[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 07:24.04 AM GMT ]
புதிது புதிதாக முறிகளை (bond) விற்பதும், வெளிநாட்டு நிதிச் சந்தையில் கடன் வாங்குவதுமாக இலங்கை திறைசேரியின் பொருளியல் வாழ்வு கழிகிறது.
வெலிங்டனில் பயிற்சிபெறும் இரண்டு இலங்கை இராணுவ வீரர்களையும் உடனடியாக வெளியேற்ற உரிய உத்தரவு அளிக்கும்படி கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் எட்டு ஆண்டுகால ஆட்சிக்காலத்தில், உள்நாட்டு வெளிநாட்டு கடன்கள், அபிவிருத்தி என்கிற சந்தோசம் தரும் வார்த்தையால் திரையிடப்பட்டுள்ளன.
கடந்த திங்களன்று திறைசேரி வெளியிட்ட ஆண்டறிக்கையில், கடன் பற்றியதான பல புள்ளிவிபரங்கள் இருக்கின்றன.
2012 ம் ஆண்டின் இறுதிப்பகுதி வரையான வெளிநாட்டுக்கடன் $20.3 பில்லியன். மொத்த உள்ளூர் உற்பத்தியின் (GDP) மூன்றிலொரு பங்கு இதுவாகும்.
அதுமட்டுமல்லாது, 10 வருடங்களில் பத்து சதவீதமாக அதிகரித்துள்ள வெளிநாட்டுக் கடனில், $13.6 பில்லியன் (68%) சலுகை அடிப்படையிலமைந்த கடனாகவும், மிகுதி $6.7பில்லியன் (32%) சலுகைகளை உள்ளடக்காத கடனாகவும், அதேவேளை அடுத்த 15 வருடங்களில் முழுமையாகச் செலுத்த வேண்டிய கடனாகவும் இது இருக்கிறது.
அபிவிருத்திப் பங்காளர்களும் கடன் வழங்கும் நிறுவனங்களும் இணைந்து , 2012 இல் , $2,789 மில்லியனை ,திட்டங்களுக்கான கடனாகவும், $363 மில்லியனை உதவித் தொகையாகவும் இலங்கைக்கு வழங்கியுள்ளன.
இதில் சீனா 33%, இந்தியா 22%, யப்பான் 17% மற்றும் உலக வங்கி 11% பங்களித்துள்ளன. குறிப்பாக இத்தொகையில் $2,226 மில்லியன் (71%) பொருளாதார உட்கட்டுமான திட்டங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திரைக்குப்பின்னால் ஒழிந்திருக்கும் 'தேசியக் கடன்கள்' எவை என்பது குறித்து மக்களுக்கு மறைக்கப்பட்டாலும், மின்சாரக்கட்டண உயர்வு ஓரளவிற்காவது அதனைக் காட்டிக் கொடுத்துவிடும்.
8 வருடங்களிற்கு முன் 55 அரச திணைக்களங்கள் 32 பில்லியன் ரூபாவை இலாபமாகப்பெற்றன. இப்போது அவை மொத்தமாக 107 பில்லியன் ரூபா நட்டத்தில் இயங்குகின்றன என்கிற தகவலை, நிதி திட்டமிடல் அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அரச வங்கிகளில் இருந்து பெறும் கடன்களில் பெரிதும் தங்கியுள்ள இலங்கை மின்சார சபையும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் நாட்டில் சமச்சீரற்ற பொருளாதார நிலையைத் தோற்றுவிப்பதாக கணிப்பிடப்படுகிறது.
9.8 பில்லியன் ரூபாய்களை, 2005 ல் இலாபமீட்டிய பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 2012 ல் 89.6 பில்லியன் ரூபாய் நட்டம் என்கிறது. 6.8 பில்லியனில் இருந்து 61.1 பில்லியனாக நட்டத்தின் அளவு உயர்ந்து செல்லும் பரிதாப நிலையில் மின்சாரசபை இருக்கிறது.
இதுபோல, இலங்கை போக்குவரத்து சபையின் நிதி நிலைமையும் சேடமிழுத்துக் கொண்டிருக்கிறது. 2005 இல் 1.1 பில்லியன் ரூபாவாகவிருந்த நட்டக்கணக்கு 2012 இல் 4.66 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் விவசாய காப்புறுதி சபை என்பவற்றின் இழப்பு வீதமும் கடந்த 8 ஆண்டுகளில் அதிகரித்துச் செல்வதைக் காணலாம்.
'மகிந்த பேர்சி ராஜபக்சவின் வெள்ளை யானைகள்' என்று தலைப்பிட்டு, ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் அண்மையில் வெளிவந்த கட்டுரை இது குறித்தான பல செய்திகளை சொல்கிறது.
சீன விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றி கடந்த வாரக் கட்டுரையில் சுருக்கமாகப் பார்த்தோம். ஆனால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட வெள்ளை யானைகளைக் கட்டி மேய்க்க முடியாமல் எவ்வாறு அரசு திண்டாடுகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
றுகுண மகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுகம் (அம்பாந்தோட்டை துறைமுகம்) என்பதன் கட்டுமானப்பணி, ஜனவரி 2008 இல் ஆரம்பமானது. சீன அரசின் எக்ஸ்சிம் (EXIM) வங்கியானது இந்த அபிவிருத்திப் பணிக்கான முழுத்தொகையினையும் ($1.3 பில்லியன்) கடனாக வழங்க, சீன ஹாபர் எஞ்சினியரிங் கம்பனியும் சைநோஹைட்ரோ கூட்டுத்தாபனமும் இணைந்து நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தன.
துறைமுகத்தின் முதலாம் கட்டப்பணி பூர்த்தியானவுடன் 650மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வந்து குவியுமென்று அரசு எதிர்பார்த்தது.
ஆனால் அதைவிட அதிகமான $700 மில்லியன் முதலீட்டிற்கான உத்தரவாதங்களைத் தாம் பெற்றுள்ளோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி.பிரியத் பந்து விக்கிரம அவர்கள், சீன வங்கியிடமிருந்து வாங்கிய கடனிற்கான வட்டியும் தவணைப் பணமும், துறைமுக அதிகாரசபை பெறும் 5.3 பில்லியன் ரூபாய் (2012) இலாபத்தின் ஊடாகவே செலுத்தப்படுகிறது என்கிற உண்மையைச் சொல்வதில்லை.
கடந்த வருட அம்பாந்தோட்டை துறைமுக வருமானம், 500-600 மில்லியன் ரூபாவென, இலங்கை துறைமுக அதிகார சபையால் குறிக்கப்பட்ட இலக்கினை அடைய முடியவில்லை. மிகக்குறைவான 132 மில்லியன் ரூபாவையே அச்சபை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வருட இறுதிக்குள் 3.5 பில்லியன் ரூபாவை வருமானமாக எட்ட முடியுமென்று தலைவர் விக்ரம நம்பிக்கை கொண்டுள்ளார்.
ஏற்கனவே $200 மில்லியன் முதலீடு செய்ய, இந்தியாவின் மிகப்பெரிய சீனி உற்பத்தி நிறுவனமான ஸ்ரீ ரேணுகா சுகர் லிமிட்டெட் முன்வந்திருப்பதாகக் கூறும் கலாநிதி விக்கிரம, மேலதிகமாக $1 பில்லியன் வெளிநாட்டு நேரடி முதலீடு அம்பாந்தோட்டைக்கு வருமென்கிறார்.
இந்த துறைமுக வெள்ளையானை குறித்து பல சர்ச்சைகளும், சந்தேகங்களும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுவதை பரவலாகக் காணலாம்.
அத்துறைமுகத்தில் கப்பல்களை நிறுத்துவதற்கான காப்புறுதிகளை பெறுவதில், தடைகள் இருப்பதாக கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு துறைமுகம் குறித்தான தெளிவான வரைபடங்கள் இல்லையென்று சொல்லப்படுகின்றது.
இவைதவிர, துறைமுகத்தின் தலைவாசலில், அகற்ற முடியாத அளவிற்கு பெரிய பாறையொன்று நந்தி போல் குந்தியிருப்பதாகவும், அதனை அகற்ற பல மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும், அதனால் பாரிய கப்பல்கள் உள்நுழைய முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அகற்றுவதற்கு செலவாகும் நிதியைக் கடனாகக் கொடுக்குமாறு சீனாவிடம் கேட்டும், சாதகமான பதில் கிடைக்கவில்லை என்கிற செய்தியும் உண்டு.
இதைவிட கடலின் ஆழம் குறித்த பிரச்சினை ஒன்று பெரிதாகப் பேசப்படுகிறது.
அதாவது 17 மீட்டர் ஆழம் கொண்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவது சிக்கலான விடயம் என்கிற விவாதம் எழுப்பப்படுகிறது. ஆனால், கொழும்புத் துறைமுகம் 15 மீட்டர் ஆழம் கொண்டதெனக் கூறும் துறைமுக பிரதான பொறியியலாளர், 35 மீட்டர் ஆழமுடைய துறைமுகம் உலகில் எங்கே உள்ளதென்று வாதிடுகின்றார். இத்துறைமுகத்தை நிராகரிப்பதற்கான பொருத்தமான காரணி இதுவல்ல என்பதுதான் அவருடைய வாதம்.
இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அரசு, சிட்னிக்கு அடுத்ததாக, இயற்கை வளமிக்க ஆழ்கடல் துறைமுகமாக விளங்கும் 24 மீட்டர் ஆழம் கொண்ட திருகோணமலைத் துறைமுகத்தை ஏன் அபிவிருத்தி செய்ய முன்வரவில்லை என்கிற கேள்வி எழுகின்றது.
கொழும்புத் துறைமுகத்தைவிட, நீர் மற்றும் நிலப்பரப்பளவை பத்து மடங்காகக் கொண்ட திருமலைத் துறைமுகத்தை அண்டிய பிரதேசத்தில், பிரித்தானியர் நிர்மாணித்த 100 ற்கும் மேற்பட்ட எண்ணெய் சேமிப்புக் குதங்கள் இருக்கின்றன. சீரற்ற காலநிலையிலும் எல்லா வகையான கப்பல்களும் வந்து செல்லக்கூடிய வசதிகள் அங்கு உண்டு.
மிகக் குறைவான வெளிநாட்டுக் கடனில், துரிதமாக அபிவிருத்தி செய்யக்கூடிய இடமே இந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலைத் துறைமுகம்.
அங்கு சீனாவை நேரடியாக இறக்கினால், தம் மீதான இந்தியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்கள் முழு வீச்சுடன் பிரயோகிக்கப்படலாம் என்பதை உணர்ந்து, அதனைத் தவிர்க்கும் வகையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தனது கவனத்தை அரசு செலுத்துகிறது என்கிற பார்வையும் உண்டு. வாக்கு வங்கியைப் பலப்படுத்தவும் இது பயன்படும்.
அடுத்ததாக, $1.35 பில்லியன் செலவில் எக்ஸ்சிம் வங்கியின் உதவியோடு நிறுவப்பட்ட நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் நிலைமை குறித்து பார்க்க வேண்டும். 19 தடவையாக, ஆரம்பிப்பதும் இடைநிறுத்துவதுமாக இருக்கிறது அம் மின் நிலையத்தின் பரிதாபநிலை. இதற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், அதனை நிர்மாணித்த சீனாவிடமே திருப்பிக் கொடுக்கலாமா என்கிற சிந்தனையும் அரசிடம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Debt- Equity swap என்பார்கள்.
இதேபோன்று, சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட குவடோர் துறைமுகத்தின் நிர்வாகத்தை, சிங்கப்பூர் கம்பனியிடமிருந்து பறித்தெடுத்து, சீனாவிடமே அந்த நிர்வாகத்தை கையளிக்க பாகிஸ்தான் அரசு முயற்சிப்பதாக அண்மையில் ஒரு செய்தி வெளிவந்தது. அங்கும், வாங்கிய கடனிற்கான தவணைப் பணத்தைச் செலுத்த முடியாமல் பாகிஸ்தான் திண்டாடுவதாக் கூறப்படுகிறது. அதனால் இந்த கைமாற்றங்கள் நடைபெறுவதாக நம்பப்படுகிறது.
இவைதவிர, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் வந்திறங்கிய சீனாவின் முதலீடு, அந்த மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் பரவுவதைக் காண்கிறோம்.
அம்பாந்தோட்டை நகரிலிருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மத்தல என்னுமிடத்தில், 26 பில்லியன் ரூபா கடனில், சர்வதேச விமான நிலையமொன்று கட்டப்பட்டுள்ளது. 2000 ஹெக்டர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட 'மத்தல ராஜபக்ச சர்வதேச நிலையம்', முதலீட்டிற்கேற்ற வருவாயை இதுவரை தரவில்லை.
இங்கு பயணங்களை மேற்கொண்ட ஒரேஒரு விமானிகள் பயண சேவை நிறுவனமான எயார் அரேபியாவும் (Air Arabia), தனது சேவையை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அங்கு விமானங்கள் வந்து போவது போல் காண்பிப்பதற்காக, தினமும் கட்டுநாயக்காவிலிருந்து மத்தல வரை உள்ளூர் விமானப் பயணங்களை அரசு மேற்கொள்கிறது.
பிழையான நேரத்தில், தவறான இடத்தில் இவ் விமானநிலையம் கட்டப்பட்டுள்ளது என்கிற விமர்சனம் பரவலாக இருக்கிறது. முதற்கட்டமாக, வருடமொன்றிக்கு ஒரு மில்லியன் பயணிகளை, 45,000 மெற்றிக் தொன் சரக்குகளை ஏற்றி இறக்கக் கூடிய வகையில் வர்த்தக வியூகங்கள் வகுக்கப்படுமென பெரிதாகப் பேசினாலும், நடைமுறையில் அவை சாத்தியப்படாத விடயமாகவே தென்படுகிறது.
வந்திறங்கும் விமானங்களிற்கான தரிப்பிடங்களை 10 லிருந்து 25 ஆக அதிகரிக்கப் போவதாகவும் அதன் நிர்வாகத்தினர் கூறுகின்றார்கள்.
இவைதவிர, 15பில்லியன் ரூபா செலவில் அம்பாந்தோட்டை விளையாட்டு வலயம் மற்றும் சூரியவேவாவில் 700 மில்லியன் ரூபா சீனக் கடனில் மகிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கட் மைதானம் ஆகியவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
47 ஏக்கரில் உருவாக்கப்பட்ட 32,000 இருக்கைகள் கொண்ட இந்த கிரிக்கட் மைதானத்தில், இதுவரை இரண்டு சர்வதேச கிண்ணத்திற்கான போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது.
அம்பாந்தோட்டை விளையாட்டு வலயத்தின் நிர்மாணப்பணிகள் 2016ல் முடிவடையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ,2018 ம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. அதுவரை, வாங்கிய கடனிற்கு வட்டி கட்ட வேண்டும்.
கதிர்காமம் மலைத் தொடர்கள், யால தேசிய பூங்கா, கிரிந்த கடற்கரை மற்றும் வனப்புமிக்க நீர்வீழ்ச்சிகள் நாற்புறமும் சூழ, 235 ஏக்கரில் டெலி-சினிமா (Tele-Cinema) பூங்கா ஒன்று 2 பில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
2010 மார்ச்சில் திறக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தேசிய டெலி-சினிமா பூங்காவில், இதுவரை எந்தப் படப்பிடிப்புக்களும் நிகழ்த்தப்படவில்லை. வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நாடகங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற வரிகளே இங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இவைதவிர, பாரிய நட்டத்தில் இயங்கும் இன்னுமொரு வெள்ளையானை குறித்து சொல்லியாக வேண்டும்.
வடக்கிலும் இந்த யானை குட்டிபோடப் போவதாக, அண்மைய சீனப் பயணங்கள் உணர்த்துகின்றன.
776 மில்லியன் ரூபா சீனக்கடனில் அமைக்கப்பட்ட , கொட்டாவையிலிருந்து காலி வரையான 95 கிலோ மீட்டர் தூர அதிவேக நெடுஞ்சாலை, ஆண்டொன்றிக்கு தரும் வருவாய் 1 பில்லியன் ரூபாய். நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களிடமிருந்தே இது வசூலிக்கப்படுகிறது.
இதன், கடன் மற்றும் நிர்வாகச் செலவு ஏறத்தாழ 6.5 பில்லியன் ரூபாய். நிகர நட்டம் 5.5 பில்லியன். வடக்கில் சீனக் கடனில் நிர்மாணிக்கப்படப் போகும் நெடுஞ்சாலைக்கும் இந்தக் கதியே ஏற்படுமென்று நம்பலாம்.
ஆகவே, வருமானமற்ற முதலீடுகள், மக்கள் மேல் வரிச் சுமைகளையும், பன்னாட்டுக் கம்பனிகளுக்கு இலாபத்தையும் மட்டுமே கொடுக்கும் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமானதல்ல.
