தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 december 2014

தலையிடுமா சர்வதேசம்?



ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், மூன்று வாரங்கள் கூட இல்லாத நிலையில், ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவோருக்கு உள்ளூர கலக்கம் அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதே அந்தக் கலக்கத்துக்கான காரணம்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே இந்தக் கேள்வி எழுந்திருந்தது.
கடந்த பத்தாண்டுகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில், விதிமுறைகள் எந்தளவுக்கு கடைப்பிடிக்கப்பட்டன என்பதை உன்னிப்பாக அவதானித்து வரும் எவருக்கும், இது இயல்பாகவே எழக்கூடிய சந்தேகமும், கேள்வியும் தான்.
ஏனென்றால், கடந்த காலங்களில் எல்லாத் தேர்தல்களிலுமே, அரசாங்க வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதுடன், வன்முறைகளும், மோசடிகளும் நிகழ்ந்திருந்தன.
ஆளும் கட்சி தேர்தல் விதிமுறைகளை மீறுவதில், கடந்த காலங்களில் பெரும் சாதனைகளையே நிகழ்த்தியிருக்கிறது.
அண்மையில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது வெளியிட்ட தகவல்களே அதற்குப் போதிய சான்றாகும்.
1999ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கவை தாம் எப்படி வாக்கு மோசடிகளை செய்து வெற்றி பெற வைத்தோம் என்று அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் விபரித்திருந்தார்.
அப்போது சந்திரிகா ஜனாதிபதியாக இருந்திருந்தார்.
இப்போது சந்திரிகா எதிரணியில் இருப்பதால், எஸ். பி. திஸாநாயக்க 1999ம் ஆண்டு தேர்தலில் சந்திரிகாவின் வெற்றியைச் சிறுமைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தாம் செய்த தேர்தல் மோசடிகள் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.
அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க கூறிய விடயங்களிலிருந்து சாதாரண வாக்காளர்களுக்கு ஒரு விடயம் புரிந்திருக்கும்.
இலங்கையில் தேர்தல்கள் ஜனநாயக ரீதியாக நடத்தப்படவில்லை. அதில் அரசாங்கம் மோசடிகளை செய்கிறது என்பதே அது.
இது ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிதைக்கின்ற ஒரு நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.
சந்திரிகாவை வெற்றி பெற வைப்பதற்காக தாம் செய்த தில்லுமுல்லுகைளை வெளிப்படுத்திய எஸ். பி. திஸாநாயக்க இப்போது ஆளும் கட்சியில் தான் அமைச்சராக இருக்கிறார்.
எஸ். பி. திஸாநாயக்க விரும்பியோ விரும்பாமலோ இந்த மோசடிகளை ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் ஒப்புக் கொள்ளாதவர்களே அதிகம்.
இப்படியான பின்னணியில் தான் இன்னும் மூன்று வாரங்களில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல் குறித்த அச்சங்களும் வெளிக்கிளம்பியுள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலை விடவும் கடுமையான போட்டியாக இது இருப்பதால் ஆளும் கட்சி முன்னெப்போதையும் விட உசாராகவே இருக்கிறது.
ஏனென்றால் இது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாழ்வா சாவா என்ற மரணப் போராட்டமாக இருக்கிறது.
இந்தத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் உதிர்ந்து சிதைந்து போய் விடும்.
எனவே எப்படியும் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற வெறி அரச தரப்பிடம் இருக்கிறது.
வெற்றியின் மீதான இந்த வெறி ஜனநாயகத்தின் மீதும், மக்களின் தீர்ப்பின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் வரை தான் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக அமைந்திருக்கும்.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், முக்கிய அரசியல் ஆய்வாளர் ஒருவரிடம் ஊடகம் ஒன்றினால் செவ்வி காணப்பட்ட போது, இந்த தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.
எந்தக்கட்டத்தில், அரச தரப்பின் வெற்றி கேள்விக்குறியாகிறதோ, வெற்றி மீது சந்தேகம் ஏற்படுகிறதோ, அங்கே நியாயமான தேர்தலுக்கான சவாலும் எழுந்து விடும். இதுதான் உண்மை நிலை.
இப்போது அரசாங்க வளங்கள் ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், அரசதரப்பின் தேர்தல் விதிமுறை மீறல்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்றும், எதிரணியினரும், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன.
அதேவேளை, அரச தரப்போ, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் மற்றவர்களின் விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல், அரசதரப்பைக் குறைகூறுவதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறது.
