dinsdag 11 november 2014

ரணில் மீது மீண்டும் புலி முத்திரை!

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவே ரணில் விக்ரமசிங்கவின் ஐரோப்பிய விஜயம் இடம்பெற்றதாக ஜனாதிபதி பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை அண்மையில் முன்வைத்துள்ளார்.
பொதுபல சேனாவிற்கு ஆதரவான பௌத்த பிக்குகளுக்கு அறநெறிப் பாடசாலை (தஹம்பாசல்) ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் ஒன்று அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் ஐயாயிரம் பௌத்த பிக்குகள் கலந்து கொண்டனர். இந்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுப்போதே ஜனாதிபதி மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
ரணில் விக்ரமசிங்க விடுதலைப் புலிகளின் ஆதரவாளர், அவர் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்து இரண்டு வாரத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கனவான தனித்தமிழ் ஈழத்தை அமைக்கும் நோக்கில் தற்போதும் புலம் பெயர் நாடுகளில் நிதி சேகரிப்பு நடைபெறுகின்றது.
எனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் நான் இருக்கும்வரை ஈழம் என்பது கனவாகவே இருக்கும். அதன் காரணமாகத்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை ரத்துச் செய்ய முயற்சிக்கின்றார்கள்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவி இரத்துச் செய்யப்பட வேண்டியதுதான், ஆனால் அதற்காகப் புலம் பெயர் தமிழர்களினதும், விடுதலைப் புலிகளினதும் தேவைக்காக அதனைச் செய்ய முடியாது.
நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுக்கக் கூடாது, மக்கள் மத்தியில் செல்வாக்கைக் கட்டியெழுப்பி, அதன் மூலமாகவே அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். ஆனால் இன்று நாட்டைக் காட்டிக் கொடுத்து அதிகாரத்துக்கு வரும் நோக்கில் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. அவற்றுக்கு இடமளிக்கக்கூடாது. என்றும் ஜனாதிபதி தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
உண்மையாக புலிகள் மீதான ஐரோப்பியத்  தடை நீக்கத்துக்கும் ரணிலுக்கும் எவ்விதமான சம்மந்தமுமில்லை என்பது உலகறிந்த உண்மை.
ஆனால் ரணில் ஐ.தே.க.சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டால் சிங்கள மக்களிடத்தில் அவர் புலிகள் ஆதரவாளர் என்றும் ஈழ ஆதரவாளர் என்றும் இன்னும் புலிகளுக்கு ஆதரவாகவும் உள்ளார் என்ற நிலைப்பாட்டை உருவாக்கி சிங்கள மக்கிளின் சிங்கள வாக்ளிப்பையும் ஆதரவையும் குறைத்தல் போன்ற மிகவும் சுலபமான மெலிவான தந்திரோபயங்களில் அரசு இறங்கியுள்ளது.
இந்தத் தந்திரங்களில் ஒரு பகுதிதான் புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதியும் இன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என்கின்ற முரளிதரன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒரு உண்மையை உடைத்து விட்டார்.
இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வடகிழக்கிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்திய அமைதிப் படை என்கின்ற ஆக்கிரமிப்புப் படையினர, வடகிழக்கில் தங்கியிருந்த 1987-1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தார்கள் என்றும் பல தமிழர்களைக் கொலை செய்தார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை உடனடியாக மறுத்துள்ள இந்திய படைகளின் அப்போதைய உளவுப் பிரிவுக்குப் பொறுப்பான கேணல் ஹரிகரன், கிழக்கில் முஸ்லிம்கள் மீதான கொலைத் தாக்குதல்கள், பள்ளிவாசல் படுகொலைகள் அத்தனைக்கும் காரணம் கருணாதான் என்றும் இது சம்மந்தமான விசாரணைக்கு கருணா தயாரா என்றும் கேட்டுள்ளார்.
இந்த ஹரிகரன் தற்போது ஒய்வு பெற்றுள்ளார். கருணா சொல்லியுள்ள விடயம் முற்றிலும் உண்மைதான். ஆனால் அரசியல் நோக்கோடு ஐ.தே.க.யை சிங்கள மக்கள் மத்தியில் இருந்து செல்வாக்குக் குறைக்கும் நோக்கோடுதான் கருணா இதைச் சொல்லியுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் புலிகளுக்கு 5000 ஆயுதங்கள் தந்தார் என்றும் பிரேமதாச புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய பின்னர்தான்  புலிகளின் உறுப்பினர் தொகை அதிகரித்தது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தத்தில் ஐ.தே.க. புலிகளை ஊக்குவித்து வளர்த்த கட்சி என்பதை கருணா சொல்லியுள்ளார். ஐ.தே.க தம்மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் மேலும் பல இரகசியங்களை வெளியிடப் போவதாகவும் கருணா எச்சரிக்கை செய்துள்ளார்.
இதேவேளை ஐ.தே.க.யும் கருணா மீதான பல தகவல்களை வெளியிடவுள்ளதாக அறிய வருகின்றது.
எதிர்க்கட்சிகளை உடைக்கவும் அரசாங்கம் வியூகம்
எதிர்க்கட்சிகளை உடைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களை அரசாங்கத்தின் பக்கம் இழுப்பதற்கான வியூகங்களில் ஆளுங்கட்சி இறங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கியமானவர் மங்கள சமரவீர எம்.பி.
மங்களவை அரசின் பக்கம் இழுத்து அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அரசு தனது வெற்றியை இலக்கு வைத்துள்ளது. அரசின் நெருக்குதல் தாங்க முடியாது மங்கள இன்னும் சிங்கப்பூரில்தான் உள்ளார்.
இதன் ஆரம்பக் கட்டமாக ஐ.தே.க மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் அரசாங்கத்தின் சார்பில் பசில் ராஜபக்ஷ பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களில் இருவருக்கு அமைச்சுப் பதவி மற்றும் ஏனையோருக்கு பிரதியமைச்சுப் பதவி என்று ஆசை காட்டப்பட்டுள்ளது.
இதன்போது அமைச்சுப் பதவிக்கு அம்பாறையில் இருவர், திருகோணமலையில் ஒருவரும் கொழும்பில் ஒருவருமாக நான்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கவும் நிந்தவூருக்கு முழு அமைச்சு வழங்கவும் இணக்கம் தெவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
எனினும் தற்போது காங்கிரஸின் சார்பில் அமைச்சராக உள்ள பஷீர் சேகுதாவூது தேசியப் பட்டியல் உறுதிப்பாட்டுடன் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐ.தே.கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு இரண்டு அமைச்சுப் பதவிகள் தொடர்பான வாக்குறுதியை வழங்கப்பட்டுள்ளது. அடுத்து அவர்கள் விரைவில் ஆளுங்கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக சில இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான இணக்கப்பாடும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் முன்னெடுப்பில் சாத்தியப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இவர்கள் கட்சி தாவி அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மீண்டும் புலிகளை தடை செய்ய நடவடிக்கைகள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளை தடை செய்வது தொடர்பில் தகவல்களை வழங்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அரிவித்துள்ளது.
அண்மையில் ஐரோப்பிய பொது நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படுவதாக அறிவித்தது. இதனையடுத்து இலங்கை அரசாங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் சட்ட நிபுணர்களை கொண்டு மீண்டும் விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் வகையிலான மனுதாக்கல் செய்யப்படவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் அல்ல என்ற வகையில் விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு வேண்டிய அனைத்து தகவல்களையும் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளது என்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ரணில் விக்ரமசிங்கவை விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக சித்தரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
எனினும் விடுதலைப் புலிகளுக்கு சார்பான மறைமுக நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவளிக்குமாறு விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களின் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதியும் பல்வேறு நாடுகளுக்கான விஜயத்தின் போது விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் சூழலை உருவாக்க ஏதுவாகும் வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். அதனை ஏற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் அண்மைக்காலமாக வடக்கின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.
மேலும் விடுதலைப் புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் கே.பி. ஊடாக பதினாறு கப்பல்கள் மற்றும் பெருந்தொகைப் பணம் என்பன அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் கிடைத்திருந்தது.
இதனைப் போன்று பன்மடங்கு அதிகமான பணம் மற்றும் சொத்துக்கள் ஐரோப்பிய நாடுகளில் முடக்கப்பட்டிருந்தது. இவற்றைக் கைப்பற்ற விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் விதித்த நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.
அதன் பிரகாரம் ஐரோப்பிய நீதிமன்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான அண்மைய தகவல்களை வழங்காமல் அரசாங்கம் நழுவல் போக்கைக் கடைப்பிடித்திருந்தாக தெரிகிறது.
இந்த வழக்கில் சமர்ப்பிப்பதற்கான ஆவணங்களைத் தருமாறு சில நாடுகள் அந்நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் அவ்வாறான அறிக்கை வழங்கப்படவில்லை.
குறைந்த பட்சம் அண்மைக் காலத்தில் விடுதலைப் புலிகளை மீளக் கட்டியெழுப்ப முனைந்து கொல்லப்பட்ட அப்பன், கோபி சம்பவம், பாரிசில் இடம்பெற்ற கொலைச் சம்பவம், மலேசியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்கள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களை தகர்க்க சதி செய்த வழக்கில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட அருண் செல்வராசன், விடுதலைப் புலி உறுப்பினர்களின் கிரெடிட் கார்ட் மோசடிகள், சட்ட விரோத ஆட்கடத்தல்கள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தால் ஐரோப்பிய ஒன்றியத் தடை நீக்கப்பட்டிருக்கும் என்று ஐ.தே.க. சொல்கின்றது.
எனினும் விடுதலைப் புலிகளின் பொருந்தொகைப் பணத்திற்கு ஆசைப்பட்டு அரசாங்கம் அந்தத் தடையை நீக்குவதற்கு மறைமுகமாக உதவியளித்தது.
அரசாங்கம் நேர்மையுடன் செயற்பட்டிருக்குமானால் விடுதலைப் புலிகளின் மீதான தடை நீடிப்பதனை உறுதி செய்திருக்கலாம் என்று மங்கள சமரவீர சொல்கின்றார்.
ரணிலின் வெற்றி வாய்ப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பொது வேட்பாளருக்குமிடையில் இடையில் பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகின்றது.
அது ரணிலாகட்டும் சஜீத் ஆகட்டும் அல்லது முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணியாட்டும்.
கடந்த இரண்டு தேர்தல்களை போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை வெற்றியைப் பெறக்கூடிய வாய்ப்பு இல்லையென்றுதான் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்படி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் முறை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டுமானால் அவருக்கு 50.1 வீத வாக்குகள் அவசியம்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள 11 மில்லியன் வாக்களார்களில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற வேண்டுமானால் சிங்கள பௌத்த வாக்காளர்களான 74 வீத வாக்காளர்களில் (8 மில்லியன் வாக்காளர்கள்) இருந்து 5.5 மில்லியன் வாக்குகளைப் பெற வேண்டும்.
எனினும் பொதுபல சேனாவுடன் இணைந்து செயற்படுவதால் இது சாத்தியமானதல்ல என்று கருதப்படுகின்றது. 2005 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில் ரணில் விக்ரமசிங்க 4.7 மில்லியன் வாக்குகளைப் பெற்றார்.
எனவே ஐ.தே.க வுக்கு அடிப்படையில் 4 மில்லியன் வாக்குகள் உள்ளன. அத்துடன் சிறுபான்மையினரின் வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷவைக் காட்டிலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தவரையில் 26 வீத வாக்காளர்கள் (3 மில்லியன் வாக்காளர்கள்) சிறுபான்மையினராக உள்ளனர். இதில் 1.5 வீதமானோர் வாக்களித்தாலே ரணில் விக்ரமசிங்கவுக்கு 5.5 மில்லியன் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் சிறுபான்மை மக்களின் பெறுவதென்பது இலகுவானதாக  இருக்காது.
சிங்கள மக்களை உசுப்பேற்றி சிங்கள மக்களின் வாக்குகள் மூலம் மீண்டும் மூன்றாவது முறையாக தான் ஜனாதிபதியாகலாம் என்று நினைக்கும் மஹிந்தர் இம்முறையும் தமிழர்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதியாக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காது தேர்தலைப் புறக்கணித்து விட்டதனால்தான் ஜனாதிபதியானார். இப்போதும் தமிழ் மக்கள் அரசுக்கு வாக்களிக் வேண்டும் அல்லது கடந்த ஜனாதிபதித் தேர்தல் போன்று இம்முறையும் வாக்களிப்பைத் தவிர்க்க வேண்டும்.
ஆக ஜனாதிபதி எட்டி எட்டி உதைக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் தனது வெற்றிக்குத் தேவைப்படுகின்து. இம்முறையும் சிறுபான்மை மக்கள்தான் ஜனாதிபதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகள்தான் ஒட்டுமொத்த வெற்றியைத் தீர்மானிக்கவுள்ளது.
இந்த வகையில்தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசு தரப்பு வேட்பாளரான ஜனதிபதி மஹிந்தவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று அரசின் சார்பாக அமைச்சர் பசில் ராஜபக்ச பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனாலும் அரசு கருணாவைக் கொண்டு ஐ.தே.க மீது பலவகையான தாக்குதல்களை தொடுக்கத் தீர்மானித்துள்ளது. அதையெல்லாம் சிங்கள மக்கள் கணக்கில் எடுப்பார்களா என்பது வேறு கணக்கு. ஆனால் ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் புலிகள் எழுச்சி பெறுவார்கள் என்ற புரளியை அரசு எடுத்து விடவுள்ளது.
சுகல வளங்களையும் கொண்டுள்ள மஹிந்தவை எதிர்த்து நிற்கக் கூடிய வலிமையான எதிர்க்கட்சியொன்று நாட்டில் இல்லை.சிங்கள மக்களிடத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் நிறையக் காணப்படுகின்றது.
அந்த மாற்றங்களை அறுவடை செய்யக் கூடியவர்களாக ரணிலோ அல்லது சஜீத் பிரேமதாசவோ உள்ளார்களா என்பது பெருத்த கேள்வியாகும். மஹிந்தவுக்குப் போட்டியாக நிற்கக் கூடிய ஒருவர் இன்னும் எதிர்க்கட்சிகளால் கொண்டு வர முடிவில்லை. இன்னும் தடுமாற்றத்தில்தான் எதிர்க்கட்சிகள் உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பொதுவேட்பாளர் தெரிவில் இருந்து விலகுவதாகத் தெரிகிறது. ரணிலுக்கு கட்சிக்கள் இருந்தும் பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் இல்லாத காரணத்தால் அவரும் பின்வாங்கி விடுவதாகவுள்ளது.
ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாது போனால் தான் போட்டியிடுகின்றேன் என்று சஜீத் அறிவித்துள்ளார். அப்படியானால் இருக்கும் ஒரே தெரிவு ஷிராணி பண்டார நாயக்கதான். அவவுக்கு இந்த வாய்ப்பை ஐ.தே.க உட்பட ஏனைய கட்சிகள் வழங்குமா அப்படி வழங்கப்பட்டால் ரணில் உட்பட சஜீத்தின் ஆதரவுகள் கிடைக்குமா? இப்படியான நிலைகள் உள்ளதால் மஹிந்தருக்கு மீண்டும் மூன்றாவது முறையும் வெல்லக் கூடிய அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்பவர் ஆளும் அரசின் கூட்டுக்குள் ஊடுருவிப் புகுந்து அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து தற்போது மகிந்தர் மீது அதிருப்தி கொண்டுள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களை தன்வசம் கொண்டு வந்து வெற்றி பெறும் வல்லமை கொண்டவராக இருக்க வேண்டும்.
நாடு முழுவதும் ஐ.தே.க.யின் செல்வாக்குக் குன்றாமல் குறையாமல் உள்ளது. ஐ.தே.க.யின் வாக்குகளுடன் ஆளும் தரப்பில் இருந்து பலரை இழுத்து வந்து விட்டால் அரசு ஆட்டம் கண்டு விடும்.
இந்த வல்லமை சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் சந்திரிக்காவுக்கு மிகவும் நெருக்கமானவரும் தற்போதைய ஐ.தே.க.யின் எம்.பியும்.தற்போது ஜனாதிபதி தனது நேரடிக் கண்காணிப்பில் அரசுக்குள்  அமைச்சு கொடுத்து இழுக்கப் பார்க்கும் மங்கள சமரவீரவைத்தான் சொல்ல முடியும்.
மங்கள அரசுக்குள் வந்து விட்டால் தான் சுரபமாக வெல்ல முடியும் என்ற கணக்கில் மகிந்தர் உள்ளாராம். மஹிந்தாக் கம்பனியை ஏற்கனவே முட்டி மோதிவரும் மங்கள ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால் சிங்கள மக்கள் மத்தியில் நல்ல எடுப்பாகவும் மகிந்தரை எதிர்க்கக் கூடிய பொருத்தமானவர் என்ற தகுதியும் உள்ளது.
மகிந்தவிடம் ஏதோ ஒரு தகுதி உள்ளது என்பதால்தானே மங்களவை அரசுக்குள் இழுக்க மும்முரமாக ஜனாதிபதி விரும்புகின்றார்.ஏற்கனவே மங்கள சந்திரிகாவையும் மகிந்தவையும் வெல்ல வைக்கப் பெரும் பாடுபட்டவர் என்ற வரலாறு உள்ளது.
ஆனால் மங்களவை ஐ.தே.க விரும்புமா? அதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமா? எவ்விதமான அரசியல் அனுபவமும் அற்ற ஷிராணியை விட மிகவும் பொருத்தமானவர் மங்கள என்பதை அறிந்தால் எதிர்க்கட்சிகள் தேடும் பொது வேட்பாளர் மங்கள என்பதை உறுதியாச் சொல்ல முடியும்.
இல்லாது போனால் மகிந்தரின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது. இதன் பின்பு ஐ.தே.க.யும் இருக்காது எதிர் கட்சியும் இருக்காது.
எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnt1.html

Geen opmerkingen:

Een reactie posten