zondag 21 juni 2015

இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்குத் துணைபோகிறது அமெரிக்கா! திருமாவளவன் கண்டனம்

புலம்பெயர் தமிழர்களின் கொண்டாட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஜாதிக ஹெல உறுமய
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2015, 12:56.43 PM GMT ]
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால், நாட்டுக்கு மங்களகரமான எதுவும் நடக்கவில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, மங்கள சமரவீரவினால் நாட்டுக்கு அனர்த்தமே நேர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த வருடத்தின் இறுதியில் இலங்கைக்கு புலம்பெயர் தமிழர்களின் கொண்டாடடம் ஒன்று நடத்தப்பட உள்ளது. இந்த கொண்டாட்டம் நாட்டுக்கு மரண வீடாகி விடுமோ என்பதும் சந்தேகத்திற்குரியது.
மேலும் புலம்பெயர் தமிழர்களின் கொண்டாட்டத்திற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு, இலங்கைக்கு 3.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக பிரசாரம் ஒன்று பரவிவருகிறது.
எந்த அடிப்படையில் அந்த பணத்தை மனித உரிமை ஆணைக்குழு வழங்கியது என்பதும் கேள்விக்குரியது.
புலம்பெயர் தமிழர்களின் கொண்டாட்டம் எந்த நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை.
நல்லிணக்கத்தை நான் உட்பட எமது கட்சி எதிர்க்கவில்லை. ஆனால், இப்படியான கொண்டாட்டங்கள் சந்தேகத்திற்குரியன.
புலம்பெயர் புலிகள் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவு குறித்து இதுவரை மன்னிப்பு கோரவில்லை.
இதனால், புலம்பெயர் தமிழர்களின் கொண்டாட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் நிஷாநடத ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyGRVSUft7I.html

இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்குத் துணைபோகிறது அமெரிக்கா! திருமாவளவன் கண்டனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2015, 01:19.07 PM GMT ]
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழித்தொழிப்பின் ரணங்கள் ஆறாத நிலையில், அதற்கு நீதி கிடைக்காத சூழலில் இப்போதும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கு அமெரிக்கா துணைபோகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.
அமெரிக்க அரசின் மனித உரிமைகளுக்கு எதிரான இந்தச் செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அமெரிக்க அரசின் உள்துறை சார்பில் ஆண்டுதோறும் ‘பயங்கரவாதம் தொடர்பான அறிக்கை’ வெளியிடப்படுவது வழக்கம். 2014ம் ஆண்டுக்கான அறிக்கை இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில் இலங்கை தொடர்பான பகுதியில் இராஜபக்ச அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்திருக்கும் அமெரிக்க உள்துறை, “விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயன்ற குற்றச்சாட்டில் 2014ஆம் ஆண்டில் 16 அமைப்புகளையும் 422 தனிநபர்களையும் இலங்கை அரசு தடை செய்தது.
ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அது காட்டவில்லை” எனக் குறிப்பிட்டிருப்பதோடு “இந்த நடவடிக்கை ஐநா சபையின் விதிகளுக்கு உடன்பாடாக இல்லை” எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
ஆனால் அதற்கு நேரெதிராக அறிக்கையின் இன்னொரு பகுதியில் எந்தவித ஆதாரமும் இன்றி “விடுதலைப் புலிகளின் பொருளாதார வலைப்பின்னல் இப்போதும் வலிமையோடு இருப்பதாக” தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான அறிக்கைகளில் இருந்த அதே வாசகங்கள் இந்த ஆண்டுக்கான அறிக்கையிலும் அப்படியே இடம்பெற்றிருக்கின்றன.
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அமெரிக்க அரசின் அறிக்கையை இலங்கையை ஆளும் மைத்திரி தலைமையிலான சிங்கள அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைந்திருக்கிறது.
தமிழர் பகுதிகளில் இருக்கும் இராணுவ முகாம்களை மூடவேண்டும், தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தை ஒப்படைக்க வேண்டும், தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு ராஜபக்சவைப் போலவே இனவெறியைத் தூண்டிவிட்டு சிங்கள வாக்குகளைப் பெறும் முயற்சியில் மைத்திரியும் ஈடுபட்டிருக்கிறார்.
இலங்கை இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணைக்கு ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் உத்தரவு பிறப்பிக்கவிருந்த நேரத்தில் தலையிட்டு இலங்கை அரசைக் காப்பாற்றிய அமெரிக்கா இப்போதும் மைத்திரி அரசுக்கு உதவும் வகையிலேயே இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அநீதிக்குத் துணைபோகும் அமெரிக்காவின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அறிக்கையில் உள்ள கருத்துகளை திரும்பப்பெறவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அமெரிக்காவின் இந்தத் தமிழர் விரோத அறிக்கையைத் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 
http://www.tamilwin.com/show-RUmtyGRVSUfuyB.html

Geen opmerkingen:

Een reactie posten