zondag 11 augustus 2013

இந்தியத் தூதரக கலைநிகழ்ச்சியில் கல்வீச்சு தாக்குதல்!- அம்பாந்தோட்டையில் சம்பவம்!


கைகலப்பில் ஈடுபட்ட இரண்டு பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி! - இரயிலில் மோதுண்டு இருவர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013, 05:37.02 AM GMT ]
புத்தளம் கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் கைகலப்பில் ஈடுபட்ட இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்களின் நிலைமை ஆபத்தானதாக இல்லை என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.
ஆயிரம் ரூபா பணப்பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டு பொலிஸாரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை நடத்தி வருகிறார்.
இரயிலில் மோதுண்டு இருவர் பலி
புத்தளம் முந்தல் மற்றும் ரம்புக்கன பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்துக்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரம்புக்கன யடக்கம ரயில் பாதையில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மோதுண்டு 49 வயதான நபர் உயிரிழந்தார்.
இவர் ரம்புக்கன தல்தேவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறினர்.
அதேவேளை முந்தல் முத்துதோடுவாவை ரயில் பாதையில் புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை நடந்த இந்த சம்பவத்தில் 76 வயதான மதுரங்குளி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் முந்தல் மற்றும் ரம்புக்கன பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தியத் தூதரக கலைநிகழ்ச்சியில் கல்வீச்சு தாக்குதல்!- அம்பாந்தோட்டையில் சம்பவம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013, 04:49.06 AM GMT ]
இலங்கையின் தென்மாகாணத்தில் உள்ள அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சியில், மேடை மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அம்பாந்தோட்டையில், இந்தியத் தூதரகத்தினால் நேற்றிரவு இசை, நடன நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அம்பாந்தோட்டையில உள்ள இந்தியத் துணைத்தூதரக தலைமை அதிகாரி ரகுநாதன் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற இந்த நிகழ்வில் சுமார் 5000 பேர் வரையில் கலந்து கொண்டனர்.
இந்திய பெண் நடனக் கலைஞர் ஒருவரின் நடன நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, கடற்கரைப் பக்கமாக இருந்து மேடையை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதனால், நடன நிகழ்ச்சி தடைப்பட்டது.
இலங்கை பொலிஸாரின் பாதுகாப்புடன் சிறிது நேரத்துக்குப் பிறகு நடன நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து இந்தியத் தூதுவர் யஸ்வந்த் சின்ஹா, இலங்கையின் வெளிவிவகார அமைச்சிடம் முறைப்பாடு செய்வார் என்று இந்திய தூதரக தகவல் மற்றும் கலாசார ஆலோசகர், பிரேந்தர் யாதவ், தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten