maandag 17 november 2014

மன்னாரில் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார் !

மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய நிலையிலேயே பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய தங்கத்துரை ஜெயின்ஸ் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
20 வருடங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த ஜெயின்சினது கைது தொடர்பில் பயங்கரவாத தடுப்புப் புலனாய்வு பிரிவு பொலிசார் தனக்கு துண்டொன்றையும் தந்துள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். தனது கணவருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும், அந்த வழக்கு விசாரணைக்காக அவர் நேற்றுக் காலை மன்னார் நீதிமன்றத்திற்கு சென்று, விசாரணை நிறைவடைந்து வீடு திரும்புவதற்காக நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த போது வெளியில் நின்றுக்கொண்டிருந்த பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் அவரை கைது செய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனது கணவரை கைது செய்துள்ளதாகவும், அவருக்கு புனர்வாழ்வு வழங்க வேண்டும் என தனது கணவரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாகவும் கைதுசெய்யப்பட்டவரின் மனைவி தெரிவித்தார். எனினும் தனது கணவர் 20 வருடங்களுக்கு முன்பே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தார் என்றும், பின்னர் திருமணம் முடித்து குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை வடக்கில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் குறித்த விபரங்களை மீண்டும் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று சேகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1448.html

Geen opmerkingen:

Een reactie posten