vrijdag 7 juni 2013

மட்டு. பாலமீன்மடுவில் மதுபானசாலையை மூடுமாறு கோரி மறியல் போராட்டம்


மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதியும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியுமான பாலமீன்மடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
பாலமீன்மடு மற்றும் திராய்மடு, முகத்துவார பொதுமக்கள், பொது அமைப்புகள், மகளிர் அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள்,ஆலயங்கள் இணைந்து இந்த மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
இன்று காலை முகத்துவாரம் வெளிச்சவீட்டு சந்தியில் இருந்து பெண்கள், ஆண்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கைகளில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் மதுபானசாலையை மூடு, மீனவர்களின் வாழ்வை சீரழிக்காதே, மட்டக்களப்பில் மதுபானசாலை அமைக்க அனுமதி வழங்காதே போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட பேரணி சென்றது.
பாலமீன்மடுவில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்திலும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
மீனவர்கள் மற்றும் கூலிதொழில்களை செய்வோர் செறிந்துவாழும் இப்பிரதேசத்தில் மதுபானசாலை அமைக்கப்படுவதன் காரணமாக தமது குடும்பம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.
மீன்பிடியில் ஈடுபடும் தமது கணவன்மார் மாலை வேளைகளில் மதுபானசாலையே கதியென இருப்பதாகவும் இதனால் தினமும் தாங்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மதுபானசாலை போன்று கிராமங்களில் வீடுகளில் விற்பனை செய்யப்படும் சட்ட விரோத மதுபானத்தையும் தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“நகரிலிருந்து விரப்பட்ட மதுபானசாலை எமது ஊருக்கு வேண்டாம்”, “குடும்பங்களை சீரழிக்கும் மதுபானசாலையை இழுத்து மூடு”, “எமக்கு வேண்டாம் மதுபானசாலை”, “மீறினால் தருவோம் பிரியாவிடை”, “மதுவை ஒழிப்போம் மக்களை பாதுகாப்போம் ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
இதன்போது ஸ்தலத்துக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), இரா.துரைரெட்னம், பிரசன்னா இந்திரகுமார், கிருஸ்ணபிள்ளை ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தமது ஆதரவையும் தெரிவித்தனர்.
அத்துடன் ஆர்ப்பாட்ட மறியல் போராட்டத்தில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. சம்பவ இடத்துக்கு வந்த மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணவர்த்தன மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.
எனினும் முறையான அனுமதிபெற்றே மதுபானசாலை திறக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்த போதிலும், பொதுமக்களின் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டதன் காரணமாக குறித்த மதுபானசாலையை இயங்க அனுமதிக்க முடியாது என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
இதனையடுத்து, குறித்த மதுபானசாலையை மூடுவதாகவும் அதன் அனுமதியை ரத்துச் செய்வதாகவும் பிரதேச செயலாளர் கிரிதரன் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த மதுபானசாலையில் உள்ள பொருட்கள் அகற்றப்படும் வரையில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பாதுகாப்புக்கு அமர்த்துவதாக பொலிஸ் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணவர்த்தன தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கலைந்து சென்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten