்கும் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் பதிவு செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் குழப்பங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.
தரம் –5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சை, உயர்தர மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சை, நல்லூர் உற்சவ காலம் மற்றும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இவை எல்லாம் ஒரே நேரத்தில் வருவதனால் பொலிஸார் அதிகமானோர் கடமைக்குத் தேவையாகவுள்ளது.
இருப்பினும் எம்மிடம் உள்ள ஆளணியைக் கொண்டு நாம் கடமைகளைப் பிரித்துக்கொடுத்துள்ளோம்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற வாய்ப்புள்ளமையினால் பொலிஸாரை யாழ்.மாவட்டச் செயலகத்தைச் சுற்றிக் கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.
அதேபோன்று பல சோதனைச் சாவடிகளையும் புதிதாக அமைத்துள்ளோம்.
மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுவர். யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் காலத்தில் ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கென விசேட பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளோம். அப் பிரிவுக்குத் தொலைத் தொடர்பு வசதிகளையும் இலகுபடுத்திக் கொடுத்துள்ளோம் என யாழ். பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten