zaterdag 15 november 2014

மட்டக்களப்பில் மதுபானசாலை உரிமையாளர் கிராம சேவையாளர் மீது தாக்குதல்: பணி புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

விக்னேஸ்வரன் யார்? இத்தனை நாட்கள் எங்கிருந்தார்? சீமான் காட்டம்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 07:17.57 AM GMT ]
ஐயா விக்னேஸ்வரன் யார்? இவ்வளவு காலமும் அவர் எங்கிருந்தார்? என்று சீமான் இந்தியா தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கேள்வியெழுப்பியுள்ளார்.
 நேர்காணலில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இந்த ஈழ போராட்டம் எத்தனை காலமாக இடம்பெற்று வருகின்றது என ஐயா விக்னேஸ்வரனுக்கு தெரியுமா?
விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு வந்திருந்த போது இந்திய மக்கள் செய்யும் நடவடிக்கைகள் காரணமாக தங்களுக்கு நெருக்கடி வந்துள்ளதாக தெரிவித்திருக்கும் கருத்து வேதனை அளிக்கின்றது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 60 வருடங்களாக போராட்டம் நடந்து வருகின்றது. இதில் எதிலாவது இவருக்கு பங்கு உண்டா? உதாரணமாக சொல்ல போனால் அரசியல் போராட்டமாக இருக்கட்டும் இல்லை, ஆயுதப் போராட்டமாக இருக்கட்டும். அப்போது எங்கே போய் இருந்தார் விக்னேஸ்வரன்.
இறுதிக் கட்டப் போரில் கூட எந்தவிதமான நன்மைகளும் தமிழ் மக்களுக்கு செய்யவில்லை. ஒரு கடிதம் கூட வெளிநாடுகளுக்கு இவர் எழுதவில்லை. இவருக்கு எப்படி தெரியும் போராட்டம் என்றால் என்ன என்று?
ஐயாவிற்கு தெரிந்தது கோவில் வாசலும், நீதிமன்ற வாசலும்தான் வேறு ஒன்றும் இவருக்கு தெரியாது.
இதில் உண்மை என்னவென்றால் இலங்கையில் தனது மண்ணுக்காக போராடிய போராளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கொடுத்தது, ஐயா மட்டும் தான் அது போன்று அதிக பேரை சிறையில் தள்ளியதும் ஐயா தான் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlw6.html
மன்னாரில் முன்னாள் போராளியான 5 பிள்ளைகளின் தந்தை ரி.ஐ.டியால் கைது
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 07:28.53 AM GMT ]
மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றய தினம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக சென்றுவிட்டு திரும்பிய வேளையிலேயே இவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான ஐந்து பிள்ளைகளின் தந்தையான தங்கத்துரை ஜெயின்ஸ் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. கைதானவர் வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அவரது மனைவி தெரிவிக்கையில்,
தனது கணவருக்கு மன்னார் நீதிமன்றத்தில் பிறிதொரு வழக்கு விசாரணை ஒன்று இடம் பெற்று வருகின்றது. குறித்த வழக்கு விசாரணைக்காக அவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்காக நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த போது வெளியில் காத்து நின்ற பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் அவரை கைது செய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தனது கணவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும்,அவருக்கு புனர்வாழ்வு வழங்க வேண்டும் என கைது செய்த பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் தொலைபேசியில் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.
தனது கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பே புலி இயக்கத்தில் இணைந்திருந்தார். பின் திருமணம் முடித்து தற்போது குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வரும் நிலையிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlw7.html
மூன்று நாட்களில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான செய்தி: டலஸ்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 07:46.12 AM GMT ]
எதிர்வரும் மூன்று நாட்களில் ஜனாதிபதித் தேர்தலொன்று தொடர்பிலான முதலாவது செய்தியை வழங்குவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான அறிவித்தல் விடுக்கப்பட்டு 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்ட அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் மாதத்தின் முதலிரண்டு வாரங்களில் ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlxy.html
நந்தன குணதிலக ராஜினாமா: கொண்டாடி மகிழும் ஆளுங்கட்சி வர்த்தகர்கள்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 07:49.54 AM GMT ]
பாணந்துறை நகர சபைத் தலைவர் நந்தன குணதிலகவின் ராஜினாமா குறித்து பிரதேச வர்த்தகர்கள் இன்று கொண்டாட்ட பேரணி நடத்தியுள்ளனர்.
நந்தன குணதிலக நகர சபை தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ள பாணந்துறை வர்த்தகர்கள் அவர் குறித்து கடும் விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.
நந்தன குணதிலக நகர சபை தலைவராக இருந்த காலப்பகுதியில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடை பாதை வர்த்தகத்தில் ஈடுபட தடை விதித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் அவர் பதவி விலகிய சந்தோசத்தில் நடைபாதை வர்த்தகர்கள் பேரணியாக சென்று நகர சபையின் முன்னாள் நந்தன குணதிலகவின் உருவ பொம்மை ஒன்றையும் எரித்துள்ளார்கள்.
இந்த ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் களுத்துறை மாவட்ட அமைச்சர் ஒருவர் இருப்பதாக கூறப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlxz.html

மட்டக்களப்பில் மதுபானசாலை உரிமையாளர் கிராம சேவையாளர் மீது தாக்குதல்: பணி புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 08:15.23 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் கிராம சேவையாளர் ஒருவர் மதுபானசாலை உரிமையாளரினால் தாக்கப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் தொடர்ச்சியான பணி புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக மண்முனை பகுதியில் கடமையாற்றும் கிராம சேவையாளர்கள் அறிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சேவையாற்றும் கிராம சேவையாளர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பாக கிராம சேவை உத்தியோகத்தர்களினால் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிக்குமாறு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மண்முனை வடக்கு பிரதேச உதவி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாண்டவன்வெளி கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் தனது மேலதிக கல்வி நடவடிக்கைக்காக" மதுபாவனையால் ஏற்படும் சமூக, உளவியல் பிரச்சினை" எனும் விடயம் தொடர்பில் கூழாவடியில் உள்ள மதுபானசாலையை புகைப்படம் எடுப்பதற்காக சென்று தான் ஒரு கிராம உத்தியோகத்தரெனவும் தனது மேற்படி கல்வி நடவடிக்கைக்கான ஒப்படைக்காக தங்களது மதுபானசாலையை புகைப்படம் எடுப்பதற்கு அனுமதிக்குமாறு கேட்கப்பட்ட போது அவரால் அனுமதி வழங்கப்பட்ட பின் புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், அன்றைய தினம் பிற்பகல் குறித்த கிராம உத்தியோகத்தரை மதுபானசாலை உரிமையாளர் தனது இல்லம் வருமாறு அழைத்தபோது அவர் செல்லாத காரணத்தால் அதே தினம் கடமை நிமித்தம் அவ்வழியால் சென்ற கிராம உத்தியோகத்தரை மதுபானசாலை ஊழியர் வழிமறித்து மதுபானசாலை உரிமையாளரின் வீட்டுக்கு அழைத்து சென்று குறித்த உத்தியோகத்தரை தாக்கியதோடு அச்சுறுத்தபட்டதாகவும் கிராம சேவையாளர்கள் தெரிவித்தனர்.
தாக்கப்பட்ட உத்தியோகத்தர் புதிதாக சேவையில் இணைக்கப்பட்டவர் எனவும்,  குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதிலும் இவ்விடயம் தொடர்பில் எதுவித பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும்,  இனிவருங்காலங்களில் கிராம உத்தியோகத்தர்கள் தங்கள் பிரிவில் அச்சமின்றி வெளிக்கள கடமையில் ஈடுபடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் அனைவரும் பணி புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் மண்முனை வடக்கு பிரதேச கிராம சேவகர் அலுவலக பிரிவினால் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மாவட்ட செயலாளருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
கிராம சேவையாளர்களின் பணி புறக்கணிப்பால் தமது தேவைகள் நிமித்தம் கிராம சேவையாளரை சந்திக்க வருகை தந்த பொது மக்கள் நேற்றைய தினம் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 16.11.2014 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlx0.html

Geen opmerkingen:

Een reactie posten