தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 november 2014

ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடுகள்!

அர்ஜூன போட்டியிட்டாலும் எமது ஆதரவு ஜனாதிபதிக்கே: ரணதுங்க சகோதரர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 01:42.52 PM GMT ]
அர்ஜூன ரணதுங்க அல்ல எவர் போட்டியிட்டாலும் தனது ஆதரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ருவான் ரணதுங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் தலைமையில் நாடு பெற்றுள்ள வெற்றியை மறுபக்க திருப்ப எனது சகோதரர் அல்ல எவர் போட்டியிட்டாலும் அதற்கு இடமளிக்க போவதில்லை.
இதனால், எமது தந்தையான ரெஜி ரணதுங்கவை நேசிக்கும் அவருக்காக உழைத்த மக்களிடம் இந்த உறுதிமொழியை வழங்குகிறோம்.
மக்கள் எனது தேர்தல்களை விட மிகவும் கஷ்டப்பட்டு ஜனாதிபதியை வெற்றி பெற செய்ய வேண்டும் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை ருவான் ரணதுங்க தெரிவிக்கையில்,
சில காலங்களில் எமது அரசாங்கமே எம்மை விமர்சித்தது. எனினும் எமது தந்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்லவில்லை. நாங்கள் அந்த தந்தையின் பிள்ளைகள்.
தண்ணீரை விட இரத்தம் கனமானது. எனினும் கட்சியையும் தந்தையையும் காட்டிக்கொடுக்க மாட்டோம்.
தந்தை கற்பித்த மக்கள் சேவையை முன்னெடுத்துச் செல்ல சில நேரங்களில் நான் அரசாங்கத்துடன் சண்டையிடுவேன்.
இந்த பிரச்சினைகளால் கடந்த காலங்களில் இரவில் எனக்கு நித்திரையும் வரவில்லை. எனக்கு மாத்திரமல்ல எமது குடும்பத்தினரும் நித்திரை கெட்டது என ருவான் ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYku4.html
ஹெல உறுமயவுடன் பேச்சு இன்னும் முடியவில்லை என்கிறார் சுசில் பிரேமஜயந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 01:55.26 PM GMT ]
ஜாதிக ஹெல உறுமயவுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
தேவை ஏற்படும் பட்சத்தில் அந்த கட்சியுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் முன்வைத்த யோசனைகள் தொடர்பில் அந்த கட்சிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் பேச்சு நடத்த தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தமது யோசனைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எழுத்து மூலமான நிலைப்பாட்டை ஆராய்ந்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இது குறித்து இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காக நாளை பிற்பகல் விசேட மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYku5.html
பழி தீர்ப்பதாகக் கூறி வலயக் கல்விப் பணிப்பாளர் மீது ஆசிரியர் முறைப்பாடு!
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 02:00.24 PM GMT ]
தன்னை வேண்டுமென்றே தொடர்ச்சியாக பழி தீர்ப்பதாகக் கூறி வலயக்கல்விப் பணிப்பாளர் மீது ஆசிரியர் ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இம்முறைப்பாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்தியக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மண்டூர் மகா வித்தியாயலயத்தில் கற்பிக்கும் சுப்பிரமணியம் கமலேஸ்வரன் என்ற ஆசிரியரே பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகத்திற்கு எதிராக இம்முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமக்கு எழுத்துமூலம் விளக்கமளிக்குமாறு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அசீஸ் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு விளக்கம் கோரும் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
விளக்கம் கிடைத்த பிற்பாடு விசாரணை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYku6.html
ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடுகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 02:14.59 PM GMT ]
இந்தியப் பெருங்கடலின் பிராந்திய பாதுகாப்பின் முக்கிய அங்கமாக மாறிவிட்ட இலங்கைத் தீவின் ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகளுக்கு பஞ்சம் இருக்காது என்றே கருதப்படுகிறது
இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் சூழல் தென்படுகிறது.
இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைக்கான பதிலடியாகவே இந்த தேர்தல் என்று அரசாங்க தரப்பில் உள்ள அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார்.
ஆனால், போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், ஏறுமுகத்தில் இருந்த அரசாங்கத்தின் செல்வாக்கு திடீரென கீழிறங்கத் தொடங்கியுள்ளதும், சோதிடர்களின் எதிர்வு கூறல்களும், நான்கு ஆண்டுகளிலேயே மீண்டும் ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்க அரசாங்கத்தைத் தூண்டியுள்ள முக்கிய காரணிகளாகும்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணையை இலங்கை அரசாங்கம் எதிர்க்கிறது. அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது.
இத்தகைய நிலையில், இலங்கை மக்களின் பேராதரவு தமக்கு உள்ளது என்று காட்டிக் கொள்வதன் மூலம்,அந்த விசாரணைகளுக்குப் பதிலடி கொடுக்க நினைக்கிறது அரசாங்கம்.
ஆனால் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் பெறக்கூடிய வெற்றியை வைத்து, ஜெனீவா களத்தில் அரசாங்கத்தினால் பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது.
அங்கு நடப்பது மனித உரிமைக்கான போராட்டம் இலங்கையில் நடக்கப் போவது ஆட்சி அதிகாரத்துக்கான போராட்டம்.
அண்மையில் கூட, ஐ.நா .விசாரணையில் இலங்கை அரசாங்கம் குறுக்கிடுவதான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கிளிநொச்சியில் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு சாட்டியம் அளிப்பதற்கான படிவங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை அமெரிக்காவும், ஐ.நா வும் வேறு விதமாகப் பார்க்கின்றன.
இது ஐ.நா விசாரணைகளைக் குழப்பும் முயற்சி என்றும் ஐ.நா.வின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார் ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் கீத் ஹாப்பர்.
அதன் பின்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனும் தனியான அறிக்கை ஒன்றின் மூலம், சாட்சிகளை அச்சுறுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் ஐ.நா விசாரணையை சீர்குலைக்க முனைவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
தமது பணியகத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டிருந்தார்.
அவரது அந்தக் கருத்துக்கு ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனும், ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆக, மேற்குலகமும் ,ஐ.நா வும் ,இலங்கை தொடர்பாக மேற்கொள்ளும் விசாரணைகளில் அரசாங்கத்தின் தலையீடுகள், குறுக்கீடுகள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இவை எல்லாக் காலங்களிலும் வெறும் அறிக்கைகளாகவோ கண்டனங்களாகவோ மட்டும் இருந்து விடாது.
இது போன்ற பாதகமான சர்வதேச சூழலை முறியடிப்பதற்கு, தேர்தல் வெற்றி ஒன்றை முன்னிறுத்த முனைகிறது அரசாங்கம்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின் முடிவில், இந்தக் காரணிக்கும் ஒரு பங்கு இருந்தாலும், அது எந்தளவு என்பது அரசுக்கே தெரிந்த இரகசியம்.
இத்தகைய கட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலை அரசாங்கம் எந்தளவுக்கு சர்வதேச கவசமாகப் பயன்படுத்தக் கொள்ள எத்தனிக்கிறதோ, அது போலவே வெளிநாடுகளும் ,இந்த தேர்தலை தமக்குச் சார்பானதொன்றாக மாற்றவே முயற்சிக்கும்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்காவும் மேற்குலகமும் முயற்சிப்பதாக ,அரசாங்கம் நீண்ட காலமாகவே, ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.
அரசாங்கத்துக்கு எதிரான வெளிநாட்டு சதி, சூழ்ச்சி என்பன போன்ற வார்ததைகள், அரசாங்கத் தரப்பினரால் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.
குறிப்பாக தற்போதைய அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசனை இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தி அரசாங்கம் கடுமையாகவே விமர்சித்து வந்தது.
ஆட்சி மாற்றத்துக்காக எதிர்க்கட்சிக்கு அமெரிக்கா உதவுவதாக கடுமையான குற்றச்சாட்டுகள் சில மாதங்களுக்கு முன்னர் கூட சுமத்தப்பட்டன.
மிகச் சமீப காலமாக இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எதையும் காணவில்லை.
ஆனாலும், சூசகமான முறையில் அவ்வப்போது, ஆட்சி கவிழ்ப்புக்கு வெளிநாட்டு சக்திகள் முனைவதாக அரசாங்கம் குற்றம் சாட்டத் தவறுவதில்லை.
ஜனாதிபதித் தேர்தலில், அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் முக்கியமான செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த மூன்று நாடுகளும் இலங்கை விவகாரத்தில் அக்கறை கொண்டுள்ளமை என்பதற்கு அப்பால், இலங்கையுடன் நெருக்கமான உறவுகள், தொடர்புகளையும் கொண்டிருக்கின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா ஆதரவளித்திருந்தது.
எந்தவொரு நாடும் தமக்கு தேவையான இன்னொரு நாட்டின் அரசியல் விவகாரங்களில் தலையிடுவது வழக்கமே.
அத்தலையீடுகள் நேரடியானதாகவோ மறைமுகமானதாகவோ இருக்கலாம்.
அரசாங்கம் கூறுவது போன்று இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டியதை அமெரிக்க விரும்புகிறது என்பது உண்மையே.
ஏனென்றால் அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 18வது திருத்தத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளதால், அந்தக் கதவின் வழியே மூன்றாவது முறையும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதை அமெரிக்கா விரும்பாது.
அவரது ஆட்சிக்காலத்தில் சட்டத்தின் ஆட்சி இல்லையென்றும், மனித உரிமைகள் மதிக்கப்படுவதில்லை என்றும், மக்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரம் என்பன ஒடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
அத்துடன் மேற்குலகுடனும், ஐ.நா வுடனும் ஒத்துழைக்காத முரண் போக்கையும் கொண்டிருக்கிறது இந்த அரசாங்கம்.

எனவே .மகிந்த ராஜபக்ச மீண்டும் பதவிக்கு வருவது தமது நலனுக்கும், இலங்கை மக்களின் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே அமெரிக்கா கருதக்கூடும்.
ஏற்கனவே. ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்கா சதி செய்வதாக இலங்கை குற்றம்சாட்டி வந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் அத்தகைய குற்றச்சாட்டுக்கள் இன்னும் வலுப்பெறலாம்.
அதேவேளை, அமெரிக்காவும் தமக்கு இசைவான, இசைந்து நடக்கத்தக்க ஒருவரை ஆதரிக்கலாம், அவருக்காகப் பணத்தைக் கொட்டலாம்.
பிரச்சார யுத்தத்தையும் நடத்தலாம்
அடுத்து, அயல் நாடான இந்தியாவைப் பொறுத்தவரையில், தாம் வெளிநாடுகளில் தேர்தல் விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை, அது அந்த நாட்டு மக்களின் உரிமை என்றே கூறிவரும் நாடு.
ஆனால் இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களில், ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டுள்ளது.
அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் வடக்கு மாகாண சபைத் தேர்தல்.
இந்தியாவின் நெருக்கடியின் பேரில் தான், வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது.
கடந்த வாரம் சென்னையில் வைத்துக் கூட, வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இதனைக் கூறியிருந்தார்.
இதை  இந்தியா மறுக்கவுமில்லை, ஏற்கவுமில்லை.
வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா பிரச்சாரத்துக்காக நிதி கொடுத்ததாக அரசாங்கத்துக்குச் சார்பான ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன.
அதையும் இந்தியா மறுக்கவுமில்லை, ஏற்கவுமில்லை.
ஏற்கனவே இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில், 1988ம் ஆண்டு வடகிழக்கு மாகாண சபைக்கு நடத்தப்பட்ட தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும், 1989ல் ஜனாதிபதி தேர்தலிலும் இந்தியா ஏதோ ஒரு விதத்தில் பங்களித்திருந்தது.
எனவே, இலங்கையின் தேர்தல் விவகாரங்களில் இந்தியா எப்போதுமே தலையிட்டதில்லை என்று கூறுவதற்கில்லை.
அதுபோலவே ,இம்முறை ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்திலும், ஏதோ ஒரு பக்கத்தின் சார்பில் நிற்பதற்கான வாய்ப்புக்களையும், நிராகரிக்க முடியாது.
குறிப்பாக, இலங்கையை தனது நெருங்கிய நட்பு நாடாக இந்தியா கருதினாலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தனது உற்ற நண்பனாகப் பார்க்கும் நிலை இல்லை என்பது உண்மை.
ஏனென்றால் இந்தியாவுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவராக அவர் செயற்படவில்லை.
பல்வேறு காலகட்டங்களில் அவர் இந்தியாவின் பொறுமையைச் சோதிக்கின்ற ஒருவராகவே இருந்து வருகிறார்.
எனவே, தனக்குச் சாதகமான ஒருவரைப் பதவியில் அமர்த்த இந்தியா விரும்பினால் அது ஆச்சரியமான விடயமல்ல.
ஏற்கனவே, இது தொடர்பாக இந்தியா ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அது இந்தியாவின் நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் என்றும் கூறப்பட்டது.
அத்துடன், கொழும்பில் இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, கடந்த 8ம் திகதி, அமைச்சர் ரவூப் ஹக்கீமையும், இரா. சம்பந்தனையும் மூன்று மணி நேரம் சந்தித்துப் பேச்சு நடத்தியிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் யாரை ஆதரிப்பது என்று முடிவெடுக்காத நிலையில் ,இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அதாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்தை அறியவோ தனது கருத்தை இந்தியா வலுப்படுத்தவோ முனைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு, இந்தியாவின் பாதுகாப்பு, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விவகாரம், மீனவர்களின் பிரச்சினை என்று இந்தியாவுக்கும் தற்போதைய இலங்கை அரசுக்கும் பல விடயங்களில் ஒத்துழைப்பில்லாத சூழலே நிலவுகிறது.
இந்தக் கட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு சார்பான ஒருவரை ஆட்சியில் அமர்த்த இந்தியா முனையலாம். அல்லது அந்த முயற்சிகளை ஆதரிக்கலாம்.
அடுத்து சீனாவைப் பொறுத்த வரையில், இப்போது இலங்கையில் எல்லாமே சீனா தான் என்ற நிலை உருவாகிவிட்டது.
பில்லியன் கணக்கான டொலர்களைக் கொட்டி .இலங்கையில் 40ற்கும் அதிகமான திட்டங்களில் முதலீடு செய்துள்ள சீனா, உள்நாட்டு அரசியலில் அவ்வளவு ஆர்வத்தைக் கொண்டிருக்கவில்லை.
ஆனாலும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில், சீனா அப்படி ஒதுங்கியிருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு.
அதற்கு தனது முதலீடுகளை ஆட்சி மாற்றம் பாதிக்குமோ என்ற அச்சமும் ஒரு முக்கியமான காரணம்.
சீனாவுக்கு என்றுமில்லாதளவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஆட்சியாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே இருந்து வருகிறார்.
அவர் ஆட்சியில் நீடித்தால், இலங்கையை இன்னொரு ஹொங்கொங் போல சீனா மாற்றிவிடும்.
அந்தளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமும் ஒத்துழைப்பும் உள்ளது.
ஆனால் எதிரணியைச் சேர்ந்த எவரும் ஆட்சிக்கு வந்தால் அத்தகைய ஒத்துழைப்புக் கிடைக்காது என்று சீனா கருதுவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.
தான் ஆட்சிக்கு வந்தால், சீனாவுடன் சட்டவிரோதமாக செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள் ரத்துச் செய்யப்படும் என்றும், இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் ஐ.தே.க . நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறியிருக்கிறார்.
இது சீனாவுக்குப் பீதியூட்டும் ஒரு செய்தியாகும்.
தனது முதலீடுகளில் புதிய ஆட்சியாளர் கைவைப்பார் என்று தெரிந்தால் நிச்சயம் சீனா பொறுத்துக் கொண்டிருக்காது.
அதுவும் தமக்கு இசைவான ஓர் ஆட்சியாளரைத் தள்ளிவிட்டு மறுதரப்பில் ஒருவர் மேலெழுவதை சீனா அனுமதிக்காது.
உள்நாட்டு அரசியல் விவகாரத்தில் சீனா தலையீடு செய்வதில்லை என்று கூறப்பட்டாலும், இலங்கையில் உருவாகியுள்ள புறச்சூழல் அவ்வாறு சீனா ஒதுக்கியிருக்கத்தக்க நிலையைக் கொண்டிருக்கவில்லை.
எனவே, மஹிந்த ராஜபக்சவைப் பாதுகாக்க சீனா தன்னாலியன்ற வகையில் முயற்சிக்கும் என்றே நம்பப்படுகிறது.
இத்தகைய கட்டத்தில், வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல் என்பது, உள்நாட்டில் வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியாக இருந்தாலும், சர்வதேச விருப்பங்களும் இதில் பிரதிபலிக்கப் போகிறது.
விரல் விட்டு எண்ணத்தக்க வெளிநாடுகள் இந்த தேர்தலில் மறைமுகமாக தமது செல்வாக்குச் செலுத்தும் வாய்ப்புக்கள் உள்ளது.
அதற்கு, இலங்கையின் அமைவிடச் சூழல் மட்டுமன்றி, இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது.
சுபத்ரா
http://www.tamilwin.com/show-RUmszBSaKYku7.html

Geen opmerkingen:

Een reactie posten