zaterdag 20 december 2014

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு யோகேஸ்வரன் எம்.பி கோரிக்கை

பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண துரித நடவடிக்கை: ரணில்
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 11:21.51 AM GMT ]
நாட்டின் பெரும்பான்மை பிரஜைகளான பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் கீழ் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் விசேட பெண்கள் மாநாடு நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்த மாநாட்டில், பெண்கள் சம்பந்தமான யோசனைகள் கொண்டு வரப்படும். அது எதிர்வரும் ஜூலை மாதம் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
அதன் பின்னர் பெண்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKaku6.html
அன்று மஹிந்த – இன்று மைத்திரி! அகில இலங்கை மத்திய கிழக்கு தொழிலாளர் சங்கம்
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 11:33.29 AM GMT ]
அகில இலங்கை மத்திய கிழக்கு தொழிலாளர் சங்க அமைப்பு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் உள்ள பொது வேட்பாளரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைப்பின் உறுப்பினர்கள் இதனை கூறியுள்ளனர்.
ஒரு லட்சத்து 49 ஆயிரம் உறுப்பினர்களையும் 52 கிளை அமைப்புக்களை கொண்ட தமது அமைப்பு கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் மகிந்த ராஜபக்ஷவை வெற்றி பெற செய்ய பாடுபட்டதாகவும் தமது அமைப்பின் 7வது மாநாடு அலரி மாளிகையில் நடைபெற்றதாகவும் அமைப்பின் தலைவர் ரஞ்சித் நாணயக்கார தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக பதவியில் அமர்த்தி தாம் எதிர்ப்பார்த்தவைகள் நாட்டுக்கு நடக்கவில்லை எனவும், போருக்கு பின்னர் அரசாங்கம் வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKaku7.html
எழுவைதீவு மீனவர் படுகொலைக்கு கண்டனம்
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 11:49.43 AM GMT ]
எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிந்த கடற்தொழிலாளர் சங்க உபதலைவரின் மரணத்திற்கு காரணமான கடற்படையினர் மீது நீதியான விசாரணை நடத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டுமென வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று முன்தினம் அதிகாலை காரைநகர் - எழுவைதீவு கடற்பரப்பில் கரையிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் எழுவைதீவு கடற்தொழிலாளர் சங்க உபதலைவரும் எழுவைதீவு நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்தவருமான அன்ரனி யேசுதாசனை மீன்பிடித்துக் கொண்டிந்துள்ளார்.
இந்த நிலையில், நெடுந்தீவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி வேகமாக வந்த கடற்படையினர், தங்கள் டோறா படகு மூலம் யேசுதாசன் அவர்களின் படகை மோதித்தள்ளி படகை சேதப்படுத்தியதோடு, யேசுதாசன் அவர்களையும் படுகாயபப்படுத்தி கடலில் தத்தளிக்க விட்டுச் சென்றுள்ளனர்.
கடற்படையினரின் ஈனச்செயலானது மிகவும் கண்டிக்கத் தக்கதொறு. படுகாயமடைந்த யேசுதாசன் அவர்கள் உடைந்த படகின் பலகைத்துண்டின் உதவியோடும் கடலில் தத்தளித்து கொண்டிருந்த நிலையில் நாற்பத்தைந்து நிமிடங்களின் பின்பு சகமீனவர்களின் உதவியோடும் கரைசேர்க்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
கடற்படையினர் தங்கள் படகு மூலம் யேசுதாசன் அவர்களின் படகினை தவறுதலாக மோதியிருந்தால் காயப்பட்டவரை உடனே மீட்டு அருகிலுள்ள காரைநகர் கடற்படை முகாம் மருத்துவமனையில் சேர்ப்பித்து அவரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம்.
கடற்படையினர் இதை செய்யத்தவறியதன் மூலம் யேசுதாசன் அவர்களை திட்டமிட்டே படுகொலை செய்திருப்பார்களோ என சந்தேகிக்கத்தோன்றுகிறது.
நான்கு பெண் பிள்ளைகளும் இரண்டு ஆண்பிள்ளைகளுமாக மொத்தம் ஆறு பிள்ளைகளின் தந்தையாகிய இவரே தினமும் கடலுக்கு சென்று மீன்பிடித்து குடும்பத்தின் வாழ்க்கை நிலையை பார்த்து வந்தவர்.
அடிப்படையிலே மிகவும் வறுமைக்கோட்டுக்குள் வாழ்ந்த இக்குடும்பம் தந்தையாரையும் கணவரையும் இழந்து இன்று செய்வதறியாது சோகத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடற்படையினரின் இத்தகைய வெறிச்செயல் எழுவைதீவு கிராமத்தை மட்டுமல்ல முழு தீவகத்தையுமே சோகத்தில் ஆழ்த்தி உலுக்கியெடுத்துள்ளது.
தற்பொழுது நடந்த சம்பவத்தை மூடிமறைப்பதற்காக இனந்தெரியாத சில நபர்கள் யேசுதாசன் அவர்களின் உறவினர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொலைபேசியூடாகவும் அச்சுறுத்தும் விதமாக தொந்தரவு கொடுத்து வருவதாக எனக்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
யேசுதாசன் அவர்கள் ஊர்காவற்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை நடந்த சம்பவங்களை அவர் உறவினர்களிடம் விபரித்து இருக்கின்றார்.
அதுமட்டுமல்ல யேசுதாசன் அவர்களின் படகுடன் மோதுண்ட டோறா படகின் வர்ணப்பூச்சும் சேதமடைந்த யேசுதாசனின் படகில் பதிந்துள்ளது.
எனவே கடற்படையினரின் இச்செயல் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றமிழைத்தவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் அத்தோடு அரசாங்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பெருந்தொகை நஷ்ட ஈட்டினையும் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோருகின்றேன்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakvy.html

மாற்றங்கள் வரப்போவது நிச்சயம்! நாம் முன்னேற வேண்டிய காலகட்டத்தில் வாழ்கின்றோம்: விக்கி
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 12:19.56 PM GMT ]
வடமாகாண சபையை அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தி, பல வித தடங்கல்களைத் தந்து, தடைகளைப் போட்டு தகுந்தவாறு அபிவிருத்தியடைய அரசாங்கம் விடுகின்றதில்லை என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் கற்பகா கணனிப்பயிற்சி நிலையத்தின் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இன்று முழங்காவிலுக்கு ஒரு நன்நாள்! இங்கிலாந்தில் உள்ள வோல்த்தம் ஸ்டோவ் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர், அவர் வாழும் நாட்டையும் பிறந்த நாட்டையும் ஒன்றுபடுத்தியுள்ள நாள் இது.
பொதுவாகப் பெண்கள் சம்பந்தமாகத் தான் கூறுவார்கள் பிறந்த அகம், புகுந்த அகம் என்று. இன்று, தான் பிறந்த நாட்டையும் அவர் புகுந்த நாட்டையும் ஒன்று கூட்டி பொருளாதார நலத்தைத் தனது பிறந்தகத்திற்கு நல்கியுள்ளார். திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள்!
இன்று எமது வடமாகாண அபிவிருத்தியானது ஏன் கிழக்கு மாகாண அபிவிருத்தியுங் கூடத்தான் எமது உறவுகளின் ஊக்குவித்தலிலும் உற்சாகத்திலுந் தான் தங்கியுள்ளது.
எம்மை அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தி, பல வித தடங்கல்களைத் தந்து, தடைகளைப் போட்டு தகுந்தவாறு அபிவிருத்தியடைய அரசாங்கம் விடுகின்றதில்லை.
வடமாகாண முதலமைச்சர் பேரில் ஒரு உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கைத் திறக்கக் கூட ஆளுநர் அனுமதிக்கின்றார் இல்லை. ஆனால் தம் பெயரில் ஆளுநர் நம்பிக்கை பொறுப்பு வங்கிக் கணக்கு என்று ஒன்றை வைத்திருந்து அதைச் செயல்படுத்தி வருகின்றார்.
நாங்கள் தனிப்பட்ட கணக்குகளைத் திறக்கலாந்தான். ஆனால் பாரிய பணம் அந்தக் கணக்குகளுக்கு வந்து சேர்ந்தால் உடனே அலுவலர்கள் கொழும்பிலிருந்து வந்து எங்கிருந்து வந்தது பணம், யார் அனுப்பினார்கள்.
இந்தப் பணத்தை, இது இங்கிருந்து சென்ற கறுப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாற்றம் பெற்று இங்கு வந்த பணமல்லவா? தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள் அனுப்பிய பணமல்லவா?
புலிகளின் பணமல்லவா? பூனையின் பணமல்லவா? என்றெல்லாம் ஆராயத் தலைப்படுவார்கள். அவுஸ்திரேலியாவில் இருந்து சுகாதார அமைச்சர் மருத்தவ ரீதியான கருவிகள் வாங்க அங்கு எமது உறவுகள் கொடுத்த பணத்தை இங்கு வவுனியா வங்கியில் வைப்பிலிட அதுபற்றித் தேடத் தொடங்கி விட்டார்கள் எமது தேசிய தேடுநர்கள்!
வங்கியின் சிரேஷ்ட அலுவலர்கள் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். இது தான் இன்றைய நிலைமை. அண்மையில் நான் திறைசேரி செயலாளரைச் சந்திக்கச் சென்றேன்.
முன்னர் ஜனாதிபதியை இவ் வருடம் ஜனவரி மாதம் 2ந் திகதி சந்தித்த போது ரூபா நூறு மில்லியனுக்குக் குறைந்த தொகையினைக் கொண்ட சிறிய செயற்திட்டங்கள் தொடர்பான வெளிநாட்டுப் பணங்களை எமது வங்கிக் கணக்குகள் ஊடாக இங்கிருந்து நாங்கள் பெற ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
ஏன் என்றால் அந்தச் சமயத்தில் அப்பணங்களை செயற்றிட்டங்கள் சம்பந்தமாகக் கொண்டு வரும் போது அவை வெளிநாட்டு வளங்கள் சார்பான திணைக்களத்தின் ஊடாகக் கொண்டு வரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதுபற்றி ஜனாதிபதி அவர்கள் திறைசேரி செயலாளருடன் பேசச் சொல்லியிருந்தார். திறைசேரி செயலாளர் பி.டீ.ஜயசுந்தர அவர்களை நான் அண்மையில் சந்தித்த போது அவர் மிக வினயமாக உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கொன்றைத் திறந்தீர்களானால் அதற்கு வெளிநாட்டுப் பணங்களை நேரடியாக வரச் செய்யலாம் என்று கூறினார்.
தாங்கள் தடைகள், தவிர்ப்புக்கள் எதனையும் ஏற்படுத்த மாட்டார்கள் என்றும் கூறினார். அதுமட்டுமல்ல. ஏன் அவ்வாறு செய்ய எம்மை அனுமதிக்கின்றார் என்றும் கூறினார்.
அதாவது உத்தியோகபூர்வ வங்கிக் கணக்குகள் யாவும் கணக்காய்வாளர் நாயகத்தினால் கணக்காய்வு செய்யப்படுவதால் அவை சம்பந்தமாக கணக்காய்வாளர் நாயகம் மூலம் திறைசேரி கட்டுப்பாட்டை வைத்திருக்கும் என்று கூறினார்.
எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி இரண்டொரு நாட்களுக்குத்தான். யாழ்ப்பாணந் திரும்பியதும்தான் அறிந்தேன் எமக்கான உத்தியோகபூர்வ கணக்கான “முதலமைச்சர் வங்கிக்கணக்கை” முடக்கிவிட்டுள்ளார் எமது முன்படைத்தளபதியான ஆளுநர் என்று.
உத்தியோகபூர்வமான கணக்கை நாங்கள் திறக்க முடியாதென்றால் திறைசேரி செயளாலர் கூறியவாறு வெளிநாட்டில் இருந்து பணத்தைத் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்குக் கொண்டுவரும் போது அவை திறைசேரியினால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவன. தேவையெனில் வங்கிக் கணக்கை ஸ்தம்பிக்கவுஞ் செய்யலாம் அவர்கள்.
இப்பொழுது வெளிநாட்டுப் பணங்களை நாங்களே நேரடியாக மக்கள் நலன் கருதிப் பாவித்து வருகின்றோம். அதாவது வெளிநாட்டிலுள்ள எமது உறவுகள் தாமாகவே நேரடியாக எமக்கு உதவிசெய்து வருவதை வரவேற்கின்றோம்.
நாம் நடுவில் இருந்து நற்செயல்கள் நடைபெறுவதை உறுதி செய்து வருகின்றோம்.இன்று இப்பிரதேசத்திற்குக் கணணிப் பயிற்சி நிலையம் அமைக்கப்படுவது சாலப்பொருந்துமே.
எமது மக்கள் கணனிப் பயிற்சி பெறுவது ஏதோ ஒரு சொகுசுச் செயல் என்ற காலம் போய், கட்டாயத் தேவையாகி வருகின்றது. நான் சுமார் 10, 12 வருடங்களுக்கு முன்னர் கணனிப் பயிற்சி எதுவும் பெறாதவனாகத்தான் இருந்தேன்.
அறுபது வயதின் பின்னர் இனியென்ன பயிற்சி தேவையாக இருக்கின்றது என்று நான் வாளாது இருந்து விட்டேன். ஏதாவது கணனியில், வலைத்தொடர்பில் வந்தால் என் மக்களிடம் கேட்டு அறிந்து வந்தேன்.
ஆனால் முக்கியமான சில் சர்வதேச கருத்தரங்கங்களில் நான் பங்குபற்ற நேர்ந்தது அந்தக் காலகட்டத்தில். அங்கு வந்த பங்கேற்பாளர்கள் யாவரும் “உங்கள் ஈமெயில் விலாசம் என்ன?” என்று கேட்டார்கள். எனக்கோ அப்பொழுது ஈமெயில் என்றால் என்ன என்று கூடத் தெரியாது! உடனே வீடு வந்ததும் கணனிப் பயிற்சி பெற்றேன்.
இதை எதற்குக் குறிப்பிடுகின்றேன் என்றால் எம்மைச் சுற்றி உலகம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாம் அதற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் செயற்பட மறுத்தால் நாம் புறக்கணிக்கப்படுவோம்.
நாம் பின்னடைவுகளுக்கு உள்ளாவோம்.ஒரு வாரத்திற்கு முன்னர் என்னைத் தேடி என்னைச் சந்திக்க என் பால்ய காலத்து நண்பர் ஒருவர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவர் ஒரு சிங்கள நண்பர்.
சுவீடனில் கடந்த 40 வருடங்களுக்கு மேல் வசித்து வருகின்றார். சுவீடன் நாட்டுப் பெண்ணையே மணம் முடித்திருக்கின்றார். அவர் ஒரு முக்கியமான விடயத்தை எனக்குத் தெரிவித்தார். “விக்னேஸ்! உன் பால்ய நண்பன் உலகளாவிய புகழைப் பெறப் போகின்றான்!” என்றார்.
எனக்கு எதுவும் விளங்கவில்லை. “நான் எனது ஒரு புதிய கண்டுபிடிப்பை அமெரிக்காவில் பதிவு செய்துள்ளேன். அதாவது கடலலைகள் ஊடாக மின்சக்தி பெறுவதை நான் கண்டு பிடித்துள்ளேன். அதனை இப்பொழுது அமெரிக்காவும் சீனாவும் உத்தியோகபூர்வமாகப் பரிசீலித்து வருகின்றார்கள்.
அதனை அவர்கள் ஏற்றால் பெற்றோல், டீசல் போன்றவைக்குப் பதிலாக இனி கடல் மின்சக்தியைப் பாவிக்க முடியும்” என்றார். உலகம் எங்கே செல்கின்றது என்று பாருங்கள்! புதிய ஒரு மின்சக்தி முறை பாவனைக்கு வந்தால் மத்திய கிழக்கு நாடுகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள்.
உலக நடமாட்டமே மாறிவிடும். மாசடைந்த சூழல் மறுசீரமைப்புக்குள்ளாக்கப்படும். இவற்றையெல்லாம் நடத்த பாரிய பணம் படைத்த மத்திய கிழக்கு நாடுகளும், அமெரிக்கா முதலாளிகளும் இடம் அளிப்பார்களா என்பது மற்றொரு கேள்வி.
எனினும் மாற்றங்கள் வரப்போவது நிச்சயமே. எனவே நாங்கள் கட்டாயமாக முன்னேற வேண்டிய ஒரு கால கட்டத்தில் வாழ்கின்றோம்.
எம்மைச் சுற்றிப் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. கணனியானது அந்த மாற்றங்களை எல்லாம் உடனுக்குடன் எமக்குத் தெரிவிக்கும் வல்லமை வாய்ந்தது.
இந்தக் கணனிப் பயிற்சி நிலையம் இங்குள்ள மக்களுக்கு, இந்தச் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு, நற்சேவையை வழங்க இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakvz.html


மைத்திரியின் பிரச்சார மேடை மீது தாக்குதல்! 4 பேர் காயம்: ரணில் செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் சம்பவம்
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 12:40.08 PM GMT ]
பதுளை மாவட்டம் ஹப்புத்தளையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரசிங்க அந்த இடத்திற்கு செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
கூட்டத்தை ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ ஒழுங்கு செய்திருந்தார்.
ஹப்புத்தளை நகர சபையின் தலைவரது சகோதரர்களும் அவரது ஆதரவாளர்களும் இந்த தாக்குதலை நடத்தியதாக ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த கொடிகள் அகற்றப்பட்டு மேடை சேதமாக்கப்பட்டது.
தாக்குதலை நடத்திய உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக பொலிஸார் தாக்குதலை வேடிக்கை பார்த்தனர்.
இந்த தாக்குதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் செனரத் ஜயசூரிய உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakv0.html
காணாமல்போன இளைஞனின் சடலம் எரிந்த நிலையில் மீட்பு
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 12:49.49 PM GMT ]
சண்டிலிப்பாய் பகுதியில் பற்றைக்குள் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை இன்று மானிப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற அவர்கள் சடலத்தை மீட்டுள்ளனர்.
கடந்த 10 நாட்களாக காணாமற்போன மானிப்பாய் கட்டுடையை சேர்ந்த ஐ.ஐ.வைத்தியவர்மன் (வயது 23) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் எரிக்கப்பட்டு உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டு, தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் குறிப்பிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakv1.html

மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் 2015 வரவு செலவுத் திட்டத்தின் பிரதி: ஜனாதிபதி
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 01:24.54 PM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கியுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் முன்வைத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பிரதியெனவும் அவர் கூறியுள்ளார்.
அம்பாறை வீரசிங்க மைதானத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தல் ஒன்று நடக்கும் போது பல்வேறு தரப்பினர் பல வாக்குறுதிகளை வழங்குவார்கள்.
எனினும் அது நிறைவேற்றப்படும் விதத்திலேயே அந்த வாக்குறுதிகளுக்கு பெருமை கிடைக்கும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakv2.html

முழங்காவிலில் கற்பகா இலவச கணனி பயிற்சி நிலையம் திறந்து வைப்பு
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 01:50.53 PM GMT ]
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க லண்டன் வோல்த்தம் ஸ்ரோவ் கற்பக விநாயகர் ஆலய நிர்வாகியும் அகிலன் அறக்கட்டளை ஸ்தாபகரும் கருணையாளருமான கோபாலகிருஸ்ணனின் நிதியுதவியுடன் முழங்காவிலில் இன்று கற்பகா இலவச கணினி பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பூநகரி பிரதேச அமைப்பாளர் சிறீரஞ்சன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில், முதன்மை விருந்தினர்களாக வடமாகாண முதல்வர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், பா.உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை.சேனாதிராஜா, சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராசா, பா.உறுப்பினர் சி.சிறீதரன் ,கற்பகா இலவச கணினி பயற்சி நிலையத்திற்கான கொடையாளர் கோபாலகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும். பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி நிர்வாகிகள், கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக முழங்காவில் விநாயகர் ஆலயத்தில் அனுட்டானங்கள் நடைபெற்று விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
நிகழ்வில் பயற்சி நிலையத்தின் பெயர் பலகையினை பா.உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை.சேனாதிராஜா திரைநீக்கம் செய்து வைத்த பின் கணினி பயற்சி நிலையத்தினை வடமாகாண முதல்வர் நாடாவை வெட்டி திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வின் போது கொடையாளரும் லண்டன் வோல்த்தம் ஸ்ரோவ் கற்பக விநாயகர் ஆலய நிர்வாகியும் அகிலன் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான கோபாலகிருஸ்ணன் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன், பா.உறுப்பினர் மாவை.சேனாதிராசா ஆகியோர் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்படடனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakv3.html
ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 02:10.55 PM GMT ]
ஹிக்கடுவ, பத்தன பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 35 வயதான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளார்.
ஹிக்கடுவ பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakv4.html

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு யோகேஸ்வரன் எம்.பி கோரிக்கை
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 02:24.18 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சிலர் இடம்பெயர்ந்து இடைத் தங்கல் முகாம்களில் வாழ்கின்றனர்.
அத்தோடு இம்மழை தொடர்ந்து பெய்வதால் பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளதோடு, உறுகாமம் குளத்தின் வான் கதவு திறக்கப்படாதால் சந்தமணமடு ஆற்று நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமான நீர் கிராமத்திற்குள் சென்றமை காரணமாக போக்குவரத்துப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு சந்திவெளி படகுப் பாதை மற்றும் மாவடியோடைப்பாலம் ஊடாக குறைந்த பட்ச போக்குவரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் வயல் பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களும் பெரு வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாலும், மேலும் தொடர் மழையாலும் குளங்களின் வான்கதவு திறக்கப்படுவதாலும் பல பகுதிகள் நீரில் மூழ்கக் கூடிய சூழல் உள்ளதாலும் இம்மக்களுக்கு அவசிமாக தேவைப்படும் உதவிகளை வழங்கும் முகமாக இயன்ற உதவிகளை வழங்க முன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் கேட்டுக் கொள்கின்றனர்.
உதவி செய்ய விரும்பும் அமைப்பு அல்லது தனி நபர் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பேரில் தங்களது ஆதரவை வழங்கலாம் என்பதையும் தெரிவிக்கின்றனர்.
வழங்கப்படும் உதவிகளுக்கு பற்றுச்சீட்டு மற்றும் நன்றி நவிலல் கடிதம், உதவி வழங்கப்பட்டமைக்கான ஆவணங்கள் உட்பட்டவை பேரவையால் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என மேலும் தெரிவித்தனர்.
இதன் தொடர்புகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் கீழ்வரும் தொடர்புகளை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.
தொலைபேசி இலக்கம்: 0094652228273, 0094652228018, 0094776034559, 0094653656608
தொலை நகல் இலக்கம் : 0094652228273
மின்னஞ்சல் முகவரி : btdymha@gmail.com / yoheswaran.mp@gmail.com
வங்கி தகவல் சார்பாக
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை (Federation of Young Men’s Hindu Association) என்ற பெயரில் மட்டக்களப்பு கொமர்ஷியல் வங்கி (Commercial Bank) கணக்கு இலக்கம் : 1105040264. SWIFT CODE: CCEYLKLX, Bank Code : 7056-105 இதில் பணங்களை அனுப்பி வைக்கலாம். அத்தோடு உதவி வழங்குபவர்கள் மின்னஞ்சல் மூலம் தங்கள் விபரங்களை அனுப்பி வைத்தல் அவசியமானதாகும்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakv5.html

Geen opmerkingen:

Een reactie posten