maandag 17 november 2014

அத்துரலிய ரத்ன தேரர் பதவியிலிருந்து விலகல்- அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா? இன்று முடிவு!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பகிரங்கமாக வெளியிட ஜனாதிபதி திட்டம்?
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 02:17.35 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கருத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முக்கிய அதிகாரியொருவர் மூலம் இது தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அண்மையில் கேட்டுப் பெற்றிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் கருத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்று ஆளுங்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
எனினும் எதிர்க்கட்சியினர் இது தொடர்பில் இன்னும் விமர்சித்துக் கொண்டிருந்தனர்.
எனவே எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கவும், பொதுமக்கள் மத்தியில் நிலவும் சந்தேகத்தைப் போக்கி ஆதரவை அதிகரித்துக் கொள்ளவும் உச்ச நீதிமன்றக் கருத்துக்களை பகிரங்கப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjo3.html
கரு ஜயசூரிய பொதுவேட்பாளராக வந்தால் நானே தோற்கடிப்பேன்!- உபேக்ஷாவின் திமிர்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 02:26.55 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் சார்பில் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டால் அவரைத் தோற்கடிக்க தான் மட்டுமே போதும் என்று உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க. விலிருந்து ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி இது தொடர்பாக ஊடகங்களுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கரு ஜயசூரியவை அறுபதினாயிரம் வாக்குகளையும் நான் எண்பத்தோராயிரம் அளவிலான வாக்குகளையும் பெற்றுள்ளோம்.
அந்த வகையில் கம்பஹா மாவட்டத்திலேயே நான் அவரைவிட அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளேன்.
அதுவும் முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட போது எனக்கு இந்தளவு வாக்குகள் கிடைத்துள்ளது.
இப்படிப்பட்ட ஒருவரை பொது வேட்பாளராக களமிறக்கினால் அவரை எதிர்த்துப் போட்டியிட நான் தயார்.
நாடு முழுவதும் அவரை கூடுதலான வாக்குகளை என்னால் பெற முடியும்.
அப்படியிருக்க இவர்கள் எப்படி ஜனாதிபதிக்கு எதிராக வெற்றிபெற முடியும் என்றும் உபேக்ஷா சுவர்ணமாலி கேள்வியெழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjo4.html
இலங்கையின் மிகச்சிறந்த கட்டிடக் கலைஞராக யாழ். வாலிபர் தெரிவு!
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 02:43.31 AM GMT ]
இலங்கையின் மிகச்சிறந்த கட்டிடக் கலைஞராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கையின் சிறந்த கட்டிடக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
மஹாபிமாணி - 2014 என்ற தலைப்பில் கொழும்பு, மகரகம தேசிய இளைஞர் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.
இதன் போது யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவர் இலங்கையின் மிகச்சிறந்த கட்டிட நிர்மாணக் கலைஞருக்கான விருதைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இவர் கடந்த 2012ம் ஆண்டு கட்டிட நிர்மாணக் கலை தொடர்பில் பயிற்சிகளை பெற்றுக் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjo5.html
அமைச்சர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட உள்ளது
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 03:48.40 AM GMT ]
அமைச்சர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட உள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
பல அமைச்சர்களின் பாதுகாப்பை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ராஜபக்ஷ குடும்பத்தாருடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்ட அமைச்சர்களின் பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அழுத்தம் கொடுப்பதன் மூலம் குறித்த அமைச்சர்களை மீளவும் ஜனாதிபதியின் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் திட்டமாகவே இவ்வாறு பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன மற்றும் மேர்வின் சில்வா உள்ளிட்ட பல அமைச்சர்களின் பாதுகாப்பு இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjo7.html
ஆயுர்வேத வைத்தியர்கள் கஞ்சா செடி வளர்க்க அனுமதி: ஹொரோயின் போதைப் பொருளுடன் பஸ் நடத்துனர் கைது
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 03:57.25 AM GMT ]
பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத வைத்தியர்கள் சில கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதியளிக்கப்பட உள்ளது.
இலங்கையில் கஞ்சா செய்கை தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கஞ்சா செடிகளை வளர்ப்பது மற்றும் வைத்திருத்தல் விநியோகம் செய்தல் என்பன தண்டனைக்குரிய குற்ற செயலாகும்.
எனினும் மருத்துவ நோக்கில் கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஆயுர்வேத வைத்தியர்கள் கோரி வந்தனர்.
இந்த யோசனையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி மருத்துவ நோக்கங்களுக்காக ஒரு சில கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு ஆயுர்வேத வைத்தியர்களுக்கு அனுமதியளிக்கப்படும் வகையிலான சட்ட மூலமொன்று விரைவில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த தகவலை சுதேச வைத்திய அமைச்சர் சாலிந்த திசாநாயக்க அண்மையில் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
இலங்கையில் 62 மசாஜ் பார்லர்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாடு முழுவதிலும் 3000த்திற்கும் மேற்பட்ட பார்லர்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மசாஜ் பார்லர்களை கட்டுப்படுத்தவும் விரைவில் நாடாளுமன்றில் சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹொரோயின் போதைப் பொருளுடன் பஸ் நடத்துனர் கைது
ஹெரோயின் போதைபொருள் 2 பக்கட்களை பயணசீட்டு புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த அட்டன் டிப்போ நடத்துனரை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி சென்ற அட்டன் டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸின் நடத்துனர் ஞாயிற்று கிழமை இரவு 10 மணியளவில் அட்டன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த தகவலின் படி விரைந்து சென்று பொலிஸார் விசாரணைக்குட்படுத்தும் போது இவ்வாறு நடத்துனர் போதைபொருள் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான நடத்துனர் கொழும்பிலிருந்து அட்டன் பகுதிக்கு இந்த போதைபொருளை விற்பனை செய்வதற்காக கொண்டு வருவதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்த சந்தேக நபரை 17.11.2014 அன்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjpy.html
அத்துரலிய ரத்ன தேரர் பதவியிலிருந்து விலகல்- அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா? இன்று முடிவு
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 05:22.36 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தனது பதவியில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திவுலபிடிய பிரதேச அபிவிருத்தி சபை பதவியிலிருந்தே அவர் விலகிக்கொள்ள தீர்மானித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனத்தையும் திருப்பி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா? ஜாதிக ஹெல உறுமய இன்று முடிவு
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கவுள்ளதாக ஜாதிக்க ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.
இன்று நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சியின் தவிசாளர் அத்துரலியே ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சியின் யோசனைத்திட்டம் தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கொண்டுள்ள நிலைப்பாடு ஏற்கனவே தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக ஜாதிக்க ஹெல உறுமயவின் யோசனைகளை செயற்படுத்த முடியாது என அவர்கள் மிகவும் தெளிவாக கூறியுள்ளதாக அத்துரலியே ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தின்போது அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா அல்லது வெளியேறுவதா என்பது தொடர்பாக தீர்மானிக்கவுள்ளதாக தேரர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjpz.html

Geen opmerkingen:

Een reactie posten