zondag 9 juni 2013

13வது திருத்தச் சட்டத்தை திருத்த முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகாது!- ரவூப் ஹக்கீம்


ஐ.நா பிரதிநிதிகளின் விஜயத்தை இலங்கை அனுமதிக்க வேண்டும்: அமெரிக்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 07:09.04 AM GMT ]
ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவின் விஜயத்தை இலங்கை அனுமதிக்க வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கருத்துச் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பிரான்க் லா ரூ இலங்கைக்கு விஜயம் செய்ய விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிற்கான அமெரிக்கப் பிரதிநிதி எய்லீன் டொஹனா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பிரதிநிதியின் இலங்கை விஜயத்திற்கான திகதிகளை நிர்ணயம் செய்து அவரின் விஜயத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தொடர்ச்சியாக கருத்துச் சுதந்திர மீறல்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துச் சுதந்திரம், சுதந்திரமாக ஒன்றுகூடுதல் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தப்பட்டு வருவதாக டொஹனா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது,

ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
13வது திருத்தச் சட்டத்தை திருத்த முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகாது!- ரவூப் ஹக்கீம்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 06:02.30 AM GMT ]
13வது திருத்தச் சட்டத்தில் இரண்டு திருத்தங்களை எப்படியாவது கொண்டு வரவேண்டு என்ற அவசரம் அமைச்சரவையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. சிறுபான்மை சமூகங்களுக்கென இருக்கும் அடிப்படைக் காப்பீடுகளை 13வது திருத்தத்திலிருந்து அகற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு திரும்பப் பெறுவது என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு இந்த விடயம் அணுகப்படுவதை என்னால் உணர முடிந்தது.
இது 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படை உயிர்நாடியையே அகற்றும் செயல். எனவே இதில் எமக்கு உடன்பாடில்லை.
13வது திருத்தச் சட்டத்தில் காணி பொலிஸ் அதிகாரங்கள் மட்டுமன்றி எந்த வகையான குறைப்பையும் மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துணை போகாது என்றும் அவர் சொன்னார்.

சிறுபான்மை மக்களின் குறைந்த பட்ச காப்பீடுகளையும் இல்லாமல் செய்வதற்கான இந்த நடவடிக்கையில் இறங்குவது என்பது இராஜதந்திர ரீதியில் ஏற்படும் நஷ்டம் மாத்திரமன்றி சிறுபான்மை சமூகத்தினருக்கும் சர்வதேசத்துக்கும் அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை திட்டமிட்டு மீறும் செயலாகும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், 13ஆவது திருத்தத்தில் எந்தக் குறைப்பையும் செய்யமாட்டோம். 13வது சட்டத்திலும் பார்க்க அதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து சிந்திக்கின்றோம் என்றெல்லாம் பிரஸ்தாபித்து விட்டு திடீரென இவ்வாறு சட்டமூலத்தைக் கொண்டு வருவது ஏற்புடையதல்ல.
அதுவும் வடக்கில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதனைக் கொண்டு வர இருப்பது என்னைப் பொறுத்தவரையில் தார்மீகமான விடயமல்ல என்றும் அவர் சொன்னார்.

Geen opmerkingen:

Een reactie posten