இப்போது நடப்பதெல்லாம், அரச தரப்பைப் பொறுத்தவரையில், பெரியளவிலான தேர்தல் விதிமீறல் அல்ல என்பதே அதன் கருத்தாக உள்ளது.
அரச உதவிகள் வழங்கப்படுகின்றன. அரச வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வேலைவாய்ப்பு நியமனங்கள் வழங்கப்படுகின்றன. விலைக்குறைப்புகள், சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. சிறைக்கைதிகளைக் கூட தேர்தல் பிரசார வேலைகளில் ஈடுபடுத்தும் அளவுக்கு நிலைமைகள் மோசமாக உள்ளன. அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் அரச ஆதரவுப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அரச தொலைக்காட்சிகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் கூட்டங்களை நேரலையாக ஒளிபரப்புகின்றன.
அரச வானொலி சேவைகள், பத்திரிகைகள் எல்லாமே அரசதரப்பைப் பொறுத்தவரையில் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடிய தேர்தல் விதிமீறலாகவே தெரியவில்லை.
எல்லா வேட்பாளர்களுக்கும் சமமான சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்ற விதி மீறப்பட்டு அரச வளங்களை தனித்தே அனுபவிக்கிறது ஆளும் கட்சி.
இவையெல்லாம் தேர்தலுக்கு முந்திய வன்முறைகள், கடந்த காலங்களிலும் வழக்கமாகவே இடம்பெற்றவை தான்.
இவை வாக்களிப்பில் ஓரளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையே என்றாலும், மிக முக்கியமானது தேர்தல் வாக்களிப்புத்தான்.
அது நியாயமாக நடத்தப்படாது போனால், ஒழுங்கீனங்களும், மோசடிகளும் இடம்பெற்றால், இந்தத் தேர்தலின் முடிவே மாற்றமடையலாம். பலரது தலைவிதிகளும் மாறிவிடலாம்.
வாக்களிப்பிலோ, வாக்கு எண்ணிக்கையிலோ நிகழக்கூடிய மோசடிகள் தான் தேர்தலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.
தாம் எப்படியெல்லாம் வாக்களிப்பில் மோசடிகளைச் செய்தோம் என்று பகிரங்கமாக வெளிப்படுத்தும் அமைச்சர்களைக் கொண்ட ஒரு அரசாங்கம் குறித்து இந்தத் தருணத்தில் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அச்சம் எழுவது இயல்பு தான்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படும் என்று தாம் நம்பவில்லை எனக் கூறியிருக்கிறார்.
எனவே சர்வதேச சமூகம் தலையிட்டு தேர்தலை நியாயமாக நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் சந்திரிகாவின் கருத்துக்கு சர்வதேச அளவில் மதிப்புள்ளது.
அதற்காக இந்த விடயத்தில் வெளிநாடுகள் எந்தளவுக்கு தலையீடு செய்யும் என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கிறது.
ஏனென்றால், வெளிநாடுகள் தெரிவிக்கும் எத்தகைய கருத்தையும், கொடுக்கின்ற அழுத்தங்களையும் அரசாங்கம் தனது தேர்தல் பிரசாரங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கனவே அரசாங்கம் வெளிநாட்டுச் சதி என்ற பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இத்தகைய நிலையில் வெளிநாடுகள் இலங்கை அரசின் மீது அழுத்தங்களைக் கொடுக்க முனைந்தால், அது அரசாங்கத்தின் பிரசார இயந்திரத்தை இன்னமும் உசுப்பேற்றி விட்டதாகவே அமையும்.
சிங்கள தேசியவாத வாக்குகளைப் பெறுவதற்காக அரசாங்கம் அதனை அரசியலாக்க கட்டாயம் முயற்சிக்கும்.
எனவே சந்திரிகாவின் கோரிக்கை மீது நியாயம் இருந்தாலும், சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் தலையிடும் வாயப்புகள் குறைவு என்றே கருதலாம். இது அரச தரப்புக்குச் சாதகமான விடயமாகவே இருக்கிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றி மீது ஆளும் கட்சிக்கு சந்தேகம் வராத நிலை இருக்கும் வரை தான், இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படும் என்ற நம்பக நிலை நீடிக்கும்.
இத்தகையதொரு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டால், தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக அமையாது. எவ்வாறாயினும், தேர்தலை அமைதியாகவும் வன்முறைகளின்றியும் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இருக்கின்ற ஒரே கிடுக்குப் பிடி பாப்பரசரின் பயணம் தான்.
தேர்தல் முறையற்றதாக வன்முறைகள் நிரம்பியதாக இடம்பெற்றால், பாப்பரசரின் பயணம் தடைப்படும் வாய்ப்பு உள்ளது.
அப்படியான நிலை ஏற்பட்டால் அரசதரப்பின் மீதான சர்வதேச கோபம் ஒன்று குவிக்கப்படும்.
அது தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற்றாலும் கூட அவரை அடுத்த பதவிக்காலத்தில் நிம்மதியாக அமர்ந்திருக்க விடாது.
ஹரிகரன்
http://www.tamilwin.com/show-RUmszCRVKakx5.html

Geen opmerkingen:

Een reactie posten