இந்த வெள்ளை யானைகளுக்கு தீனி போட இயலாவிட்டால், மக்களின் நிலங்களும் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு தாரை வார்க்கப்படும். வட -கிழக்கில் தீவிரப்படுத்தப்படும் நில அபகரிப்பு இதனைப் புரிய வைக்கிறது.
இவ்வாறான கையறுநிலை ஏற்படும் போது, சிறுபான்மைத் தேசிய இனங்களின் நிலங்களின் மீதுதான், ஆட்சியில் இருக்கும் பெருந்தேசியவாதம் கை வைக்கும்.
- இதயச்சந்திரன்
தமிழகத்தில் மீண்டும் இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி: பிரதமருக்கு ஜெயலலிதா கண்டனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 08:02.50 AM GMT ] [ மாலைமலர் ]
அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
முக்கியமான பிரச்சினை ஒன்றை நான் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
இலங்கை இராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் பண்டார தசநாயக்க, மேஜர் ஹரிச்சந்திரா ஹெட்டியாராய்ச்சி ஆகியோருக்கு நீலகிரியில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 27-ந் தேதி தொடங்கிய பயிற்சியில் அவர்கள் இருவரும் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு ஏவிவிட்டுள்ள கொடூரங்கள் நீடித்து வருவதால் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலை உள்ளது. இந்த உணர்வுபூர்வமான நிலையில் இலங்கை இராணுவ அதிகாரிகளை அழைத்து பயிற்சி அளிப்பது கடும் அதிர்ச்சியையும், உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
நான் ஏற்கனவே 16-7-2012, 25-8-2012, 28-8-2012 ஆகிய தேதிகளில் உங்களுக்கு கடிதம் அனுப்பியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அந்த கடிதங்களில் இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் அளித்த பயிற்சி தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுகளை குறிப்பிட்டு இருந்தேன். இது தமிழகம் தழுவிய மிக கடுமையான உணர்வு பூர்வமான பிரச்சினை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
இலங்கையில் அப்பாவி தமிழர்களை இன ஒழிப்பு செய்யும் நடவடிக்கைகள் நீடித்து வருவதாலும், மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாலும், இந்திய தமிழ் மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தின் கொடூர தாக்குதல் நீடித்துக் கொண்டு இருப்பதாலும் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பாக இருக்கிறது.
இது தொடர்பாக நாங்கள் பலமுறை எங்கள் எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். தமிழ்நாடு சட்டசபையிலும், கண்டன தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். இவ்வளவு கடுமையாக எதிர்ப்புக்கு மத்தியிலும், அதை கண்டு கொள்ளாமல் தமிழ்நாட்டின் உணர்வுகளையும், கோபத்தையும் புரிந்து கொள்ளாமல் மீண்டும் 2 இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டன் இராணுவ கல்லூரியில் பயிற்சி அளிக்க அனுமதித்து இருக்கிறீர்கள்.
27-ந் தேதியில் இருந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு முந்தைய நாள் தான் தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி இலங்கை தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள உணர்வை குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் உணர்ச்சிகளை நாங்கள் புரிந்து வைத்து உள்ளோம். தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராக இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று ஏ.கே. அந்தோணி கூறியிருக்கிறார். அவருடைய பேச்சை அவரது துறையே மீறி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் மிக முக்கியமான விஷயத்தில் மத்திய அரசு இட்டை வேடம் போடுகிறது. எங்களை ஏமாற்றுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது. இதை சொல்லிக் கொள்வதற்காக நான் மிகவும் வருத்தம் அடைகிறேன்.
வெலிங்டனில் பயிற்சி பெறும் 2 அதிகாரிகளையும் உடனடியாக வெளியேற்ற உரிய உத்தரவு அளிக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு சரியான கொள்கையை பின்பற்ற வேண்டும்.
எனவே இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதோ, ஒத்துழைப்பு கொடுப்பதோ நடக்க கூடாது. இலங்கை அரசு அங்கு முற்றிலுமாக தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை நிறுத்தும் வரையிலும், தமிழ்நாடு மீனவர்களை தாக்குவதை நிறுத்தும் வரையிலும் அவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கக் கூடாது.
இதில் விரைவான